இலக்கு நோக்கி….
ராஜ் சுப்பிரமணியம்
கோடை காலம் என்பதால் எங்கள் வீட்டில் பதிக்கப்பட்ட INTERLOCK கற்களின் இடையில் புற்கள் முளைத்து விடுகின்றன. அவற்றைப் பிடுங்கி எடுத்து விட்டு வீட்டின் உள்ளே சென்று களைப்பாறி விட்டுத் திரும்ப போய்ப் பார்க்கின்ற போது பிடுங்கிய புற்கள் அப்படியே காய்ந்து போய்க் கிடக்கின்றன. சொற்ப நேரத்துக்குள்ளேயே நடந்து முடிகின்றது அந்தப் புற்களின் இருப்பு.
எதையும் வேரோடு புடுங்கி விட்டால் அவை அப்படியே அழிந்து விடுகின்றது என்பது எவ்வளவு உண்மையானதாக இருக்கின்றது. அவை மீண்டும் தழைக்க முடியாதவாறு இருக்க முழுமையாகப் பிடுங்குவதே சிறப்பானது!
இதைத்தான் எங்கள் எதிரி அழகாய் புரிந்திருக்கின்றான். 2009 இல் முழுமையாகப் பிடுங்கியெடுத்த எங்கள் எதிரி ”இன்று புலம் பெயர்ந்தவர்கள் மீண்டும் கொண்டுவந்து நட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் வெளிநாடுகளிலும் நம்மவர்கள் சிலரை வைத்துப் பிடுங்கும் தொழிலாகவே வைத்துச் செயற்படுகின்றான் !”
2009 இற்குப் பிறகு இழந்தவர்களின் அரசியல் அபிலாசைகளைக் கொண்டு செல்லவும், “இன அழிப்பு” (Genocide) என்று சொல்வதே பாதகமான செயல் என்று கருத்தியல் பரப்பியவர்கள் மத்தியிலும் ஒரு குறிப்பிட்ட முன்னேற்த்தைக் கொண்டு சென்றவர்கள் புலத்தில் எஞ்சியிருந்த சிலரே.காங்கிரசு அமைப்பும் அவர்கள் வழி வந்தவர்களும் எனக்கூடாகவும் பலருக்கூடாகவும் தொடர்ந்து விதைத்து war crimes என்றே விதைத்தார்கள். இனவழிப்பு என்று சொன்னவர்களை பார்த்து சிரித்தார்கள். அரசியல் சந்திப்புக்களை தடுத்தார்கள். நடமுறை சாத்தியம் இல்லை என்றார்கள்.
கட்டடம் பெரிதாக இருந்த போது அங்கு மேடையில் இருக்க நான் முந்தி என்று முண்டியடிக் ஒர பெருங்கூட்டம் இருந்தது. நான் முந்தி நீ முந்தி என்று வந்து நின்று சேவை செய்யாதுவிடினும் படத்துக்காகவாவது பலர் வந்தார்கள். 2009இல் உடைக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில் உடைந்திருக்கும் கற்களை பொறுக்கி மீண்டும் கட்டுவதற்க்குப் பெரிதாக மக்கள் முன் வரவில்லை. ஆனால் ஒரு சிலர் தொடர் முயற்சிகளினால் சில வெற்றிகரமான நகர்வுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் கனவுகளைத் தொலைத்துவிட்டு நாம் மனச்சாட்சியோடு மட்டும் வாழ்ந்து விடமுடியாது. இதை உணர்ந்தவர்கள் தங்களை தொடர் செயற்பாடுகளுக்குள்ளே இப்பவும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கினறார்கள். உயிரைக் கொடுத்தவர்களின் கனவு இவர்களின் வாழ்வியலில் அன்றாடம் வந்து போகின்றது. அதன் நினைவுகள் தொடருகின்றது.
ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள். ”Victory has a thousand fathers, but defeat is an orphan. வெற்றிக்கு பல அப்பாக்கள் இருப்பார்கள். தோல்வி அனாதரவாக விடப்படும். 2009இன் பின்னர் சரியாக இதுவே நடந்தது. வெற்றிக்குப் பழக்கப்பட்டவர்கள் அதனால் ஊக்கம் அடைந்தவர்கள் மற்றையவர்களின் இழப்பில் சுகம் அடைந்தவர்கள் அவர்கள். தோல்விக்கு யாரும் ஆதரவு தருவதில்லை. அந்த இலக்கு குறித்த தியாகத்தை கைவிடுவது எவ்வாறான துரோகம் என்பது மனச்சாட்சியுள்ள அனைவருக்கும் புரியும். அந்த மனச்சாட்சியே எங்களைப் போன்றவர்களை இயக்க வைக்க முயற்சிக்கின்றது.
எங்களுக்கான நீதி நோக்கிய பயணம் இன்று ஒரளவுக்கேனும் உலகமயமாக்கப்பட்டதில் புலத்தில் இயங்கும் சில கட்டமைப்புக்களுக்குக் கணிசமான பங்கிருக்கின்றது. அவர்கள் செயற்படும் விதங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அவர்களுக்குள்ளே இருக்கும் ”நான்பெரிது நீ பெரிது ” என்கின்ற போட்டிகள் மத்தியில் அவர்கள் இலக்கை நகர்த்தும் வீரியமும் “இன்றும்”காட்சியில் உள்ளார்கள் என்பது நாம் பெருமைப்பட்டாக வேண்டிய விடயம். “இருக்கின்றோம்” என்கின்ற அவர்களின் செயற்பாடுகளே அங்கிருக்கும் மக்களுக்கு ஒரளவுக்கேனும் வசதிகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வைக்கிறது உலகநாடுகளை. இலங்கை அரசாங்கத்தைக் கூட அழுத்தம் கொடுத்து அவர்களைக் கண் துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்த வைக்கின்றன.
எங்கள் மக்களுக்கான ஒரு சின்ன சுவாசிக்கும் இடத்தை அது பெற்றுக் கொடுக்கின்றது. அப்படி அழித்தவனுக்கு இப்படி அமைதியாக இருக்க என்ன வேண்டிக் கிடக்கின்றது என்கின்ற கேள்விக்கூடாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டும் அழுத்தங்களை யார் கொடுக்கின்றார்கள் என்பதை புரிந்துகொ
ள்ள முடியும்.
2009இன் பின்னர் மூடி வைத்து விட்டு அவரவர் வீடுகளுக்குச் செல்லுங்கள் என்று சில அதி முக்கிய முன்னாள் பிரமுகர்கள் சம்பளத்தில் இருந்த “பெரியவர்கள்“அறிவுரைகளை விட்டார்கள்.
ஆனையிறவு பிடிக்க இவர்கள் கட்டளை போட்டிருந்தால் முள்ளியவாய்க்கால் செல்லாமல் இருக்கவும் இவர்கள் போட்ட கட்டளைகளை அவர்கள்கேட்டிருக்ககூடும். ஆனால் வெற்றி பெற்றபோது சேர்ந்து நின்று கொண்டாடிவிட்டு, தோற்ற போது தங்களைக் கேட்கவில்லை என்றுபுலம்பிக்கொண்டிருக்கும் முன்னாள் செயற்பாட்டாளர்கள் இன்று எதிரிக்கும் சேவகம்செய்யும் வேலையில் உள்ளார்கள் என்பதே கண்கூடு.
2009இன் பின்னர் உருவாக்கம் கொண்ட கருத்தியல் என்பது தோற்றுப்போன மனநிலையிருந்து எடுக்கப்பட்ட ஒன்று. ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை என்பான். செயற்பாடுகளினூடாகவே இலக்கை நோக்கி நடக்க முடியும் என்கின்ற அடிப்படை விடயத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், இலக்கை மாற்றிவிட்டு செயற்படுவதை நிறுத்தி விட்ட காட்சிகளை நாம் கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். காரணம் செயற்படுதல் என்பது கடினமானது. தியாகம் நிறைந்தது.
அதை அவர்கள் நாட்டில் செய்தபோது இவர்கள் சுகம் கண்டு வளர்ந்தவர்கள்! தங்கள் இருப்பைத் தக்க வைத்து கடினமாக உழைப்பவர்களுக்கு கட்டளைகளைப் போட்டு கொண்டிருந்தவர்கள்.. திடிரென முழுப் பொறுப்புக்களை இவர்களால் கையாள முடியாத விரக்தியில்தான் இவர்கள் எடுத்திருக்கும் இலக்கை பலியாக்கியாவது தாங்கள் தமிழர்களின் தலைமைகள் என்று சொல்ல வருகின்றார்கள்.
நான்கு பேர்களைக் கொண்ட GTF என்கின்ற அமைப்பு இன்று உலக அரசுகளோடு குந்தியிருந்த கதைக்கின்றாகள். படம் எடுக்கின்றார்கள். காரணம், இவர்கள் கடினமாக உழைக்காமல் இருந்து கதைத்துப் படம் போட்டால் மக்கள் நம்பி விடுகின்றார்கள் என்று நினைக்கின்றார்கள். எந்தவித மக்கள் ஆதரவும் இன்றி, சனநாயகத்துக்கு புறம்பாக உருவாக்கப்பட்ட அமைப்பாக அதுவும் எந்த தேர்தலும் நடக்காத கட்டமைப்பு இன்று வெளிநாட்டு அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டேயிருக்கின்றது.
வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இவர்கள் தமிழர்களைப் பொறுத்த வரைக்கும் செல்லாக்காசு (Empty vessels ) என்பதையும், இவர்களைத் தமிழர்கள் தங்கள் சார்பாக நிறுத்தவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றார்கள்.
பின்னால். இவர்கள் யாருக்காக பேசுகின்றார்கள் என்கின்ற கேள்விக்கூடாக நாம் பதில்களைக் கண்டுப்பிடித்து விடமுடியும். எனக்கு சில இடங்களில் ஒரு சில நபர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது. போராட்டத்துக்கு முன்பின்னரான சம்பவங்களைக் கதைத்துவிட்டு ஈற்றில் எல்லாத் தோல்விக்கும் “அவர்” காரணம் என்று கொண்டுவந்து நிறுத்துவார்கள். அதுவே இவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட பணி. இப்படியானவர்கள் எப்படிக் கனடாவில் வேலைக்குச் செல்லாமல் வாழ்கின்றார்கள் என்றதேடலுக்கூடாக அவர்களின் இருப்பும் பிழைப்பும் எவர்களை நோக்கியிருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
இலக்கையும் அவரையும் பிரித்துப் பார்க்க முடியாது என்கின்ற அசைக்க முடியாத உண்மையினை எதிரி நுட்பமாகவே புரிந்து வைத்திருக்கின்றான். அந்தப் பிணைப்பை அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டால் இலக்கைத் தொலைத்து விடுவார்கள் தமிழர்கள் என்பதை உணர்ந்தவன் அவன். அதற்கூடாகவே எங்கள் தேசியத்தைப் பேசிக்கொண்டே இலக்கை நோக்கிச் செல்கிறோம் என்ற பகல் வேசத்தைப் போட்டு நமக்குள்ளே இறக்கிவிடப்பட்டிருக்கின்றார்கள் சில செயற்பாட்டாளர்கள். இவர்களை அடையாளம் காண்பது கடினமானது அல்ல. மற்றைய அமைப்புக்களில் இருந்தவர்கள், புதிய முகங்களாக இருப்பவர்கள் இப்படிச் சிலா். 2009 தை மாதத்தில் வீதிக்கு வரத் தெரியாதவனுக்கு 2009இன் கடைசி மாதங்களில் வழி தெரிந்திருப்பது ஆச்சரியத்தை உண்டு பண்ணுகின்றது.
பணம் எங்கே….
பலரோடு சேர்ந்து யாரிடம் பணம் இருக்கின்றது என்பதை நானும் தேடுகின்றேன். கருணாவின் துரோகத்தை விட பணத்தைச் சுருட்டியவர்கள் (சுருட்டிக்கொண்டிருப்பவர்கள்), அமைப்பில் இருந்து விட்டு பின்னர் மாற்று அணிக்குத் தாவியவர்கள் அனைவரும் மாபெரும் துரோகத்தைச் செய்து தொலைக்கின்றார்கள். இயக்கப் பணத்தில் செய்தி வாசித்தவர்கள் கூட இயக்கத்தை விமர்சிக்கும் தகுதியினை பெற்றுத் தொலைக்கின்றார்கள்.
“tar with the same brush”!
எஞ்சியிருப்பவர்கள் கடினமாகஉழைக்கின்றார்கள். முன்னர் நூறு செயற்பாட்டாளர்கள் செய்த வேலையினை இன்றுஒருவர் செய்ய வேண்டிய காலமாற்றம். அதற்கு எந்த விதமான தியாகத்தையும் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் போது நாம் எங்கள் இலக்கில்அதி தீவிர கவனத்தைக் கொள்ளலாம். உலகம் நல்லவர்களைக் கொண்டே இயங்கும். கெட்டவர்களைக் கண்டு ஒதுங்கும். கெட்டவர்களுக்காக ஒதுங்கினால் நல்லவர்கள் எண்ணிக்கை குறையும். பயணம் தடைப்படும் அல்லது மெதுவாகும். அதன் பயனை எதிரியானவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வான்.
எப்படிக் கருணாவுக்குப் பின்னரான நகர்வுகள் செயற்பாடுகள் இருந்ததோ…துரோகிகளின் பண மோசடிகளுக்காக மற்றவர்களின் உழைப்பை நாம் புறக்கணிப்பதுவும், அவர்களைத் தொடர்ந்து உழைக்கவிடாமல் சலிப்பை ஏற்ப்படுத்துவதும் எதிரியின் “வெளிநாடுகளில்” வேரோடழிக்கும் செய்பாட்டுக்கு நாமே எம்மையறியாமல் உத்வேகம் கொடுப்பவர்களாக்கச் செய்து விடுகிறது.
பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பவர்கள்…
ஈழத் தமிழ் தேசியத்தின் தமிழ்நாட்டை விட்டுப்போய் இந்தியாவில் ஏற்ப்படுத்திய உறவு தான் ”George Fernandes”. 1930 களில் பிறந்தவர். இந்தியாவின்பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது செய்த பல உதவிகளை யாரும் வெளியில் சொல்வதில்லை. நாம் தமிழ்நாடினைத் தாண்டி ஒரு நண்பனை உருவாக்கியதன் பயன் அது. ஆனால் நமக்குள்ளே இருக்கும் அதிதீவிர போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டு இன்றும்க ட்டமைப்புகளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டையும், ஈழத்தையும் ஒன்றாக் பெற்றுகொள்ள முடியும் என்பவர்கள் எங்கள்இலக்கை பகல் கனவாக்கி விடமுயற்சிக்கின்றார்கள். இவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள். இந்தியாவைப் பிரிக்கும் எந்த சக்தியோடும் நாம் கை கோர்ப்பது படுபிழையான நிலைப்பாடு. விடுதலைப் புலிகள் ஒருபோதும் அவர்களின் அரசியல் கொள்கைகளில் இந்தியாவை பிரிக்கச் சொன்னவர்கள் அல்ல. அவர்கள் அதற்குத் துணை செய்தவர்களும் அல்ல. அவர்கள் இந்தியாவை எப்போதும் ஈழத்தின் தகப்பன் நாடாகவே பார்த்தார்கள்.
விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு ஒரு மக்கள் குழு மீது ஒரே விதமான அடக்குமுறை கொடுக்கப்பட்டால் மட்டுமே அந்த மக்கள் குழு தங்கள் பாதைக்கான விடிவை நோக்கி நகர முடியும். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஈழத்து மக்களுக்கும் வித்தியாசம் அதுவே. சின்னப் பிரச்சினைகளை தமிழ்நாட்டு மக்கள் அனுபவித்தாலும், அவர்களுக்கு ஒன்றாக அடக்கப்படும் ஒரு பொதுப்பிரச்சினையில்லை. ஆனால், ஈழத் தமிழர்களுக்கு ஒரே விதமான அடக்குமுறை ஏவப்பட்டு வருகின்றது. எங்களிடம் இருக்கும் நோய்க்கு வேண்டிய மருந்தை நாம் அவர்களுக்குக் கொடுப்பது மாபெறும் தவறு. பிரிவினைக்கான எமது மருந்து அவர்களுக்குத் தேவையற்றது என்பதை புரிந்துகொள்ளும் மனப்பக்குவத்தை பெற்றுக்கொண்டு நாம் முன்னே செல்ல வேண்டும்.
கனடா 150ஆவது பிறந்தநாளை கொண்டாடுவது பிழையென்றும், கனடாவின் மூத்தகுடிக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை இடையில் குடியேறிய நம்மீதும் சுமத்தும் சில தமிழர்கள் ஈழத்தேசியத்துக்காக Geneva போய் வாதிடுகின்றார்கள். அடைக்கலம் தந்த நாட்டுக்கு எதிராகப் பரப்புரை செய்துகொண்டு ஈழத்தேசியத்துக்குாக உழைக்கும் முரண்படும் அதிதீவிரவாதிகளின் இச் செயற்பாடுகள் கண்டிக்கப்படல் வேண்டும். கனடாவுக்கு எதிராகக் கோசம் போடுபவர்கள் எங்கள் விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் தகுதியினை இழக்கின்றார்கள். அவர்களை நாம் அப்புறப்படுத்தல் அவசியமானது.
நாம் வென்றாக வேண்டும் என்பதில் இல்லை அவர்களின் அவசரம். தாங்கள் தங்களைத் “தக்க“ வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற அவர்களின் அரசியல் கனவுகளே இங்கே உள்ளன என்பதைச் சென்று பாருங்கள். அழகாகப் புரியும்.
ஆயுதப் போராட்டக் காலத்தில் நமக்கிருந்த மென்மைப்போக்கு, இன்று அறவழிப்போராட்டத்தில் இல்லாது இருப்பது வேதனையானது. சில்லறைத்தனமான செயற்பாடுகள், உள்வாங்கப்படாத செயற்பாடுகள், அறியாமல் செய்யும் செயற்பாடுகளின் தாக்கங்கள் இங்கு இருப்பது வேதனையளிக்கின்றது. முட்டாள்தனமாக விதைத்தால் நாம் அறுவடை காலத்தில் அழுதுகொண்டிருக்கவேண்டியவர்கள் ஆவோம் என்கின்ற உண்மையினை இன்றும் நம்மில் சிலர் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை
நம் போராட்டத்துக்கு நண்பர்களே இல்லை என்ற நிலையிலிருந்து நகர்ந்து சென்று மெது மெதுவாக நண்பர்களை உருவாக்கும் செயற்பாடுகளில் நாம் ஈடுபட வேண்டியது முக்கியமானதாகும்.இங்கே நம் முன்னோர் பாவித்த elevated ramp போன்ற ஒரு திட்டத்தை உபயோகித்து நண்பர்களை வென்றெடுக்கும் வழிமுறையினைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறவிடுகின்றோம். தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்க நினைக்கும் சிலர் அகண்ட தமிழகத்தை கனவு காண்கிறார்கள். இவர்கள் எமது மக்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்துபவர்கள். அவர்களின் கனவை இவர்களின் அதிமுட்டாளத் தனமான செயற்பாடுகளால் பின்னோக்கி இழுப்பவர்கள். எங்களுக்குக் கிடைத்திருக்கும் சிறிய முன்னேற்றங்களைத் தடுத்து நிறுத்துபவர்கள் இவர்கள். இந்த கோட்பாடுகளைச் சுமப்பவர்களை வைத்து எதிரி தனது கரங்களை எங்களுக்கு எதிராக நகர்த்துவான்.
இப்படியான “நண்பர்களே” இல்லாத அநாதைகளாக நாம் இருப்பது எவ்வளவோ மேல் என்று நினைக்கின்றார்கள். இங்கேதான் கடும்போக்கானவர்கள் எங்கள் இலக்குக்கு பச்சைத்துரோகம் செய்கின்றார்கள். அவர்களது துரோகம் எதிரிக்குத் துணை போவது ஒரு புறம் இருக்க, நாங்கள் விடும் பிழைகளினாலும் மேலும் கூடுதல் துரோகங்களை உருவாக்கமுடியும். இலக்கை நோக்கிய பயணத்தை எதிரியானவன் மட்டுமல்ல… நம்முடைய திறமையற்ற நடவடிக்கைகள் கூட நிறுத்தக்கூடும் அல்ல மெதுவாக்கும் (incompetence leadership).
எம்முடைய நிலைப்பாட்டை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் நாம் Persuasion இல் திறமையாளர்களாக உருவாகவேண்டும். சிரித்துக்கொண்டிருந்து தேவையானவற்றை பெற்றுக்கொள்ளும் திறமை அது (Persuasion is an art).
எமக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் எதிரிக்கு நாம் கொடுக்கும் பதிலடி நாம் தொடர்ந்து ஒற்றுமையாக இருப்பதே! உலக நாடுகளை எம் பக்கம் இழுத்து எதிரியினை தனிமைப்படுத்துவதே. அந்த செயற்பாடுகளை செய்வதில் சில விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சில முயற்சிகளை முறையாகச் செய்கின்றது . ஆனால், அந்த முயற்சிக்கும் பல உந்துதல்களை நாம் கொடுக்க தவறவில்லை. இருக்கும் இந்தப் பலத்தை அழித்துவிட்டு வடக்கில் மட்டுமே (அதுவும் இப்போது மாற்றம் கொள்ள முனைகின்றது) எங்கள் அபிலாசைகளை புதைக்க முனைகின்றனர் சிலர்.
கிழக்கைப் பறிகொடுத்துவிட்டோம் என்று யாரும் அழுவதாகத் தெரியவில்லை. நாம் தொடர்ந்து கூட்டமைப்பைத் தாக்குவதையே முழு நேர வேலையாக்கியிருக்கின்றோம். போகும் பயணத்தின் வேகத்தை குறைக்கும் அனைத்தும் செயல்களால் வரும் பயனை யார் அறுவடை செய்யப் போகின்றார்கள் என்பதை நினைத்துப் பார்க்க மறுக்கின்றோம். சீனா கூட எமக்கெதிரான செயற்பாடுகளை நகர்த்திக்கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாமல் இருக்கின்றது. அதுவம் எம்மவர்களை வைத்தே செயற்படுத்தப்படுகின்றன என்பதைக் கவனிக்க முடிகின்றது.
எங்களால் முடியும் நிமிர்ந்து நடந்தால்…. சிங்கள மக்களோடு நாம் சமரசம் செய்யவேண்டியவர்கள் அல்ல (reconcilliation). ஏன் என்றால் நாம் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியவர்களும் அல்ல தொடர்பவர்களும் அல்ல. அவர்களை நாம் புறக்கணிக்கவோ அல்லது வேண்டுமென்றே முற்றத்தில் வைத்துப் கட்டிப் பிடித்து படம் எடுக்கவோ தேவையில்லை. எங்கள் முப்பது வருட போராட்ட வாழ்க்கையில் அவர்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கியவர்கள் அல்ல நாம். அவர்களை வெறுப்பவர்களாக நாம் இருக்கவேண்டும் என்று கட்டளையிடப்பட்டவர்களும் அல்ல. எங்கள் நாடு நமக்கு வேண்டும். அங்கே சிங்களவர்களும் மற்றவர்களும் சகல உரிமைகளோடும் வாழ முடியும் என்பது தான் நமது நிலைப்பாடு. அதில் நாம் அதீத உணர்ச்சி வசப்பட்டு எங்கள் நிலைப்பாட்டுக்காக மற்றவர்களைக் காரணமின்றி வெறுக்கத் தேவையில்லை. எங்களுடை நோக்கு மடிந்தவர்களின் கனவினை நனவாக்க வேண்டும்.
கனவினை நனவாக்க உழைப்பவர்கள் (அறவழியில்) நிச்சயமாக மடிந்தும் வாழ்பவர்களின் நெறிமுறையினை உள்வாங்கிச் செயற்படவேண்டும். அது முக்கியமானது. அந்த நெறியின்றி நாம் செயற்படுவோமானால் அவர்களின் கனவை பின்னோக்கி நகர்த்தி அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே உறங்க விட்டுவிடுவோம்.
கருணாவின் மீள் வருகை
கடைசியாக வவுனியாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருணா பேசுகின்ற பேச்சைக் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது. 2009க்கு முன்னைய செயற்பாடுகளைப் பக்குவமாகவே எதிரிக்குக் காட்டிக்கொடுத்து புலிகளைஅழிக்க மிகவும் உதவி செய்தவர் கருணா. புலிகளின் கொரில்லா தாக்குதல் யுக்திகளை எதிரிக்குக் காட்டிக்கொடுத்து, இலங்கை அரசுக்குப் பேருதவி செய்தார்.
இப்போது ஈழத் தேசியத்தை கையில் எடுக்கின்றார். புலம்பெயர்ந்தவர்கள், அண்ணை, மக்கள் என்று முக்கோணக் காதலைக் கொட்டி நிற்கின்றார். பேச்சில் எதிரி தன்னைக் கைவிட்ட விரக்தி தெரிகிறது. சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழர்களின் போராட்டத் தலைமையினைத் தான் எடுக்க மிகவும் முயற்சி செய்கின்றார் என்பதும் அந்தபேச்சில் நன்றாகத் தெரிகின்றது. கருணா என்ற பாம்பு மீண்டும் படம் எடுத்திருக்கின்றது வவுனியாவில். நமக்கு அது எச்சரிக்கை மணியாக இருக்கவேண்டும்.
அவர் இப்போது எடுத்திருக்கும் பாதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பது. அவர்களைத் தவிர்த்து தான் ஒரு தலைவராக வருவதென்பது அவரது கனவாகத் தெரிகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்ப்பவர்கள், மிதிப்பவர்கள் ஒன்றை ஆணித்தரமாகப் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கு மீட்பைத் தவற விடும் பட்சத்தில் பிரிவினையினை ஊதிப் பெரிதாக்கி குளிர் காயக் காத்திருக்கின்றார் கருணா. நமக்கிருக்கும் இப்போதைய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை நாம் மறுக்க முடியாது.
EUROPEAN UNION
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்படவேண்டும் என்ற முடிவை ஐரோப்பிய நீதிமன்றம் கொடுத்திருக்கின்றது. திரு லதன் சுந்தரலிங்கம் ஒருங்கிணைப்பில் திரு. V. Koppe தலைமையிலான வக்கீல்கள் தடைக்கு எதிராக வெற்றிகரமாக வாதிட்டு வென்றுள்ளார்கள். 22 நாடுகள் அந்த ஒன்றியத்தில் இருப்பதால், அந்த நாடுகள் அனைத்தும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தடையை எடுக்கவேண்டிய சட்ட நெருக்கடியினைச் சந்திக்கின்றன. ஆனால் ஐரோப்பிய யூனியன் தடைப்பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்திருப்பதாகவே அறிவித்துள்ளது.
நான் ஜெனீவாவில் நின்றிருந்த போது திரு V. Kopp ஐ சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பொழுது அவரைக் கனடாவிற்கு வருமாறும் மக்களுடைய மன்றங்களில் இத்தகைய தடையினால் தமிழர்களுக்கு ஏற்படும் புறத் தீமைகளைப் பற்றிய கலந்துரையாடல்களைச் செய்யுமாறும் கேட்டிருந்தேன். அதற்கு அவர் சம்மதம் சொல்லியிருந்தார்.
தடையெடுக்கவேண்டும் என்று கருத்தியல் ஓட்டத்தைக் கூட தமிழ் அமைப்புக்கள் இன்றும் கொண்டு செல்லவில்லை என்பது கவலையளிக்கின்றது. வாரிசுகள் என்பவர்களும், சொத்துக்களைத் தங்கள் பக்கம் வைத்திருப்பவர்களும் இதைப்பற்றிக் கதைக்கவோ பேசவோ தேவையில்லை என்கின்றார்கள். காரணம் என்ன?
கனடிய PC கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. Jack McLaren அவர்கள் கனேடியப் பாராளமன்றத்தின் அருகில் இருந்து புலிகள் தடையெடுக்கப்படவேண்டும் என்றமுதற் குரலை எழுப்பியிருக்கின்றார்.
தடை தொடர்ந்திருப்பதன் தீமைகளைப் பற்றி யாரும் தொலைநோக்கில் பார்க்கவில்லை எனத் தெரிகின்றது. அந்தத் தடை நீடிப்பதின் ஊடாக நாம் சரியான பாதையில் செல்லவில்லை அல்லது பெரும் சுமையொன்றை தூக்கப் பயத்தில் ஒழிந்து கொண்டிருப்பது புலப்படுகின்றது.
இந்தத் தடை தொடர்வதனால் புலிகள் காவி வந்த தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் அடிப்பட்டுபோகும். இறந்தவர்களுக்கு ஒழுங்கான மரியாதை செய்யமுடியாது போகும். அந்த தடையினால் தமிழ் இனம் குற்றம் சுமந்தவர்களாக(stigmatize) எண்ணப்படும். விடுதலை பெற்ற பல இனக் குழுமங்களின் போராட்ட சமூகம் ஒரு காலத்தில் உலகத்தினால் பயங்கரவாதிகளாக கணிக்கப்பட்டே வந்திருக்ககிறது. அந்த சமூகங்கள் தொடர்ச்சியான அரசியல் போராட்டங்கள் ஊடாக விடுதலை பெற்றிருக்கின்றார்கள்.
போராடியவர்கள் சுதந்திர வீரா்களாக கௌரவம் அடைந்திருக்கின்றார்கள். இந்த கருத்தியல் மக்களுக்குள்ளே கொண்டு செல்லப்படல் வேண்டும். அந்த கருத்தியல் மெதுவாக நீதிமன்றங்களின் அங்கீகாரத்துக்கும் உள்ளாக வேண்டும்.
என்ன செய்யவேண்டும்
முக்கோணத்தின் முயற்சிகள் அவசியம். அவை மூன்றும் ஒன்றினைந்துசெயற்படுவது அவசியம். புலிகள் இல்லாத இந்தக் காலத்தில் தாயகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சிவில் அமைப்பு (தமிழர் மக்கள் பேரவை) பலப்படுத்தப்பட்டு மக்களின் அன்றாடத் தேவைகள் குறித்த இறுதி இலக்கு நோக்கிய அறிவுசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். எங்கள் மக்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் இந்த சிவில் அமைப்பிடம் போகும் ஒரு அமைப்பாக வளரவேண்டும் (authentic voice). ஒரு நாளில் உருவாக்கி, மறு நாளில் யாழ் ஊடக மையத்தில் போய் தாங்களே மக்களின் ஒருமித்த குரல் என்று சொன்னால் அது ஒரு அமைப்பாக வரமுடியாது என்பதைச் சம்மந்தப்பட்டவர்கள் உணர்தல் வேண்டும். ஒரு இரவில் மக்களின் தலைமைத்துவத்தை எடுத்து விடுவது கடினம். கடினமாக உழைக்க வேண்டும். மக்களோடு மக்களாக நின்று வேலை செய்யவேண்டும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நமது இலக்கை ஏற்றுக்கொள்ள முடியாத கட்டமைப்பாக இருந்தாலும் அவர்கள் அடையும் ஒவ்வொரு சிறு வெற்றிகளும் எங்கள் இலக்கின் பயனத்துக்குப் பலம் சேர்ப்பவை. அவர்களை அந்தப் பாதைக்கு எதிராகப் பயணம் செய்யாமல் பார்ப்பது தமிழ் மக்கள் பேரவைக்கான வேலைத்திட்டம். மக்களின் அதிகார மையத்தை ஏற்றுக்கொண்ட பின்னால் மக்கள் பேரவையிடம் வந்து நின்றே தேசியக்கூட்டமைப்பு கதைக்கும்…. கதைக்கவேண்டும்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்பது ஒரு சின்ன மரத்தை நட்டுவிட்டு நாம் அதைச் சுற்றி வேலி அடைப்பது போன்றது. அந்த மரம் வளரவேண்டும் என்றால் மற்றய தீய சக்திகளை தள்ளிவைக்க வேண்டும். அந்தக் காரணத்தினால் நாம் தேசியக் கூட்டமைப்பின் இருப்பை ஏற்றுக்கொண்டாக வேண்டும். அல்லாதுவிடின் துரோகிகளின் கோட்டையாகி விடும் எங்கள் தாயகம். (டக்கிளசுக்கு வடக்கும் கருணாவுக்கும் கிழக்கும் போய்விடும். துண்டாட்டம் காணும்..)
மூன்றாவது அங்கம் புலம்பெயர் மக்கள், அமைப்புக்கள். நாம் இவர்களுக்குத் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து உதவிகள் ஆலோசனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கவேண்டும்.
இந்த முக்கோணத்தில் இருப்பவர்கள் தொடர்ச்சியாகத் தொடர்ந்து உழைத்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியம் என்பது எனது கணிப்பீடு!
iniyaval@gmail.com




