இஸ்ரேல் பிரதமர்,ஹமாஸ் தலைவருக்கு எதிராக பிடியானை பிறப்பிக்க கோரிக்கை!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் ஆகியோருக்கு எதிராக போர்க்குற்றம் தொடர்பாக பிடியானை பிறப்பிக்கப்பட வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோசவ் கல்லன்ட் மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைமைகளான முகமது தியாப் இப்ராஹிம் அல் மஸ்ரி, ஹமாஸின் இராணுவப் பிரிவின் தளபதி உள்ளிட்ட சிலருக்கு எதிராகவும் பிடியானை பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணி கரீம் ஏஏ கான் கேசி இன்று (20) திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரின் பின்னணியிலே இவ்வாறு பிடியானை பிறப்பிக்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்கை நியூஸ் எனும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து மனிதர்களின் உயிர்களுக்கும் சமமான மதிப்பு உண்டு என்பதனை நிறுபிக்கும் வகையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கரீம் ஏஏ கான் கேசி தெரிவித்துள்ளார்.
அத்துடன், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்பார்கள் என நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, அவர்கள் மீது கொலை, பணயக்கைது, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பட்டியலை கோடிட்டுக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சாட்சியங்களை பரிசீலித்து இந்த விடயம் தொடர்பில் முன்னோக்கி செல்ல முடியுமா என்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்வதற்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
-(3)




