செய்திகள்

இவ்வார அமைச்சரவை தீர்மானங்கள்

2021.03.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்:

01. தேசிய பாதுகாப்பு கல்லூரியை, ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரமளித்தல்

‘தேசிய பாதுகாப்பு கல்லூரி’ பாராளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவுவதற்காக ‘இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டம்’ சட்டமூலத்தை தயாரிப்பதற்கு 2019 திசம்பர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் 2021 மே மாதம் ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதுடன், 11 மாத கால முழுநேரப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு ndc தகைமைச் சான்றிதழை வழங்குவதற்கான சட்ட ரீதியான அங்கீகாரமும் மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளில், குறித்த நாடுகளின் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளில் னெஉ பாடநெறிக்குச் சமாந்தரமாக தேசிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து விஞ்ஞான இளமானி அல்லது தத்துவமானி பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அதனால், குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் கொம்சட்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தான் கொம்சட்ஸ் பல்கலைக்கழகம் (COMSATS UNIVERSITY PAKISTAN) உயிரியல் மருத்துவ விஞ்ஞான பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சி நிலையம், உயிர் தசைக் கூற்றுப் பொறியியல் துறைக்கு ஏற்புடைய சர்வதேச காப்புரிமைப் பத்திரங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள நிறுவனமாகும். குறித்த பல்கலைக்கழகத்துடன் உயிரியல் பொருட்கள், தசைக்கூற்றுப் பொறியியல், மீள்புதுப்பிக்கத்தக்க மருத்துவ விஞ்ஞானம், புலன்சார்ந்த மற்றும் உயிர்ப் புலன்கள் போன்ற துறைகளுக்கு ஏற்புடைய அறிவுப் பரிமாற்றங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் முக்கியம் வாய்ந்த துறைகள் தொடர்பாக ஒத்துழைப்பு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் கொம்சட்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களுக்கு கட்டிடமொன்றை நிர்மாணித்தல்

தற்போது புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் பல இடங்களில் நடாத்திச் செல்வதால், அமைச்சு மற்றும் குறித்த நிறுவனங்களை ஒரு கட்டிடத்தில் நிர்மாணிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. அதற்காக கொழும்பு 10, டீ.ஆர் விஸயவர்த்தன மாவத்தையில் முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்திற்காக தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 09 மாடிகளைக் கொண்ட கட்டிடம் பொருத்தமானதென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கட்டிடம் மற்றும் குறித்த காணியை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுக்கு பெற்றுக் கொள்வதற்கும், அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்ததும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களையும் குறித்த கட்டிடத்தில் தாபிப்பதற்கும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. தேசிய புத்தாக்க முகவராண்மை நிறுவனத்தை (NIA) நிறுவனமயமாக்கல்

தேசிய புத்தாக்கச் சூழலை உருவாக்கி, அதனை மேம்படுத்தி நடாத்திச் செல்வதற்காக அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரை ஒருங்கிணைப்பு செய்தல் மற்றும் புத்தாக்கச் சிந்தனையிலிருந்து சந்தைப்படுத்தல் வரைக்கும் குறித்த புத்தாக்கங்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய புத்தாக்க முகவராண்மை நிறுவனம் (NIA) நிறுவப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தை நிறுவனமயப்படுத்தும் பணி கல்வி அமைச்சின் கீழ் காணப்படும் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் முன்னுரிமைப் பணிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளது. தற்போது குறித்த இராஜாங்க அமைச்சின் கீழ் செயற்படும் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் புத்தாக்கத் துறை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு செயலகம் (COSTI) தேசிய விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் புத்தாக்க அதிகாரசபையாக (NASTICA) நிறுவுவதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள தேசிய விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் புத்தாக்க அதிகாரசபையின் (NASTICA) நோக்கம் மற்றும் பணிகள் பெரும்பாலும் தேசிய புத்தாக்க முகவராண்மை நிறுவனத்தின் (NIA) பணிகளுக்கு சமமாகும். அதனால், குறித்த அதிகாரசபையை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும், விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு செயலகத்திற்கு (COSTI) ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் ஏனைய வளங்களைப் பயன்படுத்தி தேசிய புத்தாக்க முகவராண்மை நிறுவனத்தை (NIA) நிறுவனமயமாக்குவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. ‘ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி தொடர்பாக முகாமைத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேசிய குழுவை’ நியமித்தல்

தற்போது காணப்படும் சட்ட வரையறைகளுக்கமைய இலங்கையில் ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விப் பொறிமுறை மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்குரிய நிறுவனங்களின் சில படிநிலைகளுக்கமைய இடம்பெறும் ஒருங்கிணைப்புக்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், குறித்த துறையின் தரநியமங்களை தேசிய மட்டத்தில் பேணுதல் மற்றும் கண்காணிப்பு செய்யும் செயன்முறையை வலுவூட்டும் தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்பள்ளிகள், ஆரம்பப் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் பகல் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பாக தேசிய ரீதியான ஒழுங்குபடுத்தல்கள், கண்காணிப்பு மற்றும் தீர்மானமெடுத்தல் போன்றவற்றுக்கு குறித்த துறைசார்ந்த கல்வியியலாளர்கள் மற்றும் தீர்மானம் எடுக்கும் உத்தியோகத்தர்களுடன் கூடிய ‘ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி தொடர்பான முகாமைத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேசிய குழு’ எனும் பெயரில் குழுவொன்றை நியமிப்பதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. நோர்வே அரசாங்கத்தின் தொழிநுட்ப உதவியுடன் இலங்கை சமுத்திரவியல் வளங்கள் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் ஐஐ ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தல்

இலங்கை மற்றும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பின் கீழ் ‘இலங்கையின் சமுத்திரவியல் வளங்கள் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் ஐ ஆம் கட்டம் 2017 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறித்த கருத்திட்டத்தின் ஐஐ ஆம் கட்டம் நோர்வே நாட்டின் நிதியனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தின் கீழ் இலங்கை சமுத்திரவியல் வளங்கள் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக நோர்வே நாட்டின் சமுத்திரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கை தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் குறித்த படிமுறையின் கீழ் கடல்சார் தகவல்களை திரட்டல், தகவல்களைப் பேணுதல், பயன்பாட்டை மேம்படுத்தல் மற்றும் சமுத்திரவியல் கடல்சார் வளங்களை நிலைபெறுதகு வகையில் முகாமைத்துவப்படுத்துவதற்கு கடல்சார் ஆராய்ச்சிகளின் இயலளவை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) மற்றும் நோர்வே நாட்டின் சமுத்திரவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. கொவிட் 19 தொற்று நிலைமையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து பேரூந்து சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளல்

கொவிட் 19 தொற்று நிலைமையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து பேரூந்து சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பேரூந்து உரிமையாளர்களிடமிருந்து அறிவிடப்படும் புதுப்பித்தல் கட்டணம், தாமதக் கட்டணம், விலைமனுக் கோரல் கட்டணம், நேரசூசி கட்டணம், உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திர கட்டணம் போன்றவற்றை 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை விடுவிப்பதற்காக 2020 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பேரூந்து சேவைகளை மீள்நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என்பதால், குறித்த மானியங்களுடன் கீழ்க்காணும் மானியங்களையும் 2021 மார்ச் மாதம் 31 ஆம் வரை நீடிப்பதற்காகவும் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• வருடாந்த விலைமனுக் கோரல் கட்டணத்தின் 10% வீதம் அல்லது 15,000/= ரூபாய்கள் போன்ற பெறுமதிகளில் அதிக பெறுமதி கொண்ட தொகையை அறவிடல்

• அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திரக் கட்டணத்தின் 10% வீதத்தை அறவிடல்

• நேரசூசி மற்றும் உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணத்தை விடுவித்தல்

08. இறக்குவானை கால்நடை மருத்துவ நிலையத்தை நிர்மாணிப்பதற்காக காணி ஒதுக்குதல்

சப்பிரகமுவ மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும் இறக்குவானை கால்நடை மருத்துவ நிலையம் தற்போது இயங்கிவரும் கட்டிடம் மிகவும் பழுதடைந்து போயுள்ளமையால், புதிதாகக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக காணித்துண்டொன்று பெறுமதியை அறவிடாமல் வழங்குவதற்கு ஹப்புகஸ்தென்ன பெருந்தோட்ட கம்பனி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஹப்புகஸ்தென்ன பெருந்தோட்ட கம்பனிக்குச் சொந்தமான ஹதர்லி தோட்டத்தில் ஹதர்லி பகுதியின் 0.15 ஹெக்ரயார் காணித் துண்டை இழப்பீடு வழங்காமல் இறக்குவானை கால்நடை மருத்துவ நிலையத்தை நிர்மாணிப்பதற்கு ஒதுக்கி வழங்குவதற்காக அரச சேவைகள், மாகாண உள்ளுராட்சிகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குளங்கள்ஃவாய்க்கால்கள் பாதுகாக்கப்பட்ட வனங்களின் எல்லைகளை இடுவதற்காக அளத்தல்

நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 04 வருட காலத்தில் 5000 குளங்கள்ஃவாய்க்கால்களை மறுசீரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறான பாரிய குளங்களின் நிலஅளவை நடவடிக்கைகளை 03 வருட காலத்தில் பூர்த்தி செய்வதற்கு தற்போது நில அளவைத் திணைக்களத்திடமுள்ள மனிதவளம் போதாதென குறித்த திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர். அதனால், குறித்த பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகம் அல்லது ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் பட்டத்தைப் பெற்று அளவையியல் பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள 70 மாணவர்களை தற்காலிக அடிப்படையில் 03 வருடகாலம் பயிலுநர்களாக நில அளவைத் திணைக்களத்திற்கு இணைத்துக் கொண்டு அவர்களை நீர்ப்பாசன திணைக்களத்திற்கு இணைப்புச் செய்து நில அளவைத் திணைக்களத்தின் சிரேஷ்ட நில அளவையாளர்கள் இருவரின் கண்காணிப்பின் கீழ் அளவையியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் காணி அமைச்சர் இருவரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. உள்ளுர் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கு புதிய கம்பனியொன்றை நிறுவுதல்

பத்திக், கைத்தறி ஆடைகள் மற்றும் ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் கொள்கைக்கமைய வெளிநாடுகளில் காட்சி அறைகளை அமைத்து குறித்த நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் சர்வதேச ரீதியாக வலுவான சந்தை வலையமைப்பை உருவாக்கி இலங்கை உற்பத்திகளை விரிவாக்கம் செய்வதற்காக முன்னணி நிறுவனமொன்றை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக லங்கா சலுசல கம்பனியின் 100% வீதம் பங்குகளுடன் கூடிய கம்பனியாக புதிய கம்பனியொன்றை தாபிப்பதற்கும், குறித்த கம்பனியால் நியமிக்கப்படும் வெளிநாட்டு முகவர்கள் மற்றும் காட்சி அறைகள் மூலம் பத்திக் தயாரிப்புக்கள், கைத்தறி நெசவு உற்பத்திகள் மற்றும் உள்ளுர் ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட வேறு உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கை பொலிசை நவீனமயமாக்கல்

இலங்கை பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிப்படுத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கு பேணுவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனமாவதுடன், நாடளாவிய ரீதியில் மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் ஆற்றிவருகின்றது. தற்போது பின்பற்றப்படுகின்ற சம்பிரதாய முறைகளை மாற்றியமைத்து, இலங்கைப் பொலிசை நவீனமயப்படுத்தும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதன் கீழ் நவீன பொறிமுறைகளுக்கமைய மோட்டர் வாகனங்களை வழிநடாத்தும் செயன்முறையின் பயனுள்ள வகையில் வினைத்திறனாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக டிஜிட்டல் முறையான தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மோட்டார் வாகன மற்றும் வீதிப் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் நடவடிக்கைகளின் வினைத்திறன் தொடர்பாக முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இலங்கை பொலிசின் முழுமையான நவீனமயமாக்கல், வழிநடாத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்தல் கருத்திட்டத்தை திட்டமிடுவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. ஹொரன, மில்லாவ பிரதேசத்தில் ஒளடத வலயத்தை அமைத்தல்

புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கமைய அரச மருந்தாக்கல் பொருட்கள் உற்பத்தி கூட்டுத்தாபனம் அதிகமான மருந்துகளை உள்ளுரில் உற்பத்தி செய்வதற்கான மூலோபாய பொறிமுறைகளை பின்பற்றி வருகின்றது. அதற்கமைய, தற்போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரபொக்க மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் ஒயாமடு போன்ற பிரதேசங்களில் ஒளடத வலயங்களின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இன்னொரு ஒளடத வலயம் களுத்துறை மாவட்டத்தின் ஹொரன, மில்லாவ பிரதேசத்தில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த ஒளடத வலயத்தில் என்பியல் மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள், புற்றுநோய் ஒழிப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் வில்லைகள்; உற்பத்தி மற்றும் இதய அறுவைச் சிகிச்சை உபகரணங்கள், உள் கண் வில்லை உற்பத்திகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த கருத்திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், முதலாம் கட்டம் 08 பில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டு முதலீட்டின் அடிப்படையில் 2021 மார்ச் மாதம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. முன்மொழியப்பட்டுள்ள ஒளடத வலயத்தை நிறுவுவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான மில்லாவ பிரதேசத்தில் அமைந்துள்ள 64 ஏக்கர் 83.3 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை ஒதுக்குவதற்காக அரச மருந்தாக்கல் பொருட்கள் உற்பத்தி கூட்டுத்தாபனம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையில் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்ட கருத்திட்டத்தை துரிதமாக மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சின் செயலாளரின் தலைமையிலும் ஏனைய ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய செயற்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கும், குறித்த செயற்பாட்டுக் குழுவுக்கு தேவையான தொழிநுட்ப விடயங்களை சமர்ப்பிப்பதற்காக அரச மருந்தாக்கல் பொருட்கள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் தலைமையில் கருத்திட்ட முகாமைத்துக் குழுவொன்றை நியமிப்பதற்கும், பூர்வாங்க மற்றும் பின்னரான ஒப்பந்த சேவைகள் மற்றும் நிதி ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு கருத்திட்ட முகாமையாளராக முழுமையான அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமான செலன்திவா முதலீட்டு கம்பனியை நியமிப்பதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களும் சுகாதார அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் வழங்கப்படும் தீர்ப்புக்களுக்கு எதிராக மேன்முறையீடு, மீளாய்வு மற்றும் ரிட் மனு தாக்கல் செய்யும் போது பிணைத் தொகை செலுத்தும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்தல்

ஊழியர்களின் தொழிலை முடிவுறுத்துவதைத் தடுக்கும் நோக்கில் 1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் தொழில் வழங்குநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே, தொழில் வழங்குநர் மற்றும் ஊழியர்களுக்கிடையே ஏற்படும் கைத்தொழில் பிணக்குகளுக்கு துரிதமான நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இரு சட்டங்களின் கீழ் ஊழியர்களுக்கு சார்பாக கட்டளைகளை பிறப்பிக்கும் போது குறித்த கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்காக ஒருசில தொழில் வழங்குநர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நிலைமையின் கீழ் குறித்த கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 15 – 20 வருடங்கள் செல்வதாகவும், குறித்த காலப்பகுதியில் தொழில் வழங்குநர்களின் இறப்பு, வெளிநாடுகளுக்குச் செல்லல், நீதிமன்றத்தில் ஆஜராகாமை மற்றும் கம்பனியை மத்தியஸ்தம் செய்தல் போன்ற காரணங்களால் ஊழியர்கள் எதிர்பார்க்கின்ற நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு இயலாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. அதனால், 1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் சட்டத்தின் கீழ் தொழில் ஆணையாளர் நாயகத்தின் கட்டளைக்கு எதிராகவோ அல்லது குறித்த கட்டளையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராகவோ நீதவான் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அல்லது 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் உறுப்புரைகளுக்கமைய கைத்தொழில் தகராறுகள் தீர்ப்புக்கள் அல்லது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொழில் வழங்குநர் நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்லும் போது பிணைத் தொகையை வைப்புச் செய்த பின்னர் மாத்திரம் நீதிமன்ற செயன்முறையை ஆரம்பிக்கும் வகையில், 1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம் போன்றவற்றை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 1990 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்பு சட்டம் திருத்தம் செய்தல்

தொழிநுட்பம், வணிக, திறன் மற்றும் சுற்றாடல் போன்ற துறைகளில் சமகால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏதுவாக அமையும் கைத்தொழில் கொள்கை வகுப்புக்களை மேற்கொள்வதற்காக தற்போது காணப்படும் 1990 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்பு சட்டத்தின் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையென்பது தெரியவந்துள்ளது. அதற்கமைய, சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் 1990 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலும் ஏற்புடைய அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை கைத்தொழில் அமைப்புக்கள்ஃகைத்தொழில் சபை பிரதிநிதிகள் உள்ளடங்கியதாக செயற்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

-(3)