நாளை அதிகாலை 3 மணிக்கு மயூரனுக்கும் சானுக்கும் மரணதண்டனை: இந்தோனேசியா உறுதிப்படுத்தியது
இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக இன்று நள்ளிரவுக்கு பின்னர் அதிகாலை 3 மணிக்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்று இந்தோனேசியாவின் சட்ட மா அதிபர் எச். எம் . பிரசிடோ சற்று முன்னர் உறுதிப்படுத்தியுளார்.
இவர்களின் மரணதண்டனையை ரத்துச் செய்ய வேண்டிய அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் உதாசீனப்படுத்தி இவர்களது மரண தண்டனையை இந்தோனேசியா உறுதிப்படுத்தி இருக்கின்றமையை அடுத்து அதன் எதிரொலியாக அவுஸ்திரேலிய அரசு அந்தநாட்டுக்கான தனது தூதுவரை உடனடியாக வாபஸ் பெற்றுள்ளது.
2005 ஆம் ஆண்டு 8.3 கிலோ கிராம் போதைப்பொருளை கடத்தினார்கள் என்ற குற்றத்துக்காக இவர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்களானால் அதற்கான விளைவுகள் இந்தோனேசியாவுக்கு இருக்கும் என்று நேற்று அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் ஜுலி பிஷப் எச்சரித்திருந்தார். இவர்களது மரண தண்டனையை ரத்துசெய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியமும் கோரிக்கை விடுத்திருக்கிறது.





