செய்திகள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடலில் அமிழ்ந்த மைநாகபர்வத்தின் இடஅமைவு – நயினாதீவு மலையடி?

மருத்துவர்.சி.யமுனாநந்தா

கிருத யுகத்தில் மலைகளெல்லாம் சிறகுகளையுடையனவாய் பூவுலகில் எங்கும் பறந்து பட்டணங்கள் மீதுசென்று படிந்து அப்பட்டணங்களையும், மக்களையும் நாசம் செய்தது. இதனைக்கண்ட இந்திரன் அம்மலைகளின் சிறகுகளை அரிந்து அவற்றைப் பறக்காதபடி தடுத்தான். இந்நிலையில் மைநாகன் மாத்திரம் வாயுதேவனின் சகாயத்தால் தப்பியோடி சமுத்திரத்தில் மறைந்தான். இவ்வாறு எமது புராணக்கதைகளில் உள்ளது. உலகில் கழிந்த யுகங்கள் : கிருதயுகம், திரேதக யுகம், துவாபர யுகம், கலியுகம் என மாற்றமடைந்ததை சதுர்யுகம் எனக் குறிப்பிடுவர்.

இவ் மைநாகபர்வத்தின் எச்சம் இன்றும் உள்ளதோ என்ற ஐயம் நயினாதீவின் தெற்குப்பகுதியை புவியியல்ரீதியில் நோக்கும்போது எழுகின்றது. அப்பகுதியினை மலையடி என்று ஊர்மக்கள் காலங்காலமாக அழைத்து வருகின்றனர். அதன் புவியியல் அமைப்பும், கற்பாறைகளும், ஆழமான கடற்பரப்பும் அதனைச் சூழவுள்ள ஆழியில் மறைந்த பர்வத்தின் எச்சமோ என ஐயுறவைக்கின்றது. மைநாகபர்வதம் மருவி மைநாகதீவு என்றும் நயினாதீவு என்றும் வழங்கலாயிற்றோ என்று ஆய்வாளர்களை கேள்விக்குள்ளாக்கும்.

எனவே நயினாதீவு தெற்கு மலையடியில் கடலை அண்டியுள்ள கற்பாறைகளைக் காலநிர்ணயம் செய்ய வேண்டிய கடமை உள்ளது. இப்பாறைகளில் கடற்பாறைகளும், பண்டைய பாறைகளும் இணைந்து காணப்படுகின்றன. இதனைத் தொல்லியல் திணைக்களமோ அன்றேல் யாழ். பல்கலைக்கழகப் புவியியற்துறையோ ஆராய்தல் நல்லது. மேலும் வேலணைப் பிரதேச செயலரும் இப்பாறைகளின் வரலாற்று முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கை எடுக்கலாம். வடமாகாண சபையும் இது தொடர்பாக இந்திய அரசின் ஆலோசனைகளைப் பெறலாம்.