செய்திகள்

“இலங்கைப் பிரஜைகள் இரணைத்தீவிற்குச் செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கக் கூடாது”

இலங்கைப் பிரஜைகள் இரணைத்தீவிற்குச் செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கக் கூடாது என நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான ருக்கி பெர்ணாண்டோ முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த விசாரணையின்போது ஆணைக்குழு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

“கிளிநொச்சி மாவட்டத்தின், இரணைத்தீவுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி செல்ல முயன்ற போது என்னை கடற்படையினர் தடுத்தன் மூலம் எனது அடிப்படை உரிமை மீறப்பட்டது” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சட்டரீதியாக தடைகள் இருந்தால் மாத்திரமே முன்னனுமதியைப் பெறுவதற்கு கோரிக்கை வைக்க வேண்டும் அல்லது அறிவித்தல் கொடுக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நடமாடும் சுதந்திரம் இலங்கை அரசியல் யாப்பு பிரிவு 14 (1) (எச்) மற்றும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ள சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தீர்மானம் 12 கீழ் அளிக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்திய அந்த ஆணைக்குழு, “எதிர்காலத்தில் இரணைத்தீவிற்கு குடிமக்கள் செல்லும் போதும் அவர்களின் நடமாடும் சுதந்திரத்தில் குறுக்கீடுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால், இதில் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதோ அல்லது இந்த விடயத்தை இணக்கப்பாடு காணும் வழிமுறைகளுக்கு எடுத்துச் செல்வதோ முறையானதாக இருக்காது” என தனது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.

-(3)