செய்திகள்

”இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம்: தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும்” ஸ்டாலின் மோடிக்கு கடிதம்

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் தயாரிக்கப்படும் போது தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்துமாறு கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து அந்நாட்டின் தமிழ்ப் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து, தங்கள் அச்சங்களையும் கவலையையும் தெரிவித்தனர். அதனடிப்படையில், நம் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் பாதிக்கப்படாமல், அவர்களின் சமவுரிமையைக் காக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என தமிழக முதல்வர் சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தப் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அங்கு வாழும் தமிழ் மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
முன்மொழியப்படும் மாற்றங்கள் இலங்கையில் மீண்டும் ஒற்றையாட்சிக்கு வழிவகுத்து, தமிழர்களை அடிமைப்படுத்தி, அவர்களது நியாயமான அரசியல் சுயநிர்ணய உரிமையைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இத்தகு சூழலில், மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து, சிறுபான்மையாக உள்ள தமிழரின் உரிமைகளைக் காத்து, பன்மைத்துவம் & சமத்துவம் ஆகிய கோட்பாடுகளை நிலைநிறுத்தும் வகையில் கூட்டாட்சியியல் ஏற்பாடுகளை அரசியலமைப்புத் திருத்தத்தில் சேர்க்க இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்திட வேண்டும்.