இளையராஜாவை சந்தித்த ‘நம்ம அணியினர்’
நலிந்த தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, இளையராஜாவை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டு உள்ளதாக, விஷால் தலைமையிலான ‘நம்ம அணி’, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின்போது வாக்குறுதிகொடுத்தனர். மேலும், இதன்மூலம் 100 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ உள்ளோம் என்றும் கூறியிருந்தனர்.
தற்போது, விஷால் தலைமையிலான அணி, தேர்தலில் பெருவாரியான பதவிகளில் வெற்றிபெற்றதையடுத்து, இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் இளையராஜாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
சந்திப்புக்குப் பிறகு பேசிய நடிகர் விஷால், ‘இது வெறும் நிகழ்ச்சி அல்ல. இளையராஜாவை வைத்து நாங்கள் செய்யப்போகும் இந்த நிகழ்ச்சி, இந்தியத் திரைப்படத்துறை சார்பில் நாங்கள் அவருக்குச் செய்யும் கடமை. இது, நிகழ்ச்சிக்கும் மேலான ஒன்று. இந்த நிகழ்ச்சி, மிகப் பெரிய விழாவாக அமையும். இந்த விழாவை நாங்கள் நடத்துவது, எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். நிகழ்ச்சிகுறித்து என்ன செய்யப்போகிறோம் என்பதுபற்றி வரும் காலங்களில் கூறுவோம். சென்னையில்தான் இந்த நிகழ்ச்சி நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இளையராஜா, ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் நுழைந்துவிட்டார். எனவே, வாழும் சரித்திரமான இளையராஜாவுக்கு ஒரு மரியாதையே இவ்விழா’ என்று தெரிவித்துள்ளார்.
n10




