இராணுவத்துடன் பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சம்பந்தன். இது கூட்டமைப்பின் பலமா – பலவீனமா?
யதீந்திரா
சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் இராணுவத் தலைமைப் பீடத்திற்கும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்தது. இராணுவத்தின் வசமுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் போது ஒரு இராணுத் தலைமைப்பீடம் எவ்வாறு பதிலளிக்குமோ அவ்வாறானதொரு அவர்கள் வழங்கியிருக்கின்றனர். அதாவது, மக்களின் காணிகளை தாம் ஆக்கிரமித்திருக்கவில்லை மேலும் அதற்கான அதிகாரமும் தமக்கில்லை ஆனால், அரசாங்கம் உத்தரவிட்டால் தாம் காணிகளை விட்டு வெளியேறுவோம். இராணுவத்தின் பதில் ஆச்சரியமானதல்ல. இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத் தரப்புக்களுடனும் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அங்கும் இராணுவம் இவ்வாறானதொரு பதிலைத்தான் வழங்கும்.
இலங்கையின் வரலாற்றில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் விவகாரமொன்றை தீர்ப்பதற்காக, இராணுவத் தலைமையத்திற்கு சென்று, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். அதிலும் சம்பந்தன் வெறுமனே ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல மாறாக தமிழ்த் தேசிய இனத்தை பிரதிநிதித்துவம் செய்துவரும் கூட்டமைப்பின் தலைவரும் கூட. தமிழ் மக்களின் தலைமை என்னும் வகையில் இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதானது கொள்கைரீதியில் பாரதூரமான தவறாகும். இதன் மூலம் கூட்டமைப்பு இலங்கையின் தீர்மானங்களில் இராணுவத்தின் தலையீட்டை அங்கீகரித்திருக்கின்றது. கடந்த பத்தியிலும் இப்பத்தியாளர், கூட்டமைப்பு ஒரு தனித்தரப்பு என்னும் தகுதி நிலையை படிப்படியாக இழந்துவருகிறது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது இராணுவத்துடன் கூட்டமைப்பினர் பேசிக்கொண்டிருக்கின்றனர். கூட்டமைப்பின் 2015இன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 83க்கு முன்னர் இருந்தது போன்றதொரு சூழலை ஏற்படுத்தும் வகையில், அர்த்தமுள்ள இராணுவநீக்கம் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
2009இல் யுத்தம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள அளவுக்கதிகமான இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென்பதே கூட்டமைப்பின் கொள்கை நிலைப்பாடாக இருந்தது. சம்பந்தன் இராணுவ நீக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தில் (2012) தனியான உரையொன்றையும் ஆற்றியிருக்கின்றார். அதில் இவ்வாறு கூறிச் செல்கின்றார் : இராணுவத் தலையீட்டின் காரணமாக, தமிழ் மக்கள் பிறந்து வளர்ந்த இடங்களில், அவர்கள் கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையின் ஒட்டுமொத்தமான 20 இராணுவ பட்டாலியன்களில், 15 வடக்கில் நிலைகொண்டுள்ளது. அந்த வகையில் 150000 இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டிருக்கின்றனர். நான்கு தமிழ் குடிமகனுக்கு ஒரு இராணுவம் என்னும் வகையில் இருக்கின்றனர். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. சம்பந்தனின் இந்த வாதங்களை அப்போதைய ராஜபக்ச அரசாங்கம் பொருட்படுத்தியிருக்கவில்லை. இந்த நிலையில்தான் 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மனச்சாட்சியுள்ள மைத்திரிபால சிறிசேனவும் – தாராளவாத சிந்தனையுள்ள ரணில் விக்கிரமசிங்கவும் ஆட்சியை பகிர்ந்து கொண்டனர். ஆனால் இந்த இடத்தில் எழும் கேள்வி – ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இராணுவத்துடன் பேசி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அவ்வாறாயின் தற்போதைய அரசாங்கத்தினாலும் இராணுவத்தை மீறி முடிவுகளை எடுக்க முடியவில்லையா? முன்னைய ஆட்சியாளரின் சர்வாதிகார வழிகாட்டல்கள் இந்த ஆட்சியிலும் தொடர்கிறதா? இது தொடர்பில் சம்பந்தனின் பதில் என்ன? கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளினது, தலைவர்களின் பதில் என்ன? ஏனெனில் ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும் நாடுகளில்தான் இராணுவத்துடன் பேச வேண்டிய தேவை எழும். ஏனைய நாடுகளில் இராணுவம் என்பது போரின் போது மட்டுமே செல்வாக்குச் செலுத்தும் அல்லது ஒரு அரசாதாரண சூழலில் இராணுவத்தின் தலையீடு அவசியம் என்னும் வகையிலேயே இராணுவத்தின் பங்குபற்றல் இடம்பெறும். தற்போது நாட்டில் அசாதாரண சூழலும் இல்iலை, சர்வாதிகார ராஜபக்சேக்களும் இல்லை. அப்படியிருக்கும் போது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு சம்பந்;தன் ஏன் இராணுவத்துடன் பேச வேண்டும்? ஒரு ஜனநாயக தலைமை ஜனநாயக அரசாங்கத்துடன் அல்லவா பேச்சு வார்த்தை நடத்த வேணடும்!
உண்மையில் இராணுவ நீக்கம் தொடர்பில் எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கைளையும் இந்த அரசாங்கம் இதுவரை எடுத்திருக்கவில்லை. சம்பந்தன் குறிப்பிட்டது போன்று, 15 இராணுவ பட்டாலியன்கள் வடக்கில் நிiகொண்டிருந்தது என்றால், ஆட்சி மாற்றத்தின் பின்னர் எத்தனை பட்டாலியன்கள் இதுவரை வெளியேற்றப்பட்டிருகின்றன? 150000 படையினரில் மீளவும் தென்னிலங்கை முகாம்களுக்குள் உள்வாங்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இது தொடர்பில் சம்பந்தனின் பதில் என்ன? கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் பதில் என்ன? இது தொடர்பில் ஒரு கொள்கை நிலைப்பாடு எடுக்கப்படாத நிலையில், இராணுவத்துடன் பேசி விடயங்களை தீர்க்க முற்படுவதானது, மிக மோசமான கொள்கைத் தவறுக்கே வழிவகுக்கும். இவ்வாறான விடயங்கள் இதனோடு மட்டுமே முடிந்துவிடப் போவதில்லை. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படலாம் என்று நம்பப்படும் அனைத்து விடயங்களிலும் இந்த மாதிரியை பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் கூட்டமைப்பிற்கு ஏற்படும். அரசாங்கம் மிகவும் நுட்பமாக கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு பொறிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது ஆனால் சம்பந்தனோ எதனையும் அறியாதவர் போல் பொறிக்குள் விழுவதையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு வருகிறார்.
உதாரணமாக போர்க் குற்ற விசாரணை மற்றும் மனித குலத்திற்கு எதிரான விசாரணை ஆகியவை தொடர்பிலும் மைத்திரிபால – ரணில் கூட்டு இவ்வாறானதொரு அனுகுமுறையே கடைப்பிடிக்கக் கூடும். அப்போதும் இராணுவம் இன்று காணிப் பிரச்சினைக்கு வழங்கிய பதில் போன்றே அப்போதும் கூறலாம். – இராணுவம் குற்றமிழைக்கவில்லை ஆனால் அரசாங்கம் அப்படி கூறினால் நாங்கள் ஒத்துழைக்கின்றோம் – என்று இராணும் பதிலளிக்கலாம். இதன் மூலம் இராணுவம் அரசாங்கத்தையும், அரசாங்கம் இராணுவத்தையும்; ஒரு வித முன்னெச்;சரிக்கையுடன் பாதுகாத்துக் கொள்வதற்கு கூட்டமைப்பை பயன்படுத்திக் கொள்கிறது. உண்மையில் சம்பந்தன் தனதும், கூட்டமைப்பினதும் தலைமைத்துவ தகுதிநிலையை பரிகசிப்புக்குரிய ஓன்;றாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இதனை அவர் அறிந்து செய்கிறாரா அல்லது அறியாமல் செய்கிறாரா? ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே, அவர், தங்களை இராணுவத்துடன் பேசுமாறு கூறியதா சொல்லப்படுகிறது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நிலைமைகளை பரிசீலிக்கும் வகையில் இராணுவத் தளபதியுடன் பேச விரும்பின்; அது ஒரு பிரச்சினைக்குரிய விடயமல்ல ஆனால் சம்பந்தன் இராணுவமத் தளபதி, பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரை, தனது எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனோ அவ்வாறு செய்யாது இராணுவத் தலைமையகத்திற்கு சென்று பேசியிருக்கிறார். ஒரு நாட்டின் அசாதாரண சூழல்நிலைகளில்தான், இவ்வாறு இராணுவத்தின் இடங்களில், அரசியல் வாதிகள் கூடுவதுண்டு. இப்போது அப்படியென்ன அரசாதாரண நிலைமை இலங்கையில் நிலவுகிறது?
இந்த விடயங்களை பிறிதொரு கோணத்தில் ஆழமாக பார்த்தால், இதற்கு பின்னால் மறைந்திருக்கும் இரகசிய அரசியல் நிகழ்சிநிரல் மிகவும் ஆபத்தானது. அது தமிழ் தேசியத்திலிருந்து, தமிழர் அரசியலை பிரிக்கும் கபட நோக்கம் கொண்டது. ஆட்சி மாற்றம் இடம்பெற்றதிலிருந்து இத்தீவின் ஒரேயொரு உரிமைசார் அரசியல் சக்தியான தமிழர் தரப்பு, அதன் தனித்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொடுத்து வந்;தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இராணுவத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு, கூட்டமைப்பு தனது தனித்தன்மையை இழந்து நிற்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, ஆட்சி மாற்றத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய சம்பந்தன் தரப்பு, இன்று எதற்குமே நிபந்தனையை விதிக்க முடியாதளவிற்கு மைத்திரி – ரணில் பொறிக்குள் அகப்பட்டு கிடக்கின்றது. இதிலிருந்து மீண்டெழுவது கடினமான ஒரு காரியமல்ல ஆனால் அதற்கு முதலில் சம்பந்தன் இதிலிருந்து வெளியில் வர வேண்டுமென்று எண்ண வேண்டும். ஆனால் இந்த நிலைமை தொடர்பில் வடக்கு கிழக்கிலுள்ள புத்தஜீவிகள், சிவில் சமூகத் தலைவர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும். இதனை தடுத்து நிறுத்த முற்படாவிட்டால் நிலைமைகள் மேலும் மோசமடைவதை எந்;த வகையிலும் தடுக்க முடியாது. கடந்த எழுபது வருடங்களில் தமிழ்த் தேசிய தலைமை இதுபோன்றதொரு பலவீனமான நிலையை இதுவரை சந்தித்ததில்லை. இதிலிருந்து மீண்டெழுவது எப்படி?




