இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்று பிரித்தானிய பிராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்து
பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஐ. நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை அமுல்படுத்துவதற்கு இம்முறை கால அவகாசம் வழங்கக்கூடாது என்றுதமிழீழ நாடு கடந்த அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பில் கடந்த சில வாரங்களாக பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துவரும் நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் ஆதரவு தேடும் குழுவின் உறுப்பினர்கள் ஐ. நா மனித உரிமைகள் சபைன் தீர்மானத்தை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்துக்கு எந்தவித நாட்டமும் இல்லை என்றும் குறிப்பாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டபடி வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டிராத முற்றிலுமான ஒரு உள்ளக பொறிமுறையையே இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் இதனை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் எடுத்துரைத்து வருவதாக அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஷோபனா ஜீவரட்ணம் தெரிவித்தார்.
அத்துடன் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டபடி வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடங்கிய ஒரு முறையான சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுதொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர்களை வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.




