இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக ஏப்ரலில் மற்றுமொரு பேச்சுவார்த்தை
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பேச்சுவார்த்தையயொன்றை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் தென்னிந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படை மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் கடற்படை அதனை மறுத்துள்ளது. எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. இதில் தவறுகள் ஏற்பட்டிருப்பின் அவர்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கப்படும். அத்துடன் இந்தியாவுக்குள்ளேயே சிறிய ரக படகு பிரச்சினைகள் உள்ளன. தாக்குதல் சம்பவமும் சிறியரக படகிலேயே நடந்துள்ளது. இதன்படி குறித்த பிரச்சினை உள்ளக பிரச்சினையாக இருக்குமா என்ற சந்தேகமும் நிலவுகின்றன. உள்ளக பிரச்சினையாக இருந்தால் அதனை அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இதேவேளை மீனவர் பிரச்சினை தீர்க்கக் கூடிய பிரச்சினையே ஆகும். கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வுகள் எட்டப்படவில்லை. அடுத்த மாதம் மற்றுமொரு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தீர்வு கிடைக்கவேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம். -(3)




