செய்திகள்

இரு கோடுகளின் சமாந்திரப் பயணம் இரு நூற்றாண்டுப் பார்வை

மருத்துவர் சி. யமுனாநந்தா.

இந்தியாவின் புகையிரதப் பாதை, இலங்கையின் புகையிரப் பாதை, தென்னாபிரிக்காவின் புகையிரதப் பாதை, மலேசியாவின் புகையிரதப் பாதை கைத்தொழில் புரட்சியின் வளர்ச்சியின் ஒழுங்குகளாக அமைகின்றன. புகையிரதங்களின் பயணத்தின் நிலையினையும், கப்பல் பயணங்களின் நிலையினையும், பிரித்தானிய சாம்பிராஜ்ஜியத்தின் எழுச்சியினையும் இன்றுவரை எடுத்துக்காட்டுகின்றது. இச் சமாந்தரக்கோடுகளின் அடிப்படையில் தமிழனின் இரத்த உழைப்பே அமைந்துள்ளது.

ஆங்கிலேயர் தமிழகத்தைச் சூறையாடியபோது ஆளுனரை நியமித்து, தமிழகத்தின் சொத்துக்களை பிரித்தானியாவிற்கு கப்பலில் கடத்தினர். தமிழகத்தின் நீhபாசன முறைகள் முகாமைப்படுத்தாது பஞ்சம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதால் மக்களை ஆங்கிலேயருக்கு சேவகம் செய்யும் குடிமக்களாக மாற்றப்பட்டனர். கட்டாய புலம்பெயர்வுபடுத்த தலைமைப்படல், ஒரு சிலருக்கு ஆங்கிலக்கல்வி வழங்கப்பட்டு, அவர்களால் ஏனைய தமிழ்மக்களை அடிமைகளாக மாற்றப்பட்டனர்.

வயல் நிலங்கள், காடுகள், தேயிலை, இறப்பர் தோட்டங்களாக மாற்றப்பட்டன. தமிழகத்தில் புகையிரதப்பாதை தான் தமிழர்களால் போடப்பட்டன. பின் அதில் அவர்கள் கூலிகளாகக் கடத்தப்படல். அவற்றில் வேலை செய்ய வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் வலுக் கட்டாயப்படுத்தப்பட்டனர். கூலி வேலை செய்வதற்கு தமிழர்களை ஆங்கிலேயர் பழக்கப்படுத்தத் தொடங்கினர். அவர்களைக் கண்காணிக்க கங்காணி என்ற வேலையையும் உருவாக்கினர். இவ்வாறு கூலி வேலைக்காகவே புகைவண்டிகளில் கிராமம் கிராமமாக ஏற்றப்பட்டு இராமேஸ்வரம் வழியே இலங்கைக்கு சென்னை வழியே மலேசியா, தென்னாபிரிக்காவிற்கும் அனுப்பப்பட்டனர்.

இலங்கை, மலேசியா, தென்னாபிரிக்கா, மொறிசியஸ் ஆகிய நாடுகளில் புகையிரதப்பாதை அமைத்தலில் இருந்து, தேயிலைத் தோட்டம், இறப்பர் தோட்டம், கரும்புத் தோட்டம், சுரங்கத்தொழில் என்பவற்றில் தமிழர்கள் பேண பிரித்தானிய இராணுவம் கடமையில் இருந்தது. கைத்தொழில் புரட்சியின் மிகவும் பாதகமான விளைவாக தமிழகத்தில் தமிழரின் இராஜ்ஜியம் அழிக்கப்பட்டு, குடிமக்கள் கூலிகளாக இலங்கை, மலேசியா, மொறிசியஸ் தென்னாபிரிக்காவிற்கு அனுப்பப்பட்டனர். பிரித்தானியரால் தமிழர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு கூலிகளாக கப்பல்களில் நாடு கடத்தப்பட்டமையே கைத்தொழில் புரட்சியினால் தமிழினத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகும்.

இலங்கையில் இராணுவம் பிரித்தானியரால் மலையகத்தில் உள்ள தமிழ் மக்களை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது. தியந்தலாவை இராணுவ முகாம் இத்தகையதே. இதுவே பின் இலங்கை இராணுவமாக மாறியது.

அடுத்து பிரித்தானியர் சுதந்திரத்தை வட இந்தியரிடமும் தென்னிலங்கைச் சிங்களவரிடம் 1948இல் கொடுத்து விட்டுச் சென்றது.

1948 தொடக்கம் 2009 வரையிலான தமிழின அழிவுகள் தொழினுட்பப்புரட்சியின் விளைவாகும். அதாவது 2ம் உலக யுத்தம் முடிவடைந்த பின் இந்தியா, பாகிஸ்தான் பிரிவடைந்தபின் இந்தியா, பாகிஸ்தான் எல்லை யுத்தத்திலும் எல்லைப்படையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மட்ராஸ் ரெஜிமண்ட் என்ற பெயரில் புகையிரதத்தில் இந்திய எல்லையில் காவலுக்கு நின்று கொல்லப்படுகின்றனர். அதேபோல் இலங்கையிலும் தமிழ் மக்கள் விமானக்குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல்கள், துப்பாக்கிப் பிரயோகம் என்பனவற்றினால் கொல்லப்பட்டனர். இவையும் புலம்பெயர் அகதிவாழ்வும் தொழில்நுட்பப் புரட்சியினால் தமிழினத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவிலுள்ள புகையிரதப் பாதைகளை தமிழகத்தின் வளங்கள் சுரண்டப்படவும் தமிழகத்தில் இந்தித் திணிப்பு ஏற்படவும் பிரதான காரணியாக அமைகின்றது.

அவ்வாறே இலங்கையில் உள்ள புகையிரதப் பாதைகளும் குறிப்பாக மலையகத்தில் தமிழர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளது. இப் புகையிரதப் பாதைகளை நோக்கும்போது இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு எவ்வாறு தமிழர்கள் தமது கடின உழைப்பைத் தியாகித்துள்ளார்கள் என்பதனை உய்த்தறியலாம். கைத்தொழில் புரட்சியால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொழில்நுட்பப் புரட்சியால் அழிக்கப்பட்டனர். ஆனால் இவற்றில் உச்ச விளைவினை வன்னியில் ஏற்பட்ட அழிவுகள் எமக்கு உணர்த்தியுள்ளன.

அடுத்து தற்போது உலகில் மின்னணுத் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டுள்ளது. இதன் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகின் பாதுகாப்புக் கட்டமைப்புக்கள் மிகவும் வேகமாகவும் திசைமாறியும் பலமடைந்து வருகின்றது.

சீனா, ரஷ்யா என்பன ஐக்கிய அமெரிக்காவினைவிட தகவல் தொழில் நுட்பத்தில் மேன்னிலையை அடைந்து உள்ளன. இதனால் உலகின் பாதுகாப்பு, பொருளாதாரம் என்பன சிக்கல் தன்மை மிக்கதாக மாறியுள்ளது. இத்தகைய நவீன புரட்சிச்சூழல் தமிழினத்தை மென்மேலும் கீழ்நிலைக்குத் தள்ளாது இருப்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

அண்மையில் சீன அதிபர், இந்தியப் பிரதமர் சந்திப்பு தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. சீனாவின் முதலீடுகள் இலங்கையிலும் முழுமையாக பரிணமிக்கத் தொடங்கிவிட்டது.

இந்தியாவிலும், இலங்கையிலும் சீனா மேற்கொள்ளும் தொழில்நுட்ப முதலீடு, பொருளாதார முதலீடு என்பனவும், பூகோள வெப்பமடைதலால் ஏற்படும் காலநிலை மாற்றத் தாக்கத்தின் பாதிப்பும் தமிழரின் ஏழ்மையினை மேலும் அதிகரிக்கும். இதனால் தமிழகத்தில் இருந்தும், இலங்கையில் இருந்தும் தமிழர்கள் சீனாவின் பட்டுப்பாதையில் கூலிகளாக மீண்டும் செல்லும் சூழல் ஏற்படும். அன்று ஆங்கிலம் படித்த தமிழர்கள் கண்காணிகளாக மாறினார்களோ அவ்வாறே எதிர்காலத்தில் சீனமொழி படித்த தமிழர்கள் கண்காணிகளாக மாறுவர்.

கைத்தொழிற்புரட்சியின்போது ஐரோப்பியர் தமிழனின் சமூகவாழ்வை அழித்தனர். தொழில்நுட்பப் புரட்சியின்போது எம் அயலவர்களே எமது சமூக வாழ்வை அழித்தனர். தற்போது உருவாகியுள்ள மின்னணுத் தொழில்நுட்பப் புரட்சியில் சீனர்களால் எமது சமூகவாழ்வு சீழடையும். இதனைத் திருகோணமலைக் கோட்டைக் கல்வெட்டின் பாடலில் பொருளில் இருந்து அறியலாம்.

“முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியைப்
பின்னே பறங்கி பிரிக்கவே……..
செங்கண்ணனும்……”

எனச் சீன ஆக்கிரமிப்பும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அது தற்போது நிஜமாகின்றது. எனவே தமிழர்களாகிய நாம் எவ்வாறு அழிந்தோம் என்ற விழிப்புணர்வு, உலகில் எம்மினம் தப்பி வாழ்வதற்கு மிகவும் அவசியமானது. கைத்தொழில்புரட்சி, தொழில்நுட்பப்புரட்சி, மின்னணுத்தொழில்நுட்பப்புரட்சி என்பன தமிழினத்தைக் காவு கொள்வதனை வாளாகொலோம்.