செய்திகள்

இரகசிய கொலைக்குழுவை இயக்கினார் கோத்தபாய

அல்ஜசீரா தமிழில் சமகளம்

பத்திரிகையாளர்களையும் மாற்றுக்கருத்துடையவர்களையும் இலக்குவைப்பதற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் இரகசிய கொலையாளிகள் குழுவை இயக்கினார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவினை கொலை செய்த இரகசிய குழுவிற்கு தலைமை தாங்கினார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் திங்கட்கிழமை மவுன்ட்லவேனியா நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முன்னாள் இராணுவ தளபதி அளித்த வாக்குமூலங்கள் அவரின் நேரடி கட்டுப்பாட்டிற்கு வெளியே இராணுவத்தின் இரகசிய பிரிவொன்று இயங்கியதையும் அதனை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாக காணப்பட்ட கபில கெந்தவிதாரண மூலம் இயக்கியதையும் வெளிப்படுத்தியுள்ளன என சிஜடி அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த இரகசிய பிரிவு இராணுவத்தின் கட்டளைப்பீடத்திற்கு வெளியே செயற்பட்டது இந்த பிரிவே பத்திரிகையாளர்களையும் மாற்றுக்கருத்துள்ளவர்களையும் இலக்குவைத்தது என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சரத்பொன்சேகா முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக 2010 இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

விக்கிரமதுங்கவின் படுகொலை சர்வதேச ரீதியில்கடும் கண்டனங்களை தோற்றுவித்ததுடன் மகிந்தராஜபக்ச காலத்தில் ஊடகங்கள் மீதான வன்முறைகள் குறித்தும் உலகின் கவனத்தை திருப்பியிருந்தது. லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் அவர் சுட்டுக்கொல்லப்படவில்லை மாறாக கூரான ஆயுதங்களால் தாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற மரணவிசாரணைகள்குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து புதிய பரிசோதனைகளிற்காக அவரது உடல் கடந்த செப்டம்பரில் வெளியில் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை திங்கட்கிழமை மவுன்ட்லவேனியா நீதிமன்றம் பொலிஸாரை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்னர் கருத்து தெரிவித்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் லசந்த படுகொலை தொடர்பில் மேலும் பலரை கைதுசெய்வதற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது லசந்தவின் படுகொலைக்கான காரணம் தெளிவாகியுள்ளது நாங்கள் மேலும் பலரை கைதுசெய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். கொல்லப்படுவதற்கு முன்னர் லசந்த விக்கிரமதுங்க கோத்தபாய ராஜபக்ச ஆயுத விற்பனையில் பாரிய மோசடிகளை மேற்கொண்டுள்ளார், ஊழலில் ஈடுபட்டுள்ளார் என குற்றம்சாட்டியிருந்தார்- இது குறித்து நீதிமன்றில் சாட்சியமளிக்கவும் அவர் தயாராகிவந்தார்.

முன்னாள்ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் பல விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்,அவரது 10 வருட ஆட்சிக்காலத்தில் 17 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.  எனினும் அவர்கள் அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருவதுடன் தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளதாககுற்றம் சாட்டியுள்ளனர்.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு நானே பொறுப்பு என்ற கடிதத்துடன் கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட புலனாய்வு அதிகாரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பொலிஸார் அது கொலை என்ற அடிப்படையிலேயே விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.