செய்திகள்

இலங்கை வந்தார் சுவீடன் வெளிவிவகார அமைச்சர்;நாளை யாழ்.விஜயம்

மூன்று நாள் பயணமாக சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோம் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை,  பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வரவேற்றார்.

வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் கொழும்பு வந்துள்ள சுவிடன் வெளிவிவகார அமைச்சர் இன்று,   வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன், பேச்சுக்களை நடத்துவார்.

வெளிவிவகார அமைச்சின் நடக்கவுள்ள இருதரப்புப் பேச்சுக்களை அடுத்து, இன்று காலை 11 மணியளவில், இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.

அதேவேளை, ஜனாதிபதி, பிரதமர்  மற்றும் சபாநாயகர் ஆகியோரையும், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோம் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவீடன் வெளிவிவகார அமைச்சருடன், அந்த நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் குழுவொன்றும் கொழும்பு வந்துள்ளது.

நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோம், வடக்கு மாகாண முதலமைச்சர், ஆளுனர் மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன் சிவில் சமூகத்தினருடனும், கலந்துரையாடவுள்ள அவர், இடம்பெயர்ந்தோர் நலன்புரிமுகாமுக்கும் சென்று பார்வையிடவுள்ளார்.

அதேவேளை, சுவீடன் வெளிவிவகாரக் கொள்கையில் பெண்களின் பங்கு தொடர்பாக லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோம் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார்.

சுவீடன் வெளிவிவகார அமைச்சர், மார்கொட் வோல்ஸ்ரோம் 1998-99 காலப்பகுதியில் சிறிலங்காவில், வேல்ட் வியூ குளோபல் மீடியாவின் உதவி நிறைவேற்றுத் தலைவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.sweeden-fm-harsha-1

n10