செய்திகள்

இலட்சியப்போர்வாள்!

ஒரு கூர்வாள்

பேரினவாதத்தின்

நிகழ்சி நிரலுக்குள் – இல்லை 

நிகழ்சி நிழலில் ….

பட்டை தீட்டப்பட்டு

காட்சிப் படுத்தப்படுகிறது !

 

முட்டி மோதப் பயந்த

எட்டப்பர் கூட்டத்தின்

கெட்டித்தனத்தை

பின்னட்டையல்லவா

கொட்டிச் சொன்னது !

 

விடுதலை வேட்கையின்

நெஞ்சுரம் கண்டு

அஞ்சிய கரங்களால்

நஞ்சில் நனைத்து

தயார்படுத்தப்பட்டுள்ளது !

 

நேரடி சமரொன்றில்

நெஞ்சில் பாய்ச்சவல்ல 

எதிர்பாரா தருணத்தில்

முதுகில் குத்திக்கொல்லும் 

முன்னேற்பாடாக ….!

 

 பகடைக் காய்களையும்

பலிக்கடாக்களையும் – எம்

இளைய தலைமுறை

இனங்கண்டு உய்த்தறிய

இதுவொரு ஆதார ஆவணம் !

 

‘முறிந்த பனைகள்’

சரிந்த நிலத்தில்தான்

விடியலின் திசைநோக்கி

எங்கள் பயணங்கள் தொடர்ந்தது !

 

ஒரு கூர்வாளென்ன ….

ஓராயிரம் கூர்வாட்கள்

தீட்டப்படட்டும்

 உருவிய எம் இலட்சியப்

போர்வாள் என்றும்

அதை வெல்லும்!

                     

                        – கொற்றவை