செய்திகள்

ஈழத்தமிழர்கள் பொருளாதார இனப்படுகொலையிலிருந்து மீள்வதற்கான மக்கள் எழுச்சி

சிவா செல்லையா

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்கலைவிற்கு அடிப்படை காரணம் மகிந்த அரசினால் 2008 – 2009ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட தமிழின அழிப்பே ஆகும். தமி;ழின அழிப்பிற்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பெருமளவில் சீனாவில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்தும், ரஸ்யாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன. மேலும் தொழில்நுட்ப இராணுவ ஒத்துழைப்புக்கள் இந்தியாவில் இருந்தும், மேற்குலக நாடுகளில் இருந்தும் கிடைத்தன. 2009ம் ஆண்டிற்கு பின்பான ஐ. நா. மனித உரிமை அவையின் கூட்டத் தொடரின்போக்கு தமிழின அழிப்பினை எவ்வாறு உலகம் மூடிமறைக்கின்றது என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றது. தமிழின அழிப்பின் உச்சத்தில் ஐ. நா. பொதுச் செயலாளரால் அளிக்கப்பட்ட உறுதிமொழியான தமிழர்களுக்கான நீதியான அரசியல் தீர்வு செயற்படுத்தப்படாது எட்டாக்கனியாக மாறி உள்ளது. ஈழத்தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ நீதியைப் பெற்றுக் கொள்ள முடியாது சூழல் உள்ளது.

இலங்கையின் வருடாந்த செலவீனங்களை நோக்குமிடத்து அதிக அளவு பணம் இன்றும் இராணுவ, கடற்படை, விமானப்படை என்பவற்றுக்கு ஒதுக்கப்பட்டு தமிழர்கள் தாயகபூமி தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு அடக்கப்பட்டுக்கொண்டு உள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. அவற்றிற்கு மேலாக சிங்கள பௌத்த விகாரைகள் பெருமளவில் வடக்கு கிழக்கில் தாபிக்கப்பட்டு வருகின்றன. இவை ஓர் கலாச்சார இனப்படுகொலைகள் ஆகும்.

அடுத்து தமிழர் வளங்கள் யாவும் சிங்கள அரசால் சுரண்டப்படுகின்றது. கொரோனாத் தொற்றின் பொருளாதார வீழ்ச்சி, ரஸ்சியாவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு என்பன இலங்கையின் பொருளாதாரத்தை தற்போது இந்தியாவின் பொருளாதாரத்துடன் வலுக்கட்டாயமாக இணைக்கும் சூழலுக்கு இட்டுச் சென்று உள்ளது.

இன்றைய பொருளாதார தாழ்நிலையில் இலங்கையின் வடகிழக்கில் சிங்கள இராணுவ நிர்வாக மேலாதிக்கம் உள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரப் படுகொலைகளுக்கு உட்படுவர். எனவே ஈழத்தமிழர்கள் தமிழர் விடுதலைக்காக மாபெரும் ஒத்துழையாமை இயக்கத்தை உருவாக்கி மக்கள் எழுச்சிமூலம் தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவ பொருளாதார அழிகருவிகளை அகற்ற வேண்டும்.

இரண்டாம் உலகப்போரில் மகாத்மா காந்தி அவர்கள் எவ்வாறு வெள்ளையனே வெளியேறு எனப் போராடி ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தினை அடிபணிய வைத்தாரோ அவ்வாறே இன்று ஈழத்தமிழர் நவீன ஒத்துழையாமைப் போராட்டம் மூலம் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பொருளாதார இனப்படுகொலையை முறியடித்து எம்மின விடுதலைக்கான பாதையை விரைவாக்குவோம். மாறாக சிங்கள அரசுடன் இணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவ முனைதல் எம்மினத்தை நாங்களே அழிப்பதாக அமையும். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமிழ் நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற மக்கள் போராட்டம் மிகவும் முக்கியமானது.