இரணைமடுக் குளத்தின் அபிவிருத்தி
பா.ஜதுர்சிகா
கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று அடயாளமாகவும் இங்கு வாழுகின்ற தொண்ணூறு வீதமான மக்களின் வாழ்வாதாரமாகவும் காணப்படும் இரணைமடுக்குளமானது கடந்த 1975ம் ஆண்டுக்குப்பின்னரான 30 ஆண்டுகள் எதுவித புனரமைப்பு பணிகளும் இன்றி அதன் கட்டுமானங்கள் யாவும் சிதைவடைந்து மிக ஆபத்தான நிலையில் கானப்பட்டது.
தற்போது இதன் புனரமைப்பு பணிகள் இரண்டாயிரம் மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குளத்தின் புனரமைப்பு பணிகளை விட குளத்தின் கீழ் உள்ள இருபத்தி ஓராயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்விநியோகம் மேற்கொள்ளுகின்ற பிரதான வாய்க்கால்கள் கழிவு வாய்க்கால்கள் மற்றும் விவசாய வீதிகளின் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் இபாட் திட்டத்தின் கீழ் 2890 மில்லியன் ரூபா இலகு கடன் மூலமும் இலங்கை அரசினது 310 மில்லியன் ரூபா நிதியுதவியும் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பெருந்தொகை நிதி செலவிடப்பட்டு வரும் இதன் அபிவிருத்திப் பணிகள் உரிய முறையில் உரிய காலத்தில் நிறைவு செய்யப்படவேண்டும் என்பதே ஏழை விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். வருடாந்தம் பெரும் போகத்தின் ஐம்பத்தி ஒன்பதாயிரம் ஏக்கர் வயல் நிலங்களிலும் சிறுபோகத்தின் போது பதினோராயிரம் தொடக்கம் பதினையாயிரம் ஏக்கர் வரையான நிலங்களிலும் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்;டுவருகின்ற இந்த மாவட்டத்தின்மிக முக்கியமான வளங்களாக இரணைமடுக்குளம் உள்ளிட்ட பாரிய மற்றும் நடுத்தர சிறிய குளங்களே பிரதான வளங்களாகக் காணப்படுகின்றன.
அதாவது காலபோகத்தின் போது இரணைமடுக்குளத்தின் கீழ் சுமார் இருபத்தி ஓராயிரத்து 985 ஏக்கரிலும் கல்மடுக்குளத்தின்கீழ் 3450 ஏக்கரிலும் அக்கராயன்குளத்தின் கீழ் 3417 ஏக்கரிலும் குடமுருட்டிக்குளத்தின் கீழ் 1100 ஏக்கரிலும் கரியாலை நாகபடுவான் குளத்;தின்கீழ் 1505 ஏக்கரிலும் வன்னேரிக்குளத்தின் கீழ் 346 ஏக்கரிலும் புதுமுறிப்புக்குளத்தின் கீழ் 985 ஏக்கரிலும் கனகாம்பிகைக்குளத்தின் கீழ் 260 ஏக்கரிலும் பிரமந்தனாறு குளத்தின் கீழ்602 ஏக்கரிலும் என மேற்படி குளங்களின் கீழ் 33650 ஏக்கர் நெற்செய்கை குளங்களின் கீழும் 25350 ஏக்கர் வரையான நெற் செய்கைகள் இரணைமடுக்குளம் உள்ளிட்ட இக்குளங்களின் கழிவு நீரைப்பயன்படுத்தியும் பருவமழையினையும் நம்பியே இந்த மாவட்டத்தின் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் இரணைமடுக்குளத்தின் கீழ் ஏழாயிரம் வரையான விவசாயக் குடும்பங்கள் நேரடியாக பயன்பெறும் விதத்திலும் 21985 ஏக்கர் நிலப்பரப்பிலும் பயர் செய்கை மேற்கொள்ளும் வகையிலும் இக்குளத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை விட இக்குளத்தின் கீழ்நீர் விநியோகம் மேற்கொள்ள கூடிய விதத்தில் காணப்படும் குமரபுரம் கண்டாவளை கோரக்கன்கட்டு ஆகிய பகுதிகளில் காணப்படும் பயிர் செய்கை நிலங்களுக்கும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்பதும் பலமான கோரிக்கைகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.
இதன் புனரமைப்பு பணிகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத்திணைக்களத்திடம் தொடர்புகொண்டபோது கிளிநொச்சி மாவட்டத்தில் இதயமாக திகழ்கின்ற இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
கடந்த 1975 ம் ஆண்டுக்கு பின் எவ்வித பாரிய புனரமைப்பு வேலைகளும் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையால் மேற்கொள்ளப்பட முடியவில்லை. எனினும் யுத்தத்தின் பின்னர் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளின் விளைவாக இரணைமடு குளத்தின் கீழான 22 கமக்கார அமைப்புக்களும் 7000 ற்கு மேற்பட்ட விவசாயிகளின் இடைவிடாத கோரிக்கையையும் ஏற்று, இலங்கை அரசாங்கம் நிதி வழங்கும் நிறுவனங்களிடம் கேட்டதற்கிணங்க இப்பாரிய திட்டம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு 2016ம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையும் இடைநிறுத்தப்பட்டு வேலைத்திட்டம் முழுமூச்சுடன் நடைபெற்று வருகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினது இலகுகடன் திட்டத்தின் கீழ் குளக்கட்டு 2 அடியால் உயர்த்தி 19 ஆஊஆ நீர் கொள்ளளவை கூட்டுவதற்கான திட்ட வரைபும் அதனுடன் இணைந்த ஏனைய கட்டுமானங்களும் வான், பாலம் அமைப்பு வேலைகளும் திருவையாறு ஏற்று நீர்ப்பாசன வேலைகளும் முன்மொழியப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களும் சுமார் 2000 மில்லியன் பெறுமதியில் நடைபெற்று வருகின்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் ஆறு பொதிகளாக பிரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு 2 வேலைகளும் இந்த ஆண்டு மேலும் 2 வேலைகளும் ஒப்பந்காரரிடம் வழங்கப்பட்டு துரித கதியில் நடைபெறுகின்றன. திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்குரிய அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
2015ம் ஆண்டு காலபோக பயிர்ச்செய்கையின் பின் எஞ்சிய 26அடி நீரின் அளவை படிப்படியாக வெளியேற்றி குளக்கட்டுமன வேலைகள் ஒப்பந்தகாரரால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. எமது இலக்கை அடையக்கூடியதாய் இருந்து வந்தது. எனினும் மண் எடுப்பதில் ஏற்பட்ட தடங்கலும், எதிர்பாராத விதமாக கடந்த மே 15ம் திகதி ஏற்பட்ட பாரிய மழைவீழ்ச்சி காரணமாகவும் நீர்மட்டம் சடுதியாக 12அடியிலிருந்து 28 அடியாக உயர்ந்தமையால் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டது.
எனினும், தற்போது முழுவீச்சில் வேலை நடைபெறுகின்றது. இதற்காக மீண்டும் நீர் வெளிறேற்றப்பட்டு வருவதுடன், வெளிறேற்றப்பட்ட நீரானது கண்டாவளை பகுதியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள பாவிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு சிறுபோக நெற்செய்கை பாதிக்காமல், அனைத்து வேலைகளும் 2017ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்நிறைவு செய்யப்பட்டு இலங்கையிலுள்ள ஏனைய குளங்களுக்கு நிகராகவும், சர்வதேச தரத்திலும் புனரமைக்கப்பட்டு கிளிநொச்சிக்கும், வடமாகாணத்திற்கும் பெருமை சேர்க்கும் குளமாக இரணைமடு நிமிர்ந்து நிற்கும் என்பதில் ஜயமில்லை.
குளக்கட்டு நிர்மாணத்திற்கு சமாந்தரமாக குளத்தின் கீழ் அமைந்திருக்கும் 21, 000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கின்ற பிரதான வாய்க்கால், னு வாய்க்கால், வயல் வாய்க்கால், கழிவு வாய்க்கால் மற்றும் விவசாய வீதிகள் **அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஐகுயுனு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 2890 மில்லியன் இலகு கடனிலும், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 310 மில்லியன் நிதி உதவியுடனும் 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2017 ம் மாசி மாதமளவில் ஒதுக்கப்பட்ட நிதியில் வேலைத்திட்டங்களை நிறைவு செய்யும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது.
இதில் 2013ம் ஆண்டில் 10 வேலைத்திட்டமும் 2014 ம் ஆண்டு 16 வேலைத்திட்டமும் 2015 ம் ஆண்டு 40 வேலைத்திட்டமும் 2016 ம் ஆண்டு 65 வேலைத்திட்டமும் ஒப்பந்தகாரருக்கு கேள்வி மூலம் வழங்கப்பட்டு 2800மில்லியன் அளவிலான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் 33 வேலைத்திட்டங்கள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் 14 வேலைகள் வழங்கப்படவும் உள்ளன.
இதேவேளை குளத்தின் கீழ் உள்ள 21 கமக்கார அமைப்புகளுக்கும் மற்றும் சமூக சார் அமைப்புகளுக்கும் சிறு வேலைகள் வழங்கப்பட்டு அனைத்து வாய்க்கால்களிலும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆண்டு பங்குனி மாதத்திற்கு முன் அனைத்து வேலைகளும் முழுமையாக நிறைவு செய்யும் பொருட்டு செயற்பட்டு வருகின்றது.
மேலும், ஐகுயுனு திட்டத்தின் கீழ் நிர்ப்பாசன கட்டுமானங்களை புனரமைக்கும் அதேவேளை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உற்பத்தி மற்றும் சந்தைபடுத்தலுக்கான திட்ட முன்மொழிவு உள்வாங்கப்பட்டு அதன் பிரகாரம் இரணைமடு குளத்தின் கீழ் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த நெற்பயிர்ச்செய்கைக்கு மாற்றீடாக சிறுபோக காலங்களில் மறுபயிர்ச் செய்கை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கமைய 2014ம் ஆண்டில் 145 ஏக்கர் வயல் நிலப்பரப்பில் நிலக்கடலை, கௌபி, பயறு, சோளம் போன்றன பியிரிடப்பட்டு வெற்றிகரமான அறுவடையினை மேற்கொண்டிருந்தார்கள். அதன் வெற்றி நிகழ்வானது அரசாங்க அதிபர் தலைமையில் வயல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. 2015ம் ஆண்டு ஆதே போன்று மேட்டுநிலங்களில் புதிதாக அறிமுகபடுத்தப்பட்ட சோளம் பயிர்ச்செய்கை இத்திட்டத்தில் கீழ் வெற்றிகரமாக நடைமுறைபடுத்தப்பட்டது.
இந்த ஆண்டு சிறுபோகம் தவற விடப்படுவதை கருத்தில் கொண்டு உடனடியாகவே சிறு பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் எதிர்பாராத மழை காரணமாக முழுமையான அறுவடையை மேற்கொள்ள முடியவில்லை. ஆயினும் விவசாய திணைக்கள உதவியுடன் புதிய நல்ல விவசாய திட்டங்களும், நவீன முறையில் பயிரிடக்கூடிய அன்னாசி, கெக்கரிக்காய் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது.
நீர் முகாமைத்துவத்தினை மேம்படுத்த புதிதாக நீரை அளந்து வழங்கும் ஓர் ஏற்பாடும் அளப்பதற்குரிய கட்டுமானங்களும் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது. புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தும் போது, கிராமம் சார் அமைப்புக்களை பலப்படுத்த அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக பயிற்சி மற்றும் அறிவுரைகளை வழங்குவதற்கான ஓர் செயற்பாடு சமூக வலுவூட்டல் ஊடாகவும், துறை சார் வல்லுனர்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்படுகிறது. இதனூடாக விவசாய மக்கள் அதிக திறன் பெற்றவர்களாகவும், நிறுவனமாக இயங்கக் கூடிய வகையிலும் பயிற்சிகள் வழங்கபடுகின்றது.
இத்திட்டமானது 55வீத நிதி ரீதியிலான அடைவு மட்டத்தை 65வீத பௌதீக அடைவு மட்டத்தினையும் தற்போது எட்டியுள்ளதாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்ட முகாமைத்துவ அலுவலகம் மூலம் அறிய முடிகின்றது. 2017ம் ஆண்டு முடிவில், இரணைமடு திட்டத்தினுடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கு பக்க பலமாக மத்திய அரசாங்கம், வடமாகாண சபை, கிளிநொச்சி மாவட்ட நிர்வாகம், நீர்ப்பாசன திணைக்களம் போன்றவை செயற்பட்டு வருவதுடன் இத்திட்டம் சிறப்பாக நடைபெற இரணைமடு குளத்தின் அருகில் வீற்றிருக்கும் கனகாம்பிகை அம்பாள் அருள் பாலிக்க வேண்டுமென்று அனைவரும் வேண்டும் எனவும் நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்ட இந்த மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம் விவசாயிகள் 2016ம் ஆண்டின் சிறுபோக செய்கைகளை இடைநிறுத்தி குளத்தினை புனரமைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
இதேபோன்று விவசாயிகளின் ஒத்துழைப்புக்கள் உரிய வகையில் இடைக்கின்ற நிலையில் குளத்தின் புனரமைப்பு பணிகளில் சில தடைகள் காணப்பட்டன.
அதாவது அணைக்கட்டுக்கான மண் எடுப்பதற்கான தடைகளை சில திணைக்களங்கள் விதித்து அதன் பணிகளுக்கு இடையூறு விளைவித்தன. இதனைவிட அண்மையில் பெய்த கனமழையும் ஒரு இடையூறாக அமைந்தது. இயற்கையின் இடையூறு என்பதை விட ஏனைய இடையூறுகள் ஏற்படாது இந்த குளத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு உரிய காலங்களில் விவசாயச் செய்கைகளை மேற்கொள்ள வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த மாவட்டத்தின் ஏழை விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பாகும்.




