ஈழத்து மாவீரர் நாள்
கருக்கொண்ட மேகம் பன்னீர்குடமுடைக்கும் கார்த்திகை மாதம் -எங்கும்
தருக்களெல்லாம் தலை தோய்ந்துதண்மையை வீசும்
அருக்கனும் குறிப்பறிந்து தன் வெம்மையை குறைக்கும்
சுருக்கென இருள் கவிந்து பகலின் நீளத்தை சுருக்கும்
வருத்தமின்றி மிடுக்கோடு ஈழத்தில் நாம் வாழ்ந்த காலம் – கார்த்திகையில்
தெருக்களெல்லாம் உணர்வோடு விழாக்கோலம் பூணும்
மருங்கெங்கும் வானொலியில் எழுச்சிப் பாடல்கள் கேட்கும்
பெருங்குளிரும் எமக்குள்ளே மிகுந்த வெப்பத்தை பாய்ச்சும்
நெருப்பாற்றை நீந்திக் கடக்கும் நெஞ்சுரம் கொண்ட -எம்
கரும்புலி மாவீரர்களின் ஆற்றலை மனமெண்ணி வியக்கும்
செருக்களத்தில் பகைச்சரிக்க உயிரீந்த மறவர்களின்
திருவுருவப் படத்திற்காய் செங்காந்தள்கள் பூக்கும்
நெருங்கியே எதிரியின் கடற்பலத்தினை நொருக்கிய கடற்புலிகலின் வீரம் -தாம்
உருவாக்கிய வான்கலமேறிச் சென்று வரலாறாயான வான்புலிகளின்தீரம்
திரும்பியேவராது விடைபெற்று போன வேவுப்படை அணிகள் இறுதித் தருணம்
போருக்கான பயிற்சியிலே சாவணைத்த தோழர்கள் தோழியர் முகங்கள்
திரும்ப திரும்ப அவர்களின் நினைவுகள் எண்ண திரையினில் தோன்றும் -எமது
இருவிழிகளில் நீர்வழிந்து தேசத்தை த்தவரின் கல்லறைகளை நனைக்கும்
கருங்கல் மனமும் அக்காட்சி கண்டால் தனக்குள்ளே மெழுகாக உருகும்
குருதியில் குளித்தமண் அவர்கள் வித்துடல்களை அணைத்து மீண்டும் சிலிர்க்கும்
ஒருமுகமாய் யாவரும் ஈகைச் சுடர்களேற்ற துயிலும்இல்லங்கள் ஒளிரும்- அங்கு
அருந்தலைவன் பேருரைகேட்டு எங்கள் கலங்கிய உள்ளங்கள் தெளியும்
கருக்கொண்ட மேகம் இன்று கண்ணீராய் மழை பொழியும் கார்த்திகை மாதம்
நெருஞ்சிமுட்கள் நெஞ்சைத் தைக்கும் துயரோடு புனிதர்களுக்கு ஏற்றுகின்றோம் தீபம்
-பிறேமலதா பஞ்சாட்சரம்



