செய்திகள்
இலங்கையர் என்று சொல்ல நாம் வெட்கப்பட இந்த நாட்டை ஆட்சி புரிந்தோரே காரணம்
நாங்கள் எல்லோரும் இலங்கையர் என்று சொல்வதற்கு வெட்கப்படுவதற்கு இந்த நாட்டினை ஆட்சிபுரிந்த, புரிந்து கொண்டிருக்கின்ற
சிங்கள அரசியல்வாதிகளே காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்திபூங்காவில் மகாத்மா காந்தியின் 68 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டபோது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த யோகேஸ்வரன் எம்.பி. மேலும் கூறுகையில் ;
இலங்கையும் இந்தியாவும் அந்நியரின் ஆட்சிக்குட்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டு, சுதேச பண்பாடுகள் ஒழிக்கப்பட்டு பல துன்பியலை அனுபவித்த காலத்தில் இந்தியாவின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து அகிம்சை வழியில் போராடிய பெருமகன் மகாத்மா காந்தி காந்திய போராட்டம் என்பது உலக வரலாற்றில் மிக முக்கியத்துவமானதாக உள்ளது. பிறர் உயிர்களை வதையாது தங்களை வதைத்துக் கொண்டு நியாயத்தை கோரிக்கொண்டு நாட்டின் விடுதலைக்காக போராடியதே அந்த முக்கியத்துவத்துக்கு காரணம்.
அந்தப் போராட்டமே இந்தியாவினை விடுதலை என்ற அளவுக்கு அழைத்துச் சென்றது. தனது நாட்டின் விடுதலை வேண்டும் என்பதற்காக எந்த உயிரையும் வதையாது அகிம்சை வழியாக போராடினார்.
இன்று பலர் அகிம்சை என்று சொல்கிறார்கள். மனதார கூட மற்றவருக்கு துன்பம் நினைக்காததே உண்மையான அகிம்சையாகும். அந்தவகையில் காந்தி வெளிப்படைத் தன்மை கொண்டவராக, மனதார யாருக்கும் கேடு நினைக்கும் எண்ணப்பாங்கை கொள்ளாது தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அர்ப்பணித்தவர்களாக உருவாக்கி இந்தியாவின் விடுதலைக்காக சாத்வீக வழியில் போராடினார். நீண்ட காலமாக நடந்த அந்தப் போராட்டத்தினை முடக்குவதற்காக அந்நியர்களினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றினை சகித்துக் கொண்டு அகிம்சை என்னும் ஆயுதத்தினைக் கொண்டு மாபெரும் வெற்றி பெற்ற பெருமகன் மறைந்த தினம் இன்றாகும்.
1947 ஆம் ஆண்டு அந்நியரிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரத்தினை பெற்றுக் கொடுத்திருக்காவிட்டால் நாங்களும் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. அங்கு பல தியாகங்களை செய்து சுதந்திரத்தினைப் பெற்றார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதால் இலங்கை இலகுவாக சுதந்திரத்தினைப் பெற்றுக் கொண்டது. இலங்கை எந்த இழப்பும் இன்றி சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்தவர் காந்தி.
அந்த சுதந்திரத்தினை இலங்கையில் எல்லா இனங்களும் எல்லா மதங்களும் சந்தோசமாக பெற்றுக் கொண்டோம்.
ஆனால், இன்று பெற்ற சுதந்திரத்தினை நியாயபூர்வமாக அனுபவிக்க முடியாத இனங்களாக பௌத்தம் தவிர்ந்த ஏனைய இனங்கள் காணப்படுகின்றன.
ஆகவே , காந்தி காட்டிய வழியில் பல சாத்வீக போராட்டங்களை நடத்த வேண்டும். தந்தை செல்வநாயகம் காந்தியின் வழியை பின்பற்றி இலங்கை தமிழரசுக் கட்சி ஊடாக பல சாத்வீக போராட்டங்களை நடத்தினார். அப்போதைய ஆட்சியாளர்கள் அதனை ஏற்றுக் கொண்டு சில ஒப்பந்தங்களுக்கு முன்வந்தார்கள். ஆனால், அந்த சாத்வீக போராட்டம் இங்கிருந்த இனவெறி பிடித்தவர்கள் மற்றும் சில இனவெறி பிடித்த மதகுருமாரினால் புறந்தள்ளப்பட்டது. இதன் காரணமாக இந்த நாட்டில் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
அகிம்சை வழியில் போராடிய காந்திக்கு அந்நியர்கள் அளித்த மரியாதையை போன்று இந்த நாட்டின் பெரும்பான்மை எனக் கூறுகின்ற சிங்கள பௌத்த இனம் இங்கிருந்த ஏனைய இரு தேசிய இனங்களுக்கும் உரிமையை வழங்க முன்வந்திருந்தால் இந்த நாட்டில் பாரிய அழிவுகள் ஏற்பட்டிருக்காது. நாங்கள் உரிமைக்காக போராடும் அவசியமும் ஏற்பட்டிருக்காது.
அங்கு எல்லோரும் நாங்கள் இந்தியர்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால், இங்கு நாங்கள் எல்லோரும் இலங்கையர் என்று சொல்வதற்கு வெட்கப்படுகின்றோம். இதற்கு இந்த நாட்டினை ஆட்சிபுரிந்த, புரிந்து கொண்டிருக்கின்ற
சிங்கள அரசியல்வாதிகளே காரணம்.
இந்த நாட்டில் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னர் காந்தியின் வழியை மீண்டும் பின்பற்றியுள்ளோம். அதனை இந்த நாட்டின் அரசாங்கம் உணர்ந்து நியாயபூர்வமான அரசியல் உரிமையினை இரண்டு தேசிய இனங்களுக்கும் வழங்க வேண்டும் என்றார்.
n10




