இலங்கையில் மீண்டும் கொவிட் அச்சமா?
கொவிட்-19 நோயாளர்களை அடையாளம் காண தற்போது குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் கொழும்பில் மற்றுமொரு பாரிய அளவிலான கொரோனா தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கண்டறிய முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, நேற்று நான்கு புதிய கொரோனா தொற்றாளர்கள் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரை 671,642 கொரோனா தொற்றாளர்கள் மற்றும் 16,800 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை,தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், நகரில் மீண்டும் கொவிட்-19 பரவும் அபாயம் இல்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், எனவே தீவிரமான நோயாளர்கள் அல்லது தொற்றாளர்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கொவிட் -19 தொற்றாளர்கள் கொழும்பில் தொடர்ந்து பதிவாகி வருகிறது.




