இலங்கையில் நல்லாட்சியை வலுப்படுத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு!
இலங்கையில் வலுவான ஆட்சியை ஏற்படுத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக இலங்கையின் சட்டம் மற்றும் பொருளாதாரத் துறையை வலுப்படுத்த அமெரிக்க உதவி புரியும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் ரிச்சாட் ஈ.ஹோக்லன்ட் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத் தேர்தல் மாற்றம் இலங்கை மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். பிரிவினை அரசியல் மற்றும் போலி முதலாளித்துவத்தில் இருந்து இலங்கையை மாற்றி நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இந்த புதிய பாதை நோக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாகவும் சட்டம், பொருளாதாரம் உள்ளிட்ட ஆட்சித் துறையை வலுப்படுத்த உதவி அளிக்கும் என்றும் ரிச்சாட் ஈ.ஹோக்லன்ட் கூறியுள்ளார்.
புதிய மாற்றமானது இலங்கை மக்களுக்கு கிடைத்த வரம் என்றும் அமெரிக்க நலன் என்றும் அதனால் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நல்லாட்சியை வலுப்படுத்தி மனித உரிமைக்கு மதிப்பளித்து இந்திய கடலில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக வொஷிங்டன் சர்வதேச வர்த்தக மாநாட்டில் உரையாற்றிய அவர் தெரிவித்தார்.




