இலங்கை யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட கொத்துக் குண்டுகள்: வெளிப்படுத்தும் புகைப்படங்கள்
இலங்கையின் 26 வருட கால உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமையை உறுதிப்படுத்துபவையான பிரதிமைகள் தென்படுகின்றன. பொது மக்களுக்கு எதிராக இந்த வெடிமருந்து தொகுதியை நாட்டின் ஆயுதப் படைகள் நகர்த்தியிருக்கக்கூடுமென பரிந்துரைக்கும் புதிய ஆதாரம் மேலெழுந்திருக்கின்றன என்று பிரிட்டனின் “த கார்டியன்’ பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.
வெளியாகியிருக்கும் இந்த விடயங்கள் தற்போதைய இலங்கை அரசாங்கத்திடம் பாரதூரமான கேள்விகளை எழுப்பும் தன்மை கொண்டதாக காணப்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்தில் யுத்தத்தின் இறுதி நாட்களின் போது இராணுவத்தின் நடவடிக்கையை மேற்பார்வை செய்திருந்த அமைச்சரவையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளடங்கியுள்ளனர். 2008 இன் பிற்பகுதி மற்றும் 2009 இன் முற்பகுதியில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு அண்மித்த இடங்களில் கண்ணிவெடி அகற்றும் குழுக்களினால் கண்டுபிடிக்கப்பட்ட கொத்துக் குண்டுகளை உருவகப்படுத்தும் புகைப்பட ஆதாரம் தமக்கு வழங்கப்பட்டிருப்பதாக அப்பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
முன்னாள் கண்ணி வெடி அகற்றுவோரின் வாக்குமூல உறுதியுடன் இந்தப் புகைப்பட பிரதிமையும் வெளிவந்திருக்கின்றது. அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்த மோதல் சூனிய வலயங்களுக்குள்ளும் இந்த யுத்த தளவாடங்களை தாங்கள் அடையாளம் கண்டிருந்ததாக முன்னாள் கண்ணி வெடி அகற்றுவோரில் சிலர் தெரிவித்திருந்தனர். யுத்த காலத்தின் போது பொது மக்களின் பாதுகாப்பிற்காக அறிவிக்கப்பட்டிருந்த மோதல் சூனிய வலயத்திற்குள் சுமார் 3 இலட்சம் பேர் குழுமியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 1983 2009 வரை இடம்பெற்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாட்டின் இராணுவம் யுத்தத்தை நடத்தியது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ்ச் சமூகத்திற்கு சுதந்திரமான நாட்டை வென்றெடுப்பதற்காக விடுதலைப் புலிகள் என அறியப்பட்ட பிரிவினைவாத கிளர்ச்சிப் படையினர் மோதலில் ஈடுபட்டிருந்தனர். இந்தக் கொடூரமான யுத்தத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாமென மதிப்பிடப்படுகிறது. வடக்கிலுள்ள வன்னிப் பிராந்தியத்தைச் சூழவுள்ள பகுதிகளில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் அதிகளவானோர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. புகைப்படப் பிரதிமையொன்றில் வெடிக்காத அO 22.5 கீகூ என்ற கிளஸ்டர் குண்டு சுண்டிக்குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.
யுத்தம் முடிவடைவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சர் என்ற பதவியில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்துள்ளார். போர் உபாயத்தை அதிகளவுக்கு வழிநடத்தியவர் எனக் கருதப்பட்ட கோதாபய ராஜபக்ஷவிடமிருந்து தற்காலிகமாக அவர் அந்தப் பொறுப்பை வகித்திருந்தார். சிறிசேனவின் தற்போதைய அமைச்சரவையின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவரான சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக அச்சமயம் இருந்துள்ளார். “ஹலோ ட்ரஸ்ட்’ என்ற உலகிலுள்ள பாரிய கண்ணி வெடி அகற்றும் அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவரினால் கொத்துக் குண்டுகளின் புகைப்படங்கள் கார்டியன் பத்திரிகைக்கு கசிந்துள்ளன. பாரிய ஏவுகணையை ஹலோ ட்ரஸ்ட்டின் உறுப்பினர்கள் தோண்டிக் கொண்டிருப்பது பிரதிமைகளில் தென்படுகிறது. அத்துடன் கொத்துக் குண்டுகள் அல்லது குண்டுகள் வெவ்வேறு இடங்களில் காணப்படுவது பிரதிமைகளில் தென்படுகிறது. இந்த ஆயுதங்களின் தன்மை தொடர்பாக சுயாதீனமான ஒத்துழைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆயுதங்கள் தொடர்பான சிரேஷ்ட ஆய்வாளரினால் வழங்கப்பட்டிருக்கின்றது. படங்களிலுள்ள பொருளை அவர் அடையாளம் கண்டுள்ளார். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொத்துக் குண்டுகள் மற்றும் வெடிக்காத கொத்துக் குண்டுகள் என அந்த மீதமாக காணப்பட்டவை அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருக்கின்றன.
ஜெனீவாவில் கடந்த வாரம் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது அமர்வு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த விடயங்கள் வெளிவந்துள்ளன. யுத்தம் முடிவுக்கு வந்த போது இழைக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளுக்கான பதிலளிக்கும் கடப்பாட்டை வழங்குவது தொடர்பாக இலங்கை அரசின் முன்னேற்றங்கள் ஜெனீவா பேரவை அமர்வில் கேள்விக்குட்படுத்தப்படவிருக்கின்றன. ஐ.நா. மற்றும் மனித உரிமைக் குழுக்கள் பல அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தன. அந்த அறிக்கைகளில் இலங்கைப் படையினரால் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கக்கூடுமென கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினரோ அல்லது ஆயுதப் படைகளோ பதிலளிக்கும் கடப்பாட்டைக் கொண்டவர்களாக ஏற்படுத்தப்படவில்லை. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் புலிகளின் இறுதியான நிலைகளை நெருங்கிக் கொண்டிருந்த போது மோதல் சூனிய வலயங்களுக்குள் பொதுமக்களை ஒன்றுசேருமாறு அரசாங்கம் ஆலோசனை கூறியிருந்தது. அந்தப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட மாட்டாதென இலங்கை இராணுவம் உறுதியளித்திருந்தது. அந்தப் பாதுகாப்பு வலய அமைவிடம் மூன்று தடவைகள் இடமாற்றப்பட்டது.
ஆரம்பத்தில் சுதந்திரபுரம் பகுதியில் 20 சதுர மைல் பரப்பில் இருந்த அந்த பாதுகாப்பு வலயம் பின்னர் ஒடுங்கிய கரையோரப் பகுதிக்கு மாற்றப்பட்டது. இராணுவம் முன்னேறியபோது அந்தப் பகுதி மேலும் சுருங்கியிருந்தது. இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என கருதப்பட்ட இடங்களுக்குள் அட்டூழியங்கள் இழைக்கப்பட்டதற்கான நம்பகரமான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்களை ஐ.நா. மற்றும் ஏனைய முகவரமைப்புகளின் அறிக்கைகள் கொண்டிருக்கின்றன. இந்த வலயங்களுக்குள் அரச படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதனால் 70 ஆயிரம் பேர் வரை இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேவேளை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பொது மக்களை பயன்படுத்தியதாகவும் வெளியேறிய பொது மக்கள் மீது துவக்குச் சூட்டை நடத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் முன்னைய அரசாங்கம் தன்மீதான இக்குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தது. கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளையும் முன்னைய அரசாங்கம் நிராகரித்திருந்தது. சர்வதேச சட்டத்திற்கு அமைவாக இராணுவம் செயற்பட்டதென சிறிசேனவும் தெரிவித்திருந்தார். இலங்கையில் போர்க்குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்துவதாக அவர் உறுதியளித்திருக்கின்றார். ஆனால் இதுவரை கலப்பு நீதிமன்றத்தின் மூலம் விசாரணையை நடத்துவதற்கான அழைப்புகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. இலங்கை மற்றும் சர்வதேச சட்டத்துறை நிபுணர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தின் மூலம் விசாரணை செய்வதற்கான பரிந்துரை 2015 இல் ஐ.நா. அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.
கொத்துக் குண்டுகள் தனித்துவம் உடையவையாகும். அவை வெடித்துச் சிறிய சிறிய குண்டுகளாக வெடித்துச் சிதறும் ஆற்றலைக் கொண்டவை. பரந்தளவு நிலப்பரப்பில் அவை சிதறிச் செல்பவை. கொத்துக் குண்டுகளை சனச்செறிவுள்ள பகுதிகளுக்கு நகர்த்துவதானது போர்க்குற்றங்களின் தன்மையை கொண்டதாகும். யேமனில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டை இந்த வருட முற்பகுதியில் தெரிவிக்கும் போது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதனை அவதானித்திருந்தார்.
இதேவேளை 2011 மற்றும் 2012 இல் வன்னிப் பிராந்தியத்தின் வட பகுதியில் ஆனையிறவுக்கு சமீபமாகவுள்ள பச்சிலைப்பள்ளி பகுதியைச் சூழவுள்ள பல இடங்களில் மொத்தம் 42 கொத்துக் குண்டுகளை ஹலோ ட்ரஸ்ட் கண்டுபிடித்திருந்ததாக அதன் பேச்சாளர் கார்டியனுடனான தொடர்பாடல்களின் போது ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அந்த ஆயுதத்தின் தன்மை தொடர்பான நிரூபணம் குறித்து ஹலோ ட்ரஸ்ட் கருத்தைத் தெரிவித்திருக்கவில்லை. 2009 இல் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடுமையான யுத்தம் இடம்பெற்ற பகுதியாக அந்த இடம் இருந்தது.
இதேவேளை மோதல் சூனிய வலயத்துக்குள் கண்ணிவெடி அகற்றும் பணியில் தான் ஈடுபட்டிருக்கவில்லையென ஹலோ ட்ரஸ்ட் அழுத்தி உரைத்திருக்கிறது. இலங்கைக்கு வெளியே வசிக்கும் வட்டாரமே இந்தப் புகைப்படங்களுக்கான மூலவளமாக உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலும் முல்லைத்தீவின் வடக்கிலுள்ள சாலைக்கு சமீபமாகவும் பிரதிமைகளில் காணப்பட்ட வெடிமருந்து தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்திருக்கிறது. யுத்தத்தின் இறுதி மாதங்களின் போது சாலை மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பகுதிகள் கடுமையான சண்டை இடம்பெற்ற பிராந்தியங்களாக இருந்தன. யுத்த காலத்தின் போது வன்னியைச் சூழவுள்ள பல பகுதிகளில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் மேலெழுந்திருந்தன. ஆனால் அவை ஒருபோதும் நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. மோதல் சூனிய வலயம் உட்பட பல இடங்களில் கொத்துக் குண்டு பயன்படுத்தப்பட்டது தொடர்பான நம்பகரமான குற்றச்சாட்டுகள் ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருநதது. 2012 இல் ஐ.நாவிலுள்ள ஆயுதங்கள் தொடர்பான நிபுணர் ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று கசிந்திருந்தது. புதுக்குடியிருப்புக்கு சமீபமாக கொத்துக் குண்டுகளை அமைப்பு அடையாளம் கண்டிருப்பதை அந்த மின்னஞ்சல் வெளிப்படுத்தியிருந்தது.
புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றிருந்ததாகவும் 2009 இல் இலங்கை இராணுவத்தால் கொத்துக் குண்டுகளுடன் தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாக்குதல்களுக்குப் பொறுப்பாக அரச படைகள் இருந்தார்கள் எனப் பரிந்துரைக்கும் மேலதிக ஆதாரமும் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறுபட்ட கண்ணிவெடி அகற்றும மூன்று குழுக்களின் முன்னாள் ஊழியர்களின் வாக்குமூலத்தின் வடிவில் இவை வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் கார்டியனுடன் தங்களை இனங்காட்டாமல் கதைத்துள்ளனர். மைன்ஸ் அட்வைசரி குரூப் (எம்.ஏ. ஜி.), ஹலோ ட்ரஸ்ட், கண்ணிவெடி செயற்பாட்டுக்கான சுவிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றின் முன்னாள் பணியாட்கள் யுத்தத்தின் இறுதி நாட்களின் போது கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரத்தை பார்த்திருப்பதாகக் கூறியுள்ளனர். அரசாங்கத்தினால் மோதல் சூனிய வலயங்கள் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றில் கொத்துக் குண்டுகளை கண்டறிந்ததாகவும் இரு அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். மோதல் சூனிய வலயத்திற்குள் கொத்துக் குண்டுகளை நகர்த்தக்கூடிய ஆற்றலை இலங்கை விமானப் படை மற்றும் இராணுவமே கொண்டிருந்ததாக நம்பப்படுகிது. அப்பகுதியில் வான் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருக்கவில்லை. இந்த பணியாட்களின் பதிவுகளுக்கு இலங்கையிலுள்ள பொது மக்கள் மத்தியிலான சாட்சியங்களும் மற்றும் வெளிநாடுகளிலுள்ள சாட்சியங்களும் ஆதரவளித்திருக்கின்றன. அத்துடன் முன்னாள் உதவிப் பணியாளர் ஒருவரும் இதே விதமான கருத்தை தெரிவித்திருக்கிறார். இவர்கள் யாவரும் இனங்காட்டிக் கொள்ள வேண்டாம் என்ற நிபந்தனையுடன் கதைத்துள்ளனர்.
கண்ணிவெடி அகற்றும் முகவரமைப்புகள் தாங்கள் கண்டுபிடிப்பவை தொடர்பாக பகிரங்கப்படுத்துவதில்லை.ஆனால் இலங்கையின் தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு நிலையத்திற்கு அவர்கள் கண்டுபிடித்தவை தொடர்பாக அறிக்கை இடுமாறு கோரப்பட்டிருந்தன. இலங்கை அரசாங்கம் மற்றும் ஐ.நா.வினால் ஆதரவளிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அமைப்பாக இலங்கை தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு நிலையம் உள்ளது. அO 2.5 கீகூ மிதிவெடிகளின் எச்சசொச்சங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அந்தக் கொத்துக் குண்டுகள் அடையாளங் காணக்கூடிய சாதகமான தன்மையை“ கொண்டிருப்பதாக கண்ணிவெடி அகற்றும் இரு அமைப்புகளின் முன்னாள் அதிகாரிகள் கார்டியன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர். மைன்ஸ் அட்வைசரிஸ் குரூப்பின் (எம்.ஏ.ஜி.) முன்னாள் ஊழியர் ஒருவர் தனது பாதுகாப்புக்காக தனது பெயரைக் குறிப்பிட வேண்டாமென கேட்டுக் கொண்டதுடன், சனச்செறிவு நிறைந்த பகுதியில் கொத்துக் குண்டு ஒன்றை அமைப்பு கண்டுபிடித்ததாக கார்டியனுக்கு கூறியுள்ளார்.புதுக்குடியிருப்புக்கு சமீபமாக உள்ள மோதல் சூனிய லயங்களில் ஒன்றாக அப்பகுதி இருந்தது என அவர் கூறியுள்ளார். அந்தப் பகுதியைச் சூழ ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் 2012 இல் ஆயுதங்களை கண்டுபிடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கொத்துக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் கூறியுள்ளார். சிதறிக் கிடந்த பகுதிகள் ஒரே இடத்தில் சேர்க்கப்பட்டன என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார்.எவ்வாறாயினும் எம்.ஏ. ஜி. தகவலை பகிரங்கமாக பகிர்ந்துகொள்வதில்லை. ஏனெனில் அவர்களின் பாதுகாப்பைக் கருதி தகவலை பகிர்ந்து கொள்வதில்லையென அவர் கூறியுள்ளார்.
சுவிஸ் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனமான எவ்.எஸ்.டி. யைச் சேர்ந்த கண்ணி வெடி அகற்றும் மற்றொரு முன்னாள் அதிகாரி தொழில்நுட்ப ஆலோசகர் உறுதிப்படுத்தியதாக கொத்துக் குண்டுகளை கண்டுபிடித்தமையை நினைவு கூர்ந்துள்ளார். ஆனால் அதனை பகிரங்கபடுத்தவில்லையென அவர் தெரிவித்திருக்கிறார். முதலாவது மோதல் சூனிய வலயப் பகுதியில் 2010 இல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புதுக்குடியிருப்புக்கு சமீபமாகவுள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் அவை காணப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். பயத்தினால் தாங்கள் கண்டுபிடித்தவற்றை பகிரங்கப்படுத்துவதற்கு முன்வரவில்லையென அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
கண்ணிவெடி அகற்றும் இரு குழுக்களிடமும் கருத்துத் தெரிவிக்குமாறு அணுகப்பட்ட போது எம்.ஏ.ஜி.உடனடியாக பதிலளிக்க முன்வரவில்லை. அதேவேளை எவ்.எஸ்.டி. அறிக்கையை விடுப்பதற்கு மறுத்து விட்டது. ஹலோ ட்ரஸ்ட்டிமிருந்து புகைப்படங்களை கசியவிட்டிருந்த வட்டாரம் கொத்தணிக் குண்டுகள் கண்டுபிடிப்புகள் தொடர்பான அறிக்கையினையிட்டு மிகவும் சலிப்படைந்த நிலையில் கண்ணி வெடி அகற்றும் குழு இருந்ததாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. ராஜபக்ஷ ஆட்சியினால் நெருக்கடியான நடவடிக்கைக்கு அவர்கள் அஞ்சியிருந்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மாதிரியான எந்தவொரு தகவலையும் அதிகாரிகள் சிரேஷ்ட முகாமைத்துவத்துக்கு வழங்காமல் வைத்திருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படும் எந்தவொரு கருத்தையும் வலுவாக நிராகரிப்பதாக ஹலோ ட்ரஸ்ட்டின் பேச்சாளர் ஒருவர் கூறயுள்ளார். அறிக்கையிடும் எமது பொறுப்பை நாங்கள் மிகவும் தீவிரமானதாக எடுத்துக் கொள்கிறோம். இலங்கையில் ஹலோவினால் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் என்னால் உறுதிப்படுத்த முடியும். நாங்கள் இயங்கும் சகல நாடுகளிலும் இதனை மேற்கொள்கின்றோம். எமது மாதாந்த அறிக்கைகளில் அவற்றை வகைப்படுத்துகிறோம். அவை தேசிய அதிகார மட்டத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த விடயமானது இப்போதும், எப்போதும் காணப்படுகின்றது. நடுநிலையான அமைப்பு என்ற ரீதியில் எஞ்சியிருக்கும் வெடி பொருட்களிலிருந்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஹலோ ட்ரஸ்ட்டின் பொறுப்பாக உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை தனது அடையாளத்தை பாதுகாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட சர்வதேச உதவி அமைப்பொன்றின் தன்னார்வ பணியாளர் ஒருவர் கார்டியனுக்கு கூறுகையில் முல்லைத்தீவுக்கு சமீபமாகவுள்ள இரண்டாவது மற்றும் இறுதி மோதல் சூனிய வலயத்திற்குள் கொத்துக்குண்டுத் தாக்குதலுக்குத் தான் சாட்சியமாக உள்ளதாக கூறியுள்ளார். சைக்கிளின் டைனமோ போன்ற வெடிக்காத போர்த் தளபாடங்களையும் தான் பார்த்திருந்ததாகவும் அதன் ஒருபுறத்தில் சிறு துண்டு ரிப்பன் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். தமது அறிவிப்பு பலகையில் கொத்துக் குண்டின் மாதிரிப் படங்களை அநேகமான சர்வதேச அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. விழிப்புணர்வுக்காக அதன் அபாயம் குறித்து இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான கொத்துக் குண்டு தாக்குதலை கண்டதாக அவுஸ்திரேலியாவிலுள்ள கார்டியனால் பேட்டி காணப்பட்ட சாட்சி ஒருவர் தெரிவித்திருக்கிறார். கொத்துக் குண்டு ஒன்று வெடித்துச் சிறிய குண்டுகளாக மேலெழுந்து செல்கிறது. அது மரங்களையும் ஆட்களையும் தாக்கியுள்ளதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். ஏதோவொன்றை திரும்பத் திரும்ப அடிப்பது போன்று சத்தம் உணரப்படுமென அவர் விபரித்திருக்கிறார். வயிற்றை பிசையக் கூடிய துர்நாற்றமும் இருக்கும். அதை ஆட்கள் மணக்கும் போது எரிந்த நாற்றமாக அது இருக்கும் என்று ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு முன்னர் சாட்சியமளித்த வட்டாரமொன்று கூறியிருந்தது. பாதுகாப்பு வலயங்களில் கொத்துக் குண்டு வீச்சு தொடர்ந்து இடம்பெற்றிருந்ததாகவும் அது யுத்த நோக்கத்தை நிறைவேற்றவில்லையெனவும் பொது மக்களை தாக்கியதாகவும் ஐ.நா. வின் 2015 போர்க்குற்ற விசாரணையில் சாட்சியமளித்திருந்த மற்றொருவர் கார்டியனுக்கு கூறியுள்ளார்.
இந்த அண்மைய குற்றச்சாட்டுகள் நம்பகரமானதும் செயற்பாட்டுத் திறன் கொண்டதுமான பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறையின் தேவையை முன்னிறுத்துகின்றன என்று சர்வதேச யூதர்கள் ஆணைக்குழுவிற்கான ஆசியா மற்றும் ஓசேனியாவுக்கான பிராந்தியப் பணிப்பாளர் சாம் ஷரிபி கார்டியனுக்கு தெரிவித்திருக்கிறார். 7 வருடங்கள் கடந்து விட்டன. இலங்கை அரசாங்கம் தமிழ் பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஆயுதங்களின் ரகங்கள் தொடர்பாக இப்போதும் மறுத்து வருகின்றது என்று இனப் படுகொலைக்கு எதிரான அமைப்பின் தலைவர் ஜான் ஜனநாயகம் கூறியுள்ளார். கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமையை மறுப்பதும் இரசாயன தடவியல் ஆதாரம் கடந்த 7 வருடங்களில் அழிந்துள்ளமையும் சர்வதேச விசாரணையாளர்களும் தடயவியல் நிபுணர்களும் எந்தவொரு எதிர்கால போர்க்குற்ற விசாரணை பொறிமுறையின் போதும் உள்ளடக்கப்படுவது முக்கியமானதென்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றன என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கட்டுரையை தயாரிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளப்பட்டது. ஆனால், கருத்து தெரிவிப்பதற்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கப்படவில்லையென்று த கார்டியன் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
(லண்டன் கார்டியன்)




