செய்திகள்

இன , மதங்களிடையே ஒற்றுமையை வலியுறுத்திய ஞானசார தேரர்

இன மதங்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஆள்வதற்கு நாம் நினைக்கவில்லை. அனைவரும் இந்த நாட்டில் இன, மத பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மங்களராம விகாரையிக்கு நேற்று விஜயம் செய்த, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார மற்றும் மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன ஆகிய தேரர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே, ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக எல்லைக் கிராமங்களிலுள்ள சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் நாம் நீதி அமைச்சருக்கும் அரசாங்கத்துக்கும் எடுத்துக் கூறி வருகின்றோம். இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல அனைத்து மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன என்பதையும் நாம் அறிவோம்.
இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பாடுபட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகப் பாடுபடுகின்றார் என்பதை நாங்கள் உணர்கின்றோம். இந்த நல்லிணக்கத்திற்கு நாங்கள் என்றும் தடையானவர்களல்ல. இந்த இன நல்லிணக்கத்திற்கு முயற்சிக்கு நாம் என்றும் ஆதரவினை தெரிவிப்போம். எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார். -(3)