செய்திகள்

இலங்கை தொடர்பில் கனடா, பிரிட்டன், பிரான்ஸ் கவலை: 13ஐ வலியுறுத்தும் இந்தியா!

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியானது அங்கு மனித உரிமைகளை மேலும் சீர்குலைக்க வழிவகுக்கும் என்றும் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றும், ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆரம்ப அமர்வில் பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

குறிப்பாக நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு தற்போதைய நெருக்கடியானது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கனடா கூறியுள்ளது.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு உட்பட, போராட்டக்கார்கள் மீதான சமீபத்திய நடவடிக்கை குறித்து நியூசிலாந்து கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் முக்கியமானவை என்றும் நியூசிலாந்து மீண்டும் வலியுறுத்தியது.

அத்தோடு இலங்கையின் நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அமுல்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

இதேவேளை 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதி, பொருளாதார மீட்சிக்கு இந்த அதிகாரப் பகிர்வும் இலங்கை இனப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வும் தேவை என வலியுறுத்தினார்.

இதேவேளை பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த போதிலும், மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.

-(3)