இராணுவதற்கு ஒரு மாத காலக்கெடு: வடமாகாணம் தழுவிய ரீதியில் இராணுவ முகாம்களுக்கு முன்னால் போராட்டம்!
வடமாகாணத்தில் எமது தொழிலைப் பாதிக்கும் வகையில் இராணுவத்தினரால் நடத்தப்படும் சிகை அலங்கரிப்பு நிலையங்களை மூடுவதற்கு ஒரு மாதகாலக்கெடு வழங்கவுள்ளோம். அதற்குள் மூடப்படாவிட்டால் வடமாகாணத்தின் அனைத்து சிகை அலங்கரிப்பு நிலையங்களையும் காலவரையறையின்றி மூடி இராணுவ முகாம்களுக்கு முன்னாள் போராட்டம் நடத்தப்படும் என வடமாகாண அழகக சங்கத் தலைவர் க.நாகராசா தெரிவித்துள்ளார்.
வவுனியா, புகையிரத வீதியில் உள்ள முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட அழகக சங்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் எமது சிகை அலங்கரிப்பு தொழிலாளர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது தொழில்களை செய்து வருகிறார்கள். வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு தொழில்களை செய்வதால் எமது தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தொழிலாளர்களின் நாளாந்த வாழ்வாதாரப் பிரச்சனை கூட விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இராணுவத்தினர் தாம் நிலைகொண்டுள்ள பகுதிகளில் சிகை அலங்கரிப்பு நிலையங்களை அமைத்துள்ளதுடன் குறைந்த கட்டணத்தில் சிகை அலங்கரிப்பும் செய்து வருகிறார்கள். பொதுவான விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் விசேட விடுமுறை தினங்களில் கூட அவர்கள் தமது நிலையங்களை திறந்துள்ளார்கள். இதனால் எமது வாடிக்கையாளர்கள் அங்கு செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இத் தொழிலை செய்து வரும் எமது தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
வவுனியாவின் பம்பைமடு, ஓமந்தை நாம்பன் குளம், மன்னாரின் மாந்தை கிழக்கு, கிளிநொச்சியின் பூநகரி, கண்டாவளை, மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை அமைத்து பொதுமக்களுக்கும் தொழில் செய்து வருகின்றனர். யாழ் மாவட்டத்திலும் இவ்வாறு இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் இருந்தும் அவர்கள் இவ்வாறு வேலை செய்வதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை. அவர்கள் இராணுவத்திற்கே வேலை செய்கின்றனர். ஆனால் ஏனைய மாவட்டங்களில் இத்தொழிலை அவர்கள் செய்து எமது வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள்.
வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள சிகை அலங்கரிப்பு சங்கங்கள் மூலம் இராணுவத்திற்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியிருக்கின்றோம். பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டாம் என கோரியிருக்கின்றாம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் இத் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்களே தவிர எமக்கு எந்த விமோசனமும் கிடைத்தபாடில்லை. நாங்கள் தனித்து ஒவ்வொரு மாவட்ட சங்களும் பிரிந்து நின்று எதனையும் செய்ய முடியாது. எனவே வடமாகாணத்தின் அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்தி நாங்கள் வடமாகாண அழகக் சங்கத்தை உருவாக்கியிருக்கின்றோம். அந்த சங்கம் ஊடாக இராணுவம் இந்த சிகை அலங்கரிப்பு வேலைகளை நிறுத்துமாறு கோரவுள்ளோம். அவர்களுக்கு ஒரு மாத அவகாசம் கொடுக்கவுள்ளோம். அதற்கு பின்னரும் அவர்கள் மூட வில்லை எனில் நாங்கள் வடமாகாணத்தில் உள்ள அனைத்து சிகை அலங்கரிப்பு நிலையங்களையும் மூடி இராணுவ முகாம்களுக்கு முன்னால் காலவரையறையற்ற போராட்டத்தை நடத்தவுள்ளோம். எங்களின் வாழ்வாதாரத்திற்காக நாம் இப்போராட்டத்தை நடத்த வேண்டிய இக்காட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பில் மாவட்ட மட்ட பிரதிநிதிகள் கூடி இறுதி முடிவெடுப்போம். இன்று வைத்தியர்கள், பஸ்சங்கத்தினர் போராட்டங்கள் நடத்தும் போது பொதுமக்கள் அனைவரும் பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள். வடக்கு, கிழக்கில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களையும் நாம் காலவரையரையற்று நாம் மூடினால் அனைவரும் தாடி வளர்த்து பரதேசிகளாக தான் திரிய வேண்டிவரும். எனவே, அனைத்து சமூகஙகளுக்கு அறைகூவல் விடுகின்றோம். எமது வாழ்வாதார பிரச்சனையை தீர்க்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, இப் பொதுக் கூட்டத்தில் கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர், வடக்கு மாகாணத்திற்குட்பட்ட அழகக சங்க உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட சிகை அலங்கரிப்பு தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

N5




