இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது நீதி நிலைநாட்டப்படுவதை தாமதிக்கும்: அனுராதா மிட்டால் எச்சரிக்கை
ஐ நா மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு வெறுமனே கால அவகாசத்தை வழங்குவது நீதிக்காக ஏற்கனவே பல வருடஙகள் காத்திருப்பவர்களுக்கு அதனை மேலும் தாமதிக்கும் என்று கலிபோர்னியாவின் ஓக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டால் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிப்பு செய்து ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுவரும் ஓக்லாந்து நிறுவனம் இன்று திங்கட்கிழமை “மறுக்கப்பட்ட நீதி : இலங்கையில் மீள்குடியேற்றம், இராணுவநீக்கம் மற்றும் மீள்நல்லிணக்கம் ஆகியவற்றின் மெய்நிலை அறிதல்” என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சமகளம் இணையத்தளத்துடன் மேலதிக தகவல்களை பகிர்ந்துகொண்டபோதே அனுராதா இவ்வாறு தெரிவித்தார்.
“இதுவரை ஐ நா தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் காணப்படாதிருக்கின்ற விருப்பம் மற்றும் திறன், வடக்கு கிழக்கில் தொடர்ந்து காணப்படும் இராணுவ பிரசன்னம் மற்றும் பொதுமக்களை அவர்களது காணிகளில் மீள குடியமர்த்துவதில் உள்ள தாமதம் ஆகியவற்றின் பின்னனியில் வெறுமனே கால அவகாசத்தை வழங்குவது நீதிக்காக ஏற்கனவே பல வருடஙகள் காத்திருப்பவர்களுக்கு அதனை மேலும் தாமதிக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கை இராணுவம் போர்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுபவர்கள் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பில் கதைப்பவர்கள் நாட்டின் எதிரிகளாக கருதபப்டுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சு எச்சரித்திருக்கும் அதேவேளை ஐ நா தீர்மானத்தின் கீழ் சர்வதேச ஈடுபாட்டுக்கு கடப்பட்டுள்ளபோதிலும் அதனை முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதாக குறிப்பிட்ட அனுராதா மிட்டால் ஐ நா மனித உரிமைகள் சபையானது எதையுமே செய்யாமல் இருப்பதை புகழுவதற்கு பதிலாக இலங்கை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தவறி இருப்பதை எடுத்துச்சொல்லி நீதியை நிலைநாட்டுவதற்கு ஒரு சர்வதேச பொறிமுறையை முன்மொழியவேண்டும் என்று கூறினார்.




