செய்திகள்

இலங்கையில் ஏன் ‘சிவசேனா’? அதன் பின்னணி என்ன?

இலங்கை அரசாங்கம் சிங்களபௌத்தமயமாக்கலிற்கு ஆதரவளிப்பதாக சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ள இலங்கையின் சிவசேனா அமைப்பின்தலைமை ஏற்பாட்டாளர் மறவன்புலோ சச்சிதானந்தம் இந்திய நாளிதழ் ஓன்றிற்கு குறிப்பிட்டுள்ளார். சச்சிதானந்தன் முன்னர் ஐக்கியநாடுகள் அதிகாரியாக செயற்பட்டு பின்னர் தமிழ்தேசியவாதியாக மாறியவர்.

இது குறித்து அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் இந்துமதத்தை ஏனைய மதங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக குழுவொன்று சிவசேனை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இலங்கையின் வடமாகாணத்தின் தமிழர்கள் அதிகமாக வாழும் நகரான வவுனியாவில் இதனை குறிக்கும் நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றன.

இந்த அமைப்பின் தோற்றம் குறித்து இந்து விற்கு கருத்து தெரிவித்த அமைப்பின் தலைமை ஏற்பட்டாளர் மறவன்புலோ சச்சிதானந்தன், இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தின் சிவசேனவுடன் எங்களிற்கு நேரடிதொடர்பில்லை, ஆனால் அவர்களின் ஆதரவு எங்களிற்குள்ளது எனகுறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எங்கள் அமைப்பு தற்போதுதான் ஆரம்பகட்டத்தில் உள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் மதமாற்றத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம். இந்தியாவில் உள்ள பல அமைப்புகளின் ஆதரவுடனேயே நாங்கள் இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளோம். சிவ்சேனா, விஸ்வஇந்து பரிசத், கோவாவை தளமாக கொண்ட அமைப்பு போன்றவைகளுடன் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.

Siva-Senai-founder-at-sanatan-sanstha-foundation-Programme

நாங்கள் எங்கள் அமைப்பிற்கு பல பெயர்களை தெரிவுசெய்தோம், எனினும் இலங்கையின் பெரும்பான்மையான இந்துக்கள் சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள் என்பதால் சிவா என்ற பெயர் வருவதே பொருத்தமாகயிருக்கும் என நினைத்தேன். அதனால் சிவசேனா என பெயரிட்டோம்.

இலங்கையில் இந்துக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். அரசாங்கம் சிங்களபௌத்த குடியேற்றத்தை ஆதரிக்கின்றது, மதமாற்றம் என்பது இந்துக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாகவுள்ளது, இந்துக்களிற்கு மாத்திரம் உலகின் எந்தநாட்டினது ஆதரவும் இல்லை,
இந்தியாவின் அமைப்புகள் எங்களின் இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. நான் அந்த அமைப்பின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.

இந்துக்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் 25 மாவட்டங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பியோகேஸ்வரனுடன் இணைந்து நாங்கள் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அரசியலிற்குள் மதத்தை கொண்டுவருவதையோ அல்லது அரசியலை மதமயப்படுத்துவதையோ தனது கட்சி எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் சிவசேனா இயக்கத்தின் செயற்பாடுகளை அடிப்படையாக வைத்துபார்க்கும்போது இது சிறந்த நடவடிக்கையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த அமைப்பின் தோற்றம் குறித்து தொடர்புகொண்டு கேட்டவேளை வெளிநாடுகளில் சிவ்சேனாவின் கிளைகள் எதுவும் இருப்பது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என அதன் தலைவரின் ஊடகசெயலாளர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் எங்களிற்காக பணியாற்றுபவர்கள் உள்ளனர். ஆனால் இலங்கையில் அவ்வாறான எவர் குறித்தும் நான் அறியவில்லை, எவரும் எங்களிடம் அதற்கான அனுமதியை கோரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் தமிழர்கள் சிவ்சேன பிரிவொன்றை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டின் எமது கிளையுடன் இணைந்து அவர்கள் எங்கள் கொள்கையை முன்னெடுப்பார்கள் என குறிப்பிட்டார் சிவசேன நாடாளுமன்ற உறுப்பினர் ஓருவர்.