இயற்கை சூழலை பாதுகாக்க மோட்டர் சைக்கிளில் இலங்கையை சுற்றி வந்த வடக்கின் இரு தமிழ் இளைஞர்கள்!
-கே.வாசு-
இன்று நாம் வாழும் சூழல் மனித நடவடிக்கைகள் காரணமாக மாற்றத்துக்குள்ளாகி காலநிலை, இயற்கை சமனிலை என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுதித்தியுள்ளது. ஒவ்வொரு நாடுகளும் நீடித்து நிற்கக் கூடிய அபிவிருத்தி தொடர்பாக தற்போது கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் எமது நாட்டிலும் இரு இளைஞர்கள் இயற்கை சூழல் தொடர்பாக கவனம் செலுத்தி அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கருதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இலங்கையை சுற்றி வந்துள்ளார்கள். வடக்கின், வவுனியாவைச் சேர்ந்த மங்களராஜா இமையவன், தர்மலிங்கம் பிரதாபன் ஆகிய இரு இளைஞர்களே மோட்டர் சைக்கிள் ஒன்றில் 39 மணித்தியாலயத்தில் இங்கையை சுற்றி வந்துள்ளனர். இன்று பல இளைஞர்கள் பொறுப்பற்றவர்களாக இருக்க இவர்களுக்கு இந்த சிந்தனை ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பில் மங்களராஜா இமையவன் என்ற 29 வயது இளைஞன் சமகளம் இணையத்துடன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
இன்று எமது நாட்டில் காலநிலை மாற்றங்களும் வரட்சியும் அதிகரித்து விட்டது. முன்னர் ஒரு காலத்தில் எமது வீதிகளில் மழை நீர் மேவி பாயும். ஆனால் இன்று அதனை காணமுடியவில்லை. தாழமுக்கம் ஏற்படுகின்ற காலங்களில் மட்டும் தான் மழை அதிகமாகவுள்ளது. மற்றைய காலங்களில் அவ்வாறு இல்லை. இதனால் வரட்சி அதிகரித்து விவசாயத்தை கூட ஒழுங்காக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் நான் லீசிங் கம்பனி ஒன்றில் வேலை செய்தேன். அப்போது பல விவசாயிகள் அந்தக் கம்பனியிடம் உழவு இயந்திரம், அருவி வெட்டும் இயந்திரம் என பல வாகனங்களை விவசாயத்தை நம்பி கொள்வனவு செய்தார்கள். ஆனால் அந்த வாகனங்களுக்குரிய லீசிங் பணத்தை அவர்கள் செலுத்த முடியாது அந்த வாகனங்களை மீண்டும் லீசிங் கம்பனிகளிடம் பறிகொடுத்த சம்பவங்கள் அதிகம். இதற்கு காரணம் அவர்களை விவசாயம் கைவிட்டமையே. இது எனது மனதை வெகுவாக பாதித்திருந்தது. மபக்களின் நம்பிக்கையை அந்த விவசாயம் சீர்குலைத்து அவர்களிடம் இருந்த கொஞ்சப் பணத்தை கூட லீசிங் கம்பனியிடம் இழக்கச் செய்திருந்தது. விவசாய நடவடிக்கைகள் குறைந்தமைக்கு மழைவீழ்ச்சி ஒரு முக்கிய காரணம். இன்று ஒவ்வொரு பகுதியிலும் வேகமாக காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள், நகரமயமாக்கல் என்பன இடம்பெற்று வருகின்றது. இதன் காரணமாக மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது.
ஆரம்ப கால மனிதன் சூழலை பாதிக்காத வகையில் அதனை பாதுக்காத்து தனது கருமங்களை ஆற்றியிருந்தான். ஆனால் இன்று வடக்கில் கூட மூவின மக்களும் தமது இனப்பரப்பலை தக்க வைக்க காடுகளை அழித்து குடியேற்றங்களை அமைப்பதை எமது கண் முன்னால் காண முடிகின்றது. இதை விட, பொலித்தீன் பாவனை, இரசாயன பசளைப் பாவனை, சூழலை மாசுபடுத்தும் செயற்பாடுகள் என்பவற்றை பொறுப்பற்ற வகையில் மனிதன் செய்து வருகின்றான். இவற்றை கட்டுப்படுத்தி இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. ‘நான் எப்படி இந்த உலகத்தை முதல் தடவை பார்த்தேனோ அப்படி மீண்டும் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்காக இந்த சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.
அதற்காக என்ன செய்யலாம் என சிந்ததித்த போதே இலங்கையை சுற்றி வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என முடிவெடுத்தேன். அதன்படி கடந்த ஜீன் மாதம் 18 ஆம் திகதி காலை 5.45 மணியளவில் எனது நண்பனுடன் இணைந்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் இலங்கையை சுற்றி வரப் புறப்பட்டோம். வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்டபினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராஜா ஆகியோர் எம்மை பொன்னாடை போர்த்தி அனுப்பி வைத்தனர். அதுவே எனது வாழ்க்கையில் இதுவரை நான் கண்ட முதலாவது பொன்னாடை. அது என்குள் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற ஒரு உற்சாகத்தை தந்தது. அங்கிருந்து எமது பயணத்தை ஆரம்பித்த நாம் கரையோரம் ஊடாக பயணித்தோம்.
அந்த வகையில், நல்லூர், பூநகரி, மன்னார், புத்தளம், சிலாபம், கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, வெல்லவாய, பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, பரந்தன், நல்லூர் என எமது பயணம் அமைந்திருந்தது. 24 மணித்தியாலயத்திற்குள் இலங்கையை சுற்றி வரவேண்டும் என கருதியிருந்தேன். ஆனால் எம்மால் அப்படி வரமுடியவில்லை. நாம் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கே நல்லூரை மீண்டும் வந்தடைய முடிந்தது. இதன்படி 1320 கிலோ மீற்றர் தூரம் பயணத்தை மேற்கொண்டு 39 மணித்ரியாலங்களில் அதனை முடிந்தோம்.
இந்த சூழல் விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாக பயணிக்கும் போது ஒவ்வொரு இடங்களிலும் வேறுபட்ட சூழல் மாற்றங்களையும், மனித நடவடிக்கைககளையும் அவதானிக்க முடிந்தது. நாம் பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து முடிக்கும் வரை ஒவ்வாரு பதிவுகளையும் எனது முகப்புத்தகத்தில் பதிவு செய்தேன். புகைப்படங்களையும் தரவேற்றினேன். இதனால் என் முகப்புத்தகத்தில் இருந்த எம்மை நேரில் பார்க்காத நண்பர்கள் கூட இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் எம்மை வரவேற்று எமது விழிப்புணர்வு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கினர். மன்னார், கொழும்பு, காலி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் எனது முகப்புத்தக நண்பர்கள் தந்த ஆதரவு என்றும் மறக்க முடியாதவை. அன்றைய விழிப்புணர்வு நடவடிக்கையை ஆரம்பித்தில் இருந்து முடிக்கும் வரை ஒரு மணித்தியாலயம் மட்டுமே தூக்கியிருந்தோம். புத்தளத்திற்கும், வெல்லவாயாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் அதிகாலை 3 மணியளவில் ஒரு மணிநேரம் தூக்கிய பின்னர் எமது பயணத்தை தொடர்ந்து இந்த இலக்கை அடைந்தேன். இன்னும் சூழல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேறு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளேன். நிச்சயமாக ஒவ்வொரு இளைஞர்களும் சிந்திக்க முற்பட்டால் இந்த சூழலை நாம் மாற்றிக் காட்டலாம் என்பதே உண்மை எனத் தெரிவித்தார் இமையவன்.
நிச்சயமாக நாம் வாழும் இந்த சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். சூழல் வளங்களை எதிர்கால சந்ததியும் பயன்படுத்த தக்க வையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். அற்கு இமையவன், பிரதாபன் போன்ற இளைஞர்களின் செயற்பாடு ஒரு முன்னுதாரணம் என்றே கூறலாம்.
N5




