செய்திகள்

இலங்கையில் இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்ததாக 8 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர்.

காங்கேசன்துறைக்கும் மாதகலுக்கும் இடையிலான கடற்பரப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு நாட்டுப் படகுகளில் இவர்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட இந்த மீனவர்களை மல்லாகம் நீதிமன்றம் வரும் 17ஆம் தேதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பினுள், எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளை, இலங்கைக் கடற்பரப்பினுள் மீன்பிடிப்பதற்குத் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய மீனவர்கள் வலியுறுத்தி கோரி வருகின்றனர்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள், அரசாங்கப் பிரதிநிதிகள் கூடி பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சு வார்த்தைகள் இதுவரை பலனளிக்கவில்லை.

n10