இறுதி போரில் கண், செவிகளை மூடிக்கொண்ட கடவுளை மன்னிப்பது எங்ஙனம்? எட்டியாந்தோட்டையில் மனோ கணேசன்
நடந்து முடிந்த இறுதி போரை குறிக்கும் மே 18ம் நாள், வெறுமனே வந்து போகும் ஒருநாள் அல்ல. அது எங்கள் நெஞ்சங்களில் தங்கி விட்ட நாள். அன்று எங்கள் மக்கள் எழுப்பிய அழுகை ஒலியை இன்னமும் மனசுக்குள்ளே ஒலிக்கச்செய்யும் நாள். தமிழன் காலின் கீழ் சதை துண்டுகள் சிதறிய, தலையின் மேல் வதை குண்டுகள் பறந்த, அந்த நாள் இது. வானைக்கிழித்துக்கொண்டு அழுகை, ஒப்பாரி ஓலங்கள் ஒலித்த கரிநாள். மறப்போம், மன்னிப்போம் என்று சிலர் சொல்கிறார்கள். மன்னிக்கும் மனம் கொண்டோரை வாழ்த்துகிறேன்.
ஆனால், அவர்கள் முதலில் அன்று கண்ணையும், செவியையும் மூடிக்கொண்ட கடவுளைதான் மன்னிக்கவேண்டும். அதை எப்படி செய்வது என எனக்கு தெரியவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மனிதனைத்தான் நான் நம்புகிறேன். ஆகவே நம்புகின்றவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அப்புறந்தான் கொலை செய்தவர்களை மன்னிக்கலாம்.
மன்னியுங்கள், ஆனால் நாம் எதையும் மறக்காது வரலாறு கற்று தந்த பாடங்களை நினைவில் கொள்ளுங்கள். அங்கே கதறி அழுத அந்த தாய், என் தாய்; அவளது மகன், என் சகோதரன்; அங்கு சிந்தியது, என் இரத்தம், என்றுதான் நான் எப்போதும் நினைக்கின்றேன். இதை நாம் மனதில் கொண்டு, அப்படியான ஒரு யுத்தம் மீண்டும் வந்து விடாமல் தடுக்கும் அனைத்தையும் செய்வோம். யுத்த வெறியர்கள் தலைதூக்காமல் இருக்க அனைத்தையும் நாம் செய்வோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எட்டியாந்தோட்டை தமிழ் சங்கம், எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் வித்தியாலய மண்டபத்தில் நடத்திய கே. ஜி. எஸ். நாயர் நினைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நடந்து முடிந்த போரை இரண்டு நாடுகளுக்கு இடையிலான போராக சிலர் உருவகப்படுத்துகிறார்கள். இது ஒரு உள்நாட்டு சச்சரவு. யாரை யார் வெற்றிக்கொண்டோம் என நாம் வெற்றி விழா கொண்டாடுகிறோம் என நான் கேட்கிறேன். புலிகளை அழிக்கின்றோம் என்று சொல்லி தமிழ் இனத்துக்கு எதிராக யுத்தம் நடத்தி, படுகொலைகளை செய்து முடித்து, அதையும் வெற்றி விழா என்று கொண்டாடிய மகிந்த ராஜபக்ச அரசு இன்று இல்லை. இன்றைய எமது மைத்திரி அரசு, இந்த நிகழ்வின் கடந்த கால இனவாத காரத்தை குறைத்து இன்றைய நாளை அனுஷ்டிகின்றது. ஒரே நாளில் எல்லாம் ஒட்டுமொத்தமாக மாறாது. அவை படிபடியாக மாறும். அடுத்த வருடம் இன்னமும் நிலைமைகள் மாறும்.
வன்னியில் இறந்து போனது, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல. வடக்கில் சென்று குடியேறிய கணிசமான மலையக தமிழ்களும் கொல்லப்பட்டார்கள். அவர்களில் எட்டியாந்தோட்டை தமிழர்களும் உள்ளார்கள். இந்த நாட்டு தமிழர்கள், வாழ்க்கையில் பிரதேசவாத பித்து பிடித்து திரிந்தாலும், இறப்பில் நாம் யாவரும் தமிழர்கள் என்ற அடிப்படையிலேயே கொல்லப்பட்டோம். இது முட்டாள் தமிழனுக்கு வரலாறு கற்று தந்துள்ள பாடம்.
இங்கே மலையக வரலாறை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முருகேசு அவர்கள் விலாவாரியாக விளக்கினார். வடக்கில், கிழக்கில் மண் உரிமை போராட்டம் மேலெழுந்து வருமுன் மலையகத்தில் அது வந்ததை நாம் உலகிற்கு அறிவிக்க வேண்டும்.
முல்லோயா கோவிந்தன், சிவனு லட்சுமணன் போன்றோர் 1950 களில், 1970 களில் மலையக மண் உரிமைக்காக இன்னுயிரை துப்பாக்கி குண்டுகளுக்கு பலி கொடுத்தவர்கள். அதுபோல் ஆபிரகாம் சிங்கோ என்ற சிங்கள சமசமாஜ தோழரும் நமக்காக உயிரை விட்டவர். உருளைவல்லி போரட்டம், 17-50 போராட்டம் என்பவை மறக்க முடியாதவை. எட்டியாந்தோட்டை மண் இந்த போராட்டங்களால் சிவந்ததை வரலாறு சொல்கிறது.
இந்த போராட்டங்களில் எங்கள் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் முன்னணி பாத்திரம் வகித்தது. எங்கள் இயக்கத்தின் முன்னோடி கே. ஜி. எஸ். நாயர் மாபெரும் போராளியாக பணியாற்றினார். எங்கள் ஸ்தாபக தலைவர் அப்துல் அசீஸ் அவர்களுடன் எனது பாட்டனார் பழனி சாமி பிள்ளை, என் தந்தை வீ.பீ. கணேசன் ஆகியோரும் கரங்கோர்த்து செயல்பட்டனர் என்பது மகிமையுள்ள வரலாறு.
அதேபோல் காலிமுக திடலில் 1956ம் ஆண்டு தந்தை செல்வா நடத்தி வைத்த மொழியுரிமை சத்தியாகிரக போராட்டம் நாடறிந்தது. அந்த போராட்டத்தை பண்டாரநாயக்க அரசு அடித்து நொருக்கியது. ஆனால், அதற்கு முன்னாலேயே 1952ல் குடியுரிமை-வாக்குரிமை பறிப்புக்கு எதிரான அதே காலிமுக திடலில் நடைபெற்ற போராட்டம் பற்றி நாட்டுக்கு தெரியாது.
அந்த போராட்டத்தில் அசீஸ், செளமியமூர்த்தி தொண்டமான், ராஜலிங்கம் ஆகியோரை அன்றைய சேனநாயக்க அரசு குதிரை படையை ஏவிவிட்டு அடித்து துவம்சம் செய்ததையும், அப்போது ஜதொகா நிதிசெயலாளர் பழனிசாமி பிள்ளை நமது தலைவர்களின் உயிர்களை காத்து நின்றதையும் இங்கே முருகேசு அழகாக விளக்கினார். இந்த வரலாறு எழுத்தில் வரவேண்டும். அதை வெளியே கொண்டு வரும் பணிகளில் ஈடுபடும்படி நான் முருகேசு அவர்களுக்கு கோரிக்கை விடுக்கின்றேன். அது தொடர்பான ஒத்துழைப்பை அவருக்கு நான் முழுமையாக வழங்குவேன். இப்போது இங்கே என்னையும் எட்டியாந்தோட்டை தமிழ்சங்க உறுப்பினராக சேர்த்துக்கொள்ளுங்கள்.




