”இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்”: மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தல்!
இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளன.
சர்வதேச மன்னிப்புசபை, ஃபோரம் ஏசியா, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு ஆகியவையே வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான, தற்போதைய ஆணைகளை வலுப்படுத்தும் மற்றும் நாட்டின் சீரழிந்து வரும் மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்கும் வகையில் வலுவான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.
இந்த தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்று குறித்த நான்கு அமைப்புக்களும், பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.
கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவது உட்பட, நடப்பு துஷ்பிரயோகங்களுக்குத் தீர்வு காணவும் இலங்கைக்கு இந்தத் தீர்மானத்தின் மூலம் அழைப்பு விடுக்க வேண்டும்.
இலங்கை, கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் மனித உரிமைகள் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கையில் கடந்தகால சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக நீதியைக் கோரி வருகின்றனர். அதே நேரத்தில் அடுத்தடுத்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை மீறி, பொறுப்புக்கூறலைத் தடுத்து, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை உயர் பதவிக்கு உயர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில், இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இலங்கை தொடர்பான தமது அறிக்கையில்,ஆழ்ந்த இராணுவமயமாக்கல், நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் இல்லாமை, தண்டனையின்மை என்பன கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கான சூழலை உருவாக்கியது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் விபரித்துள்ளார்.
-(3)




