செய்திகள்

ஈழம் சினிமா: குறுந்திரைப்படங்களின் வகிபாகம்

சினிமா என்னும் கலைவடித்தின் வயது நூறினைத் தாண்டிவிட்டது. தமிழ்பேசும் மக்களுக்கும், சினிமாவுக்குமான பரிச்சயம்கூட 100 வருடங்களை எட்டிவிட்டது. ஆனால், ஈழத்துத் தமிழ்ச் சூழலின் திரைப்பட உருவாக்கப் பாரம்பரியமானது சொற்ப காலங்களைக் கொண்டதாகும். நூறுவருட வரலாறு கொண்ட ஒரு கலைப் பாரம்பரியத்தைக் கிட்டத்தட்டப் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பது போன்றதுதான் ஈழத்துத் தமிழ்ச் சினிமா முயற்சி.

இந்தியச் சினிமா ஏறத்தாள 100 வருட வரலாற்றுப் பாரம்பரியத்தினைக் கொண்டமைந்ததாக உள்ளது. சரியோ, தவறோ, ஆரோக்கியமானதோ, ஆரோக்கியம் அற்றதோ இத்தனை ஆண்டுகால சினிமாப் பாரம்பரியம், அந்த அனுபவம், அந்தப் படிப்பினைகள் அங்கு தலைமுறை, தலைமுறையாகக்  கடத்தப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. தமக்குரிய சினிமா தொடர்பான புரிதல்கள், நுட்பங்கள், அறிதல்கள் அவர்கள் மத்தியில் இரத்தமும், சதையுமாகப் பரவி இருக்கின்றன. புதிதாக அங்கு திரைப்படத் துறையில் நுழையும் ஒவ்வொருவரும் சூனியத்துக்குள் இல்லை. அவர்களைச் சுற்றி அவர்களுக்கான சினிமாவுக்கான வழிகாட்டல்கள் நிரம்பியிருக்கின்றன. அந்தக் கடலுக்குள் குதிப்பவர்கள் எவ்வாறோ வழிகாட்டப்படுவர். ஆனால், அத்தகைய கடல், ஏன் குளம்கூட ஈழத்துச் சூழலில் ஒருபோதும் இருந்ததில்லை.

sam-102

இலங்கையில் தமிழ்த் திரைப்பட வரலாறு 50 ஆண்டுகாலம் கொண்டது என்று பொதுவாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்ச் சினிமாப் பாரம்பரியத்துக்கும், இன்று பேசப்படும் அல்லது முயற்சி செய்யப்படும் ஈழத்துத் தமிழ்ச் சினிமா முயற்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதுதான் யதார்த்தம். இன்றைய ஈழத்துத் தமிழ்ச் சினிமாச் செயற்பாடுகள் அல்லது முயற்சிகள் 90களின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பமாகின்றன. 80களுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த இலங்கைத் தமிழ்ச் சினிமா முயற்சிகளை இந்தியச் சினிமாவின் விரிவாக்கமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாகவே பார்க்க முடிகின்றது. ‘அவர்கள் அங்கு செய்கின்றார்கள், நாங்கள் இங்கு அதேமாதிரிச் செய்வோம்’ என்கின்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட  முயற்சிகள் ஆகும். அதுமட்டுமன்றி, ஒரு சில தனிநபர் முயற்சிகளாக அவை இருந்தனவே ஒழிய, ஒரு திரைப்படத் தொழிற்துறையாகவோ அல்லது ஒரு தனித்துவமான சினிமாப் பாரம்பரியமாகவோ அவை வளர்த்தெடுக்கப்படவில்லை. தமிழ்த் திரைப்படத் துறைக்கான உட்கட்டுமானங்கள் எதுவும் கட்டியமைக்கப்படவும் இல்லை. ஒரு சமூக அசைவியக்கமாகவும் அது முன்னெடுக்கபடவில்லை.

இந்நிலையில்தான், காலத்தினதும் சூழலினதும் உந்துதலினால், ஈழத்துச் சூழலில் 90களின் நடுப்பகுதியில் ஒரு சிலர் தன்னார்வத்தோடு, திரைப்படம் செய்ய வெளிக்கிட்டார்கள். அந்தத் தன்னார்வப் படைப்பாளிகளுக்குக் கைகொடுத்து அவர்களை ஊக்குவித்தவர்கள் அல்லது தத்தெடுத்துக் கொண்டவர்கள் விடுதலைப் புலிகள் ஆவர்;. அதன் பின்னரே திரைப்பட உருவாக்கம், எமக்கான சினிமா, மாற்றுச் சினிமா, ஈழத்துத் தமிழ்ச் சினிமா போன்ற கருத்துநிலைகள் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் பிரபல்யம் அடையத் தொடங்கின. எடுத்த எடுப்பில் முழுநீளத் திரைப்படங்கள் செய்ய வெளிக்கிட்ட தன்னார்வப் படைப்பாளிகளைக் குறுந்திரைப்படப் படைப்பாக்கத்தை நோக்கித் திசைதிருப்பி அல்லது வழிப்படுத்தி விட்டவர்களும் விடுதலைப் புலிகள்தான். சச்சி மாஸ்டர் (ஞானரதன்) போன்றவர்கள் விடுதலைப் புலிகளின் நிதர்சனம் திரைப்படப்பிரிவினரை வழிப்படுத்துவதிலும், திரைப்படக் பயில்நெறிகளை நடைமுறைப்படுத்துவதிலும் பெரும் உழைப்பினைச் செயவிட்டனர். நிதர்சனம் வெளியீடாக மாதா மாதம் வெளிவந்து கொண்டிருந்த ‘ஒளிவீச்சு’ காணொளியானது அதன் ஒவ்வொரு இதழிலும் ஒரு குறுந்திரைப்படத்தையோ அல்லது ஒரு குறும் ஆவணப்படத்தையோ கொண்டிருந்தது. இத்தகைய குறுந்திரைப்படங்கள் பற்றிய விசமர்சனங்களையும், குறிப்புகளையும் சிறு சஞ்சிகைகளில் எழுதுவதன் மூலம் குறுந்திரைப்படங்கள் பற்றிய ஒரு தேடலைப் பல இளைஞர்கள் மத்தியில் அ.யேசுராசா போன்ற இலக்கிய, சினிமா விமர்சகர்கள் உருவாக்கியிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக 2002 ஆண்டு பிரித்தானியாவைச் சார்ந்த ஸ்க்றிப்ட்நெற் நிறுவனம் யாழப்பாணத்தில் குறுந்திரைப்பட உருவாக்லுக்கான பாரிய பயிற்சி நெறியினை யாழ் பல்கலைகழக்கழத்துடன் இணைந்து ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து ஸ்க்றிப்ட்நெற் நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வரைக்கும் பெருவாரியான தமிழ் பேசும் இளைஞர்களுக்கு துறைசார் பயிற்சிகளை வழங்கியும், தொடர்ச்சியான குறுந்திரைப்பட படைப்புகளை மேற்கொண்டும் வந்தது. இத்தகையை பயிற்சி நெறிகள், பல்வேறு பாகங்களில் இருந்தும் உருவான படைப்புகள், அவற்றுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், ஊடக ஆதரவுகள் என்பன இன்று ஈழத்துச் சூழலில் திரைப்பட உருவாக்கம் மற்றும் குறுந்திரைபடப் படைப்புகள் சார்ந்து ஒரு அலை எழவும் அது பற்றிய தன்னம்பிக்கை வளரவும் முக்கிய காரணமாக இருந்தன.

90களில் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈழத்துத் தமிழ்ச் சினிமா முயற்சியானது, இன்று ஒரு சமூக அசைவியக்கமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆயினும், இந்த அசைவியக்கமானது பயிற்சிகள், பரீட்சார்த்தங்கள் என்ற நிலையைத் தாண்டிப் போகவில்லை என்பதும் யதார்த்தமான விடயம் ஆகும். இத்தகைய நிலைமையில், ஈழத்துச் சினிமா முயற்சியில் குறுந்திரைப்படப் படைப்பாக்கச் செயற்பாடுகளின் வகிபாகம் என்பது மிகவும் காத்திரமான ஒன்றாகவும் அத்தியாவசியமானதாகவும் இருந்து வருகின்றது. அந்தவகையில், ஈழத்துத் தமிழ்ச் சினிமாச் செயற்பாட்டில் குறுந்திரைப்படப் படைப்பாக்கமானது பின்வரும் நான்கு வழிகளில் முக்கியத்துவம் பெற்றதாக அமைவதனை அடையாளம் காணமுடிகின்றது.

1. படைப்பாளிகள், கலைஞர்களுக்கான பயிற்சி

2. புதிய செல்நெறியைக் கண்டறிவதற்கான பரீட்சார்த்தக் களம்

3. புதிய திரைப்பட அனுபவத்திற்கு மக்களைப் பழக்கப்படுத்தும் கருவி

4. சர்வதேச சினிமா அரங்குக்குச் செல்வதற்கான நுழைவாயில்

இந்த நான்கு விடயங்களையும் பிரக்ஞை பூர்வமாக அறிந்து வைத்திருத்தலும், அதன் மூலம் தாம் செல்லும் பாதையைச் சரிபார்த்துக் கொள்ளலும், அவ்வப்போது அதனை மதிப்பீடு செய்தலும் ஒவ்வொரு ஈழத்துத் திரைப்படச் செயற்பாட்டாளரதும் தேவையாகவும், புத்திசாலித்தனமான வழியாகவும் உள்ளது.

sam-103

படைப்பாளிகள், கலைஞர்களுக்கான பயிற்சி

ஈழத்துத் தமிழ்ச் சூழலில் திரைப்பட முயற்சியில் இருக்கும் அனைத்துப் படைப்பாளிகள், நடிகர்கள் மற்றும் இதர கலைஞர்களுக்கான பயிற்சியாகக் குறுந்திரைப்படங்கள் அமைகின்றன. இன்றைய நிலையில் ஈழத்துச் சூழலிலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி ஏனைய நாடுகள், இனங்களிடையேயும் சரி இரண்டு விதமான குறுந்திரைப்பட முயற்சிகள் நடைபெற்று வருவதனை அவதானிக்க முடியும். ஒன்று தமது அனுபவங்களை, தமது கற்பனைகளை தமது சொந்த சந்தோசத்துக்காக ஒரு சுய வெளிப்பாடாக வெளிப்படுத்தும் குறுந்திரைப்பட முயற்சிகள். ஓவியம் வரைவது போல், ஒரு கவிதையை எழுதுவது போல் ஒரு குறுந்திரைப்படத்தை அல்லது அத்தகைய ஒரு காணொளியைப் படைப்பதற்குத் தொழிநுட்பத்தின் இன்றைய வளர்ச்சியும், அதன் இலகு பாவனையும் வசதி செய்து கொடுக்கின்றது. ஒருவர் தனது காதலிக்கு அல்லது தன் பெற்றோருக்கு, தன் நண்பர்களுக்கு ஒரு வாழ்த்து மடல் எழுதிக் கொடுப்பதுபோல் ஒரு குறுந்திரைப்படத்தைச் செய்துகொடுக்க முடியும். பயின்முறையில் செய்யப்படும் குறுந்திரைப்பட முயற்சிகள் அல்லது அமைச்சூர் படைப்பாக்கங்கள் என்றும் இத்தகைய செயற்பாட்டைச் சொல்லலாம். மற்றையது, ஒரு திரைப்படப் படைப்பாளியாக வரவேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படும் முயற்சிகள். தன் துறை, கனவுகள், நீண்டகால இலட்சியம் அல்லது நோக்குடன் அதற்கான பயிற்சியாகச் செய்யப்படும் குறுந்திரைப்பட முயற்சிகள் இவை. இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், திரைப்படப் படைப்பாளியாக வரவேண்டும் எனும் நோக்கில் மேற்கொள்ளப்படும் குறுந்திரைப்பட முயற்சிகளுக்கும், சுய வெளிப்பாட்டுக்காக, சுய சந்தோசத்துக்காகப் பயின்முறையில் செய்யப்படும் குறுந்திரைப்பட முயற்சிகளுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு திரைப்படப் படைப்பாளியாக வர நினைப்பவர், குறுந்திரைப்பட உருவாக்கத்தைத் தனக்கான சுய கற்கைநெறியாகப் பாவனை செய்துகொள்ள வேண்டும். தனது குறுந்திரைப்படச் செயற்பாட்டின் ஊடாகத் திரைப்பட உருவாக்கத்திற்கான திறனையும், அதற்கான நுட்பங்கள், உத்திகளைக் கற்றறிந்து கொண்டே இருக்க வேண்டும். திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர் போன்ற பாவனையுடன் செயற்பட வேண்டும். திரைப்படக் கல்லூரியில் இருந்து ஒருவர் வெளியேறும்போது, அவரிடம் ஒரு படைப்பு இருக்க வேண்டும். அந்தப் படைப்பு அவரின் அடையாளமாக, அவருக்கு ஒரு விசிட்டிங் கார்ட்டாக இருக்க வேண்டும். அதனைக் காட்டியவுடன் இவர் எத்தகைய படைப்பாளி, சமூகம் பற்றியும், திரைப்படப் படைப்பாக்கம் பற்றியும் இவர் எத்தகைய அணுகுமுறையினைக் கொண்டுள்ளார் அல்லது எத்தகைய மனப்பாங்குடன் உள்ளார் என்பதனை அந்தப் படைப்பு ஓரளவு சொல்லிவிட வேண்டும்.

அடுத்தது, குறுந்திரைப்படப் படைப்பாக்கத்தை ஒரு சவாலாக ஏற்க வேண்டும். பெரும்பாலான குறுந்திரைப்படப் படைப்பாளிகள் குறுந்திரைப்படத்துக்கான நேர வரையறையைத் தமக்கு வசதியான விடயமாக எடுத்துக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது. வுhநல வயமந வை கழச பசயவெநன. உண்மையில், ஒரு குறுந்திரைப்படத்துக்கான மூளை உழைப்பு ஒரு முழுநீளத் திரைப்படத்துக்குத் தேவையான மூளை உழைப்பினைவிட எவ்விதத்திலும் குறைவானது அல்ல. மூளை உழைப்பு எனும்போது கதை மற்றும் திரைக்கதை உருவாக்கம் என்பன முதன்மை பெறுகின்றன. ஒரு நல்ல திரைக்கதையை உருவாக்கிவிட்டால், ஒரு திரைப்படத்தின் 70 வீத வேலை முடிந்துவிடும். ஒரு முழுநீளத் திரைப்படத்துக்கான திரைக்கதையை உருவாக்கும்போது உள்ள சவால், எவ்வாறு பார்ப்போரை இரண்டு அல்லது இரண்டரைமணி நேரம் கட்டிப்போட்டு வைத்திருப்பது என்பதாகும். ஒரு குறுந்திரைப்படத்துக்கான திரைக்கதையை உருவாக்கும்போது உள்ள சவால் எப்படி 10 அல்லது 15 நிமிடத்துக்குள் ஒரு முழுமையான கதையைச் சொல்வது என்பதாகும். மொத்தத்தில் இரண்டும் கடினமான இலக்குகளே. சவாலான விடயங்களே. இன்னும் சொல்லப்போனால், இரண்டு மணி நேரத்துக்குள் ஒரு கதையைச் சொல்வதைவிட 10 அல்லது 15 நிமிடங்களுக்குள் ஒரு கதையைச் சொல்வது அதிக சவால் உள்ள விடயம் ஆகும்.

அடுத்த விடயம், ஒரு முழுநீளத் திரைப்படத்துக்குரிய கதையைச் சுருக்கிக் கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரங்களுக்குச் சொல்லும் முயற்சிகளும் குறுந்திரைப்பட வகையாகக் கொள்ளப்படமாட்டாது. இது நாவலைச் சுருக்கி ஒரு சிறுகதையாக எழுதுவது போன்றது. சிறுகதை என்பது நாவலின் குறுகிய வடிவம் அல்ல. அதேபோன்று குறுந்திரைப்படம் என்பதுவும் முழுநீளத் திரைப்படத்தின் குறுகிய வடிவம் அல்ல என்பதனைக் குறுந்திரைப்படப் படைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும். குறுந்திரைப்படங்கள் (short films) எனப்படுபவை குறுக்கப்பட்ட படங்கள் (shortened films) அல்ல.

sam-104புதிய செல்நெறியைக் கண்டறிவதற்கான பரீட்சார்த்தக் களம்

இரண்டாவது, ஈழத்துத் திரைப்படத்துறை முழுமைக்கான செல்நெறியைக் (வுசநனெ) கண்டு கொள்ளும் அல்லது கட்டியமைக்கும் முயற்சியாகக் குறுந்திரைப்படப் படைப்பாக்க முயற்சிகள் இருக்க வேண்டியுள்ளன. அந்தவகையில், குறுந்திரைப்படம் என்பது ஒரு பரீட்சார்த்தக்களம் என்பதனை உணர்ந்தவர்களாகக் குறுந்திரைப்பட முயற்சியாளர்கள் இருக்க வேண்டும். இது பல பரீட்சார்த்தங்களைச் செய்து பார்க்கக்கூடிய ஒரு குறுநிலம். உண்மையில், இதுதான் குறுந்திரைப்படம் எமக்குத் தரும் வசதி. திரைக்கதை விடயத்தில் குறுந்திரைப்படப் படைப்பாக்கம் எந்தவகையிலும் முழுநீளத் திரைப்படத்துடன் ஒப்பிடுகையில் வசதியானதும், இலகுவானதுமான விடயம் அல்ல. ஆனால், பரீட்சார்த்தம் என்னும் வகையில் குறுந்திரைப்படங்கள் பன்மடங்கு வசதியானவையாகவும், அதற்கு இலகுவானவையாகவும் உள்ளன, முக்கியமாகப் பணச் செலவு சார்ந்து இந்த வாய்ப்பை ஒரு குறுந்திரைப்படப் படைப்பாளி பயன்படுத்தல் வேண்டும். இதுவரை திரையில் பார்க்காத கதைகளை, இதுவரை திரையில் பார்க்காத கதை சொல்லல் முறைமைகளை, காட்சிப்படுத்தல் மோடிகளை, பாத்திரங்களை, புதிய கட்டமைப்புகளை, புதிய கோணங்களை, உத்திகளைப் பயன்படுத்த முனைய வேண்டும். திரைப்படம் தைரியசாலிகளுக்கும், புதுமை விரும்பிகளுக்கும் உரிய இடம். அவர்களே இத்துறையில் நிலைத்து நிற்க முடியும். இந்தியச் சினிமாவை மறுபிரதியீடு செய்து, ‘ஆஹா எங்களாலும் இந்தியச் சினிமாவுக்கு இணையாகப் படம் செய்ய முடியும்’ என அறிக்கை விடுதல் ஒரு ஆரோக்கியமான பயிற்சி அல்ல. மாறாக, எமது சினிமா எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனைக் கண்டறிவதற்கான பரீட்சார்த்த முயற்சியாக எமது குறுந்திரைப்பட முயற்சிகள் இருக்க வேண்டும்.

அதேபோன்று, ஈழத்துப் பேச்சுவழக்கிற்குத் திரைப்படப் பார்ப்போர் பழக்கப்படவில்லை என்பதற்காக யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் நிகழும் கதையில் பாத்திரங்கள் இந்தியத் தமிழில் பேச வேண்டும் என நினைப்பது தைரியமான விடயமும் அல்ல. புத்திசாலித்தனமான விடயமும் அல்ல. குறுந்திரைப்படங்களில் பேச்சுத் தமிழைக்கூடப் பரீட்சார்த்தம் செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் குறுந்திரைப்படம் பற்றியும் அது வழங்கும் வசதி வாய்ப்புப் பற்றியும் புரிதல் இல்லாதவர்களாக இருக்கின்றனர் என்பதே அர்த்தம்.

உண்மையில், ஈழத்துச் சூழலில் ஒரு ஸ்திரமான திரைப்படச் செல்நெறி உருவாக்கப்பட்டுத் தொடர்ச்சியாக முழுநீளத் திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கக்கூடிய ஒரு சூழல் வரும் காலத்திலும்கூட, குறுந்திரைப்படப் படைப்புகள் தொடர்ந்து நடந்த வண்ணமே இருக்க வேண்டும். ஏனெனில், இந்தக் குறுந்திரைப்படப் படைப்பாக்கங்கள் மூலமாகவே தொடர்ந்து ஈழத்துச் சினிமாவுக்கான புதுமைகளைப் பரீட்சார்த்தம் செய்துகொண்டிருக்க முடியும். பல பிரபல சினிமா இயக்குனர்களே அவ்வாறு குறுந்திரைப்படத்தைப் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தி இருக்கின்றார்கள். போலன்ஸ்கி, அக்கிரா குரோசவா, அபாஸ் கியாரோஸ்தாமி போன்றவர்களின் குறுந்திரைப்படங்கள் அந்தவகையில் மிகப் பிரசித்தி பெற்றவை.

அடுத்தது, ஈழத்துத் தமிழ்ச் சினிமாவுக்கான தனித்துவத்தினைக் கட்டியெழுப்புவதற்கான பல வேலைகளை ஈழத்துக் குறுந்திரைப்படப் படைப்பாளிகளால் செய்யமுடியும். அதற்கான சூழலும், வாய்ப்பும் அவர்களைச் சுற்றி நிறைந்துள்ளது. அதனை அவர்கள் பயன்படுத்துதல் வேண்டும். பலர் எமக்கான தனித்துவத்தை, அமெரிக்காவில் இருந்தோ அல்லது ஈரானில் இருந்தோ இறக்குமதி செய்யலாம் என்ற கனவுடன் உள்ளனர். உண்மையில், எமக்கான தனித்துவங்கள் இங்கேயே, இப்போதே உள்ளன. 30 வருடகாலப் போரை எதிர்கொண்ட ஒரு சமூகம், அதன் கதை, அவை என்ன கதையாக இருந்தாலும் இந்த 30 ஆண்டுகாலப் போரின் பாதிப்பு, அதன் பின்னணியிலேயே எமது கதைகள் அமையப் போகின்றன. இதுவே யதார்த்தம். எமக்குண்டான தடைகள், அச்சுறுத்தல்கள், குறைகள், போதாமைகள் இவைகள்கூட எமது தனித்துவத்துக்கான வழிகள். இத்தகைய தடைகள், அச்சுறுத்தல்கள், குறைகள், போதாமைகளுக்குள் நின்றபடி அவற்றை எவ்வாறு மேவி, நுட்பமான வழியில் எமது படைப்புகளை வெளிக்கொணர்வது என்பதில் இருந்துதான் எமது தனித்துவம் தோற்றம் பெறத் தொடங்குகின்றது.

sam-106புதிய திரைப்பட அனுபவத்துக்கு மக்களைப் பழக்கப்படுத்தும் கருவி

எமது மக்களை, ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்னும் புதிய திரைப்பட செல்நெறிக்குப் பழக்கப்படுத்துவதற்குக் குறுந்திரைப்படங்கள் அத்தியாவசியமாக உள்ளன. ஈழத்துத் தமிழ்ச் சினிமாவிற்குரிய மிகப் பெரும் சவாலாக உள்ள விடயம் பிரதான நீரோட்டச் சினிமாவான இந்தியத் தமிழ்ச் சினிமாவினால் உருவாக்கி விடப்பட்டுள்ள இரசனை, சினிமா அனுபவம் பற்றிய எதிர்பார்ப்பு. மக்கள் இந்திய போர்மியுலா சினிமாவினால் வார்ப்புரு செய்யப்பட்டுள்ளனர். சினிமா பார்ப்பதற்கு என்று குந்தினால், அவர்களை அறியாமல் அவர்களிடம் சில எதிர்பார்ப்புகள்; வந்துவிடுகின்றன. இந்தியச் சினிமாக்கள் கொடுக்கும் அழகியல், வசனங்கள், நட்சத்திரக் கவர்ச்சிகள், பிரமாண்டக் காட்சியமைப்புகள், பாட்டுகள், ஜோக்குகள், சண்டைகள், அவை தரும் மருட்கை உணர்வுகள், கிளுகிளுப்பு, ஆக்ரோச உணர்வு, மற்றும் இன்னோரன்ன அனுபவங்கள் அவர்களுக்குத் தேவையாக உள்ளன. இத்தகைய வார்ப்புருவானது, ஊடக விளம்பரங்கள், பேட்டிகள், களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்வுகள், நடன நிகழ்வுகள், நட்சத்திர ஷோக்கள், வானொலிப் பாடல்கள், பத்திரிகைக் கட்டுரைகள், துணுக்குகள் போன்றவை மூலம் மேலும், மேலும் ஸ்திரப்படுத்தப்படுகின்றன. இது உண்மையில், தற்செயல் நிகழ்வுகள் அல்ல. இந்தியச் சினிமா போன்ற பெரும் தொழிற்பேட்டைச் சினிமாக்கள் திட்டமிட்டு இவ்வகை வார்ப்புருவைத் தொடர்ச்சியாகச் செய்த வண்ணமே இருக்கும். மேற்கைப் பொருத்தளவில் இத்தகைய வார்ப்புருவைக் ஹொலிவூட் திரைப்படத்துறை செய்து கொண்டேயிருக்கும்.

இத்தகைய ஒரு நிலையை அல்லது தடையை எதிர்கொள்ள ஈழத்துத் திரைப்படப் படைப்பாளிகளுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று இந்தியச் சினிமா எந்தெந்த உத்திகளைப் பயன்படுத்தி மக்களை வார்ப்புரு செய்துள்ளதோ அந்த உத்திகளை அவர்களைவிடத் திறமையாகவும், சிறப்பாகவும், பிரமாண்டமாகவும், அதி உயர் தொழிநுட்பத்துடனும், கவர்ச்சியுடனும் பயன்படுத்துவது. மற்றது, அவர்கள் பயன்படுத்தும் இத்தகைய உத்திகளை முற்றுமுழுதாகப் புறக்கணித்துவிட்டு மாற்று அல்லது தனித்துவமான கதைசொல்லல் உத்திகளைப் பயன்படுத்துவது. இதில் எதனை நமது படைப்பாளிகள் தேர்வு செய்வது என்பதற்கு நாம் சில கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது.

எது நடைமுறைச் சாத்தியமானது? எது ஆரோக்கியமானது? எது சமூக அக்கறை கொண்டது? எது எமது மக்களை மருட்கைக்குள் தள்ளாது, அவர்களை விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்த வல்லது? எது எமது படைப்புகளைச் சர்வதேச உலகிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்? எது எமது வாழ்வியலை யதார்த்தத்துடன் வெளிப்படுத்தும்? எது எமக்கான விடுதலைக்கு வழிவகுக்கும்? வர்த்தக ரீதியில் எமது படங்களை வெற்றியடைச் செய்ய எது எமக்கான சிறந்த வழி?எல்லாவற்றுக்கும்மேல் எது புத்திச்சாலித்தனமானது?

மேல்கூறப்பட்ட நிலையில் நின்று பார்க்கும்போது, இந்தியத் தமிழ்ச் சினிமா பயன்படுத்தும் ஆரோக்கியமற்ற, சமூக விரோத உத்திகளை முற்றுமுழுதாகப் புறக்கணித்துவிட்டு மாற்று அல்லது தனித்துவமான கதைசொல்லல் உத்திகளைப் பயன்படுத்துவது என்பதே எமக்கான வழியாக இருக்க முடியும். எமது கதைகள் தற்புதுமை உள்ளனவாக, எமது மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகப் பிரதிபலிப்பவையாக இருக்க வேண்டியுள்ளது. அப்படி வரும்போது நாம் நமது மக்களைப் புதிய சினிமா அனுபவத்துக்குப் பழக்கப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு மக்களைத் தொடர்ச்சியாக இந்த அனுபவத்துக்குள்ளாக்கிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்னும் புதிய சினிமாப் பாணியை, எமது பேச்சு மொழிகளை, வட்டார வழக்குகளை மக்களுக்குப் பழக்கப்படுத்த வேண்டியுள்ளது. இதற்குச் சரியான வழியாகக் குறுந்திரைப்படங்கள் அமைகின்றன. குறைந்த செலவில் அதிக மூளை உழைப்புடன் அதிகளவான குறுந்திரைப்படங்கள் படைக்கப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அவை மக்களிடம் சென்றடைவதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும். ஒருபுறம் முழுநீளத் திரைப்படப் படைப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், அதைவிட வேகமாகக் குறுந்திரைப்படப் படைப்புகள், அதாவது, ஈழத்துத் தமிழ்ச் சினிமாவுக்கான தனித்துவ யதார்த்தத்தைக் கொண்ட குறுந்திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு அவை மக்களிடம் சென்றடைந்து கொண்டே இருக்க வேண்டும்.

sam-105சர்வதேச சினிமா அரங்குக்குச் செல்வதற்கான நுழைவாயில்

எமது திரைப்படங்களும், எமது கதைகளும் சர்வதேச சமூகத்தைச் சென்றடைய வேண்டியுள்ளது. ஈழத்துத் தமிழ்ப் படங்களுக்கான இடம் ஒன்று சர்வதேச சினிமா உலகில் உள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாகப் போர் மற்றும் போருக்குப் பிந்தைய சூழல்களில் இருந்துவரும் கதைகளைக் கேட்பதற்கான ஆர்வமும், எதிர்பார்ப்பும் மக்களிடம் இருந்து கொண்டே இருக்கின்றது. இது இதிகாசக் கதைகளின் காலம் முதல் இருந்து வரும் ஒரு உலகப் பொதுமையான மனித மனப்பாங்காக உள்ளது. திரைப்பட உலகில் இது மிக அதிகமாக உள்ளது. இந்த வாய்ப்பை ஈழத்துத் தமிழ்ச் சினிமா பயன்படுத்துதல் அத்தியாவசியமான விடயமாகும்.

பிரான்ஸ் நியூவேவ் படங்கள், இரண்டாம் உலகப் போரின் பின்னரான பிரான்ஸ் மக்களின் வாழ்வியலை, அங்கிருந்த பொருளாதார நிலைமையை, இளைஞர்களின் உளவியலை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர், நியூவேவ் சினிமாவாக உலகெங்கும் பிரசித்தி பெற்றன. இன்று பலராலும் சிலாகித்துக் கொள்ளப்படும் ஈரானியத் திரைப்படங்கள்கூடப் போருக்குப் பிந்தைய சூழலில் இருந்து ஆரம்பமானவைதான். இலத்தின் அமெரிக்க திரைப்படங்களுக்கும், அந்த நாடுகளின் போர்க்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. அந்தவகையில், ஈழத்துத் தமிழ்ச் சினிமாவானது, போர் மற்றும் போருக்குப் பிந்தைய சூழலை யதார்த்தமாகப் பிரதிபலிக்கும் பட்;சத்தில் சர்வதேச சினிமா அரங்கில் முக்கிய இடத்தினைப் பெறும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன.

ஆனால், முழுநீளத் திரைப்படங்கள் அதைச் செய்யும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறுந்திரைப்படங்கள் அதற்கு மிகப் பொருத்தமான வழியாக உள்ளன. உண்மையில், குறுந்திரைப்படங்களைச் சர்வதேச சமூகத்திடம் பிரபல்யப்படுத்துவதன் மூலம், ஈழத்து முழுநீளத் திரைப்படங்களுக்கான வரவேற்பை உருவாக்கிக் கொள்ள முடியும். நமது கதைகளைப் பெரிய திரையில் பார்ப்பதற்கான அவர்களின் ஆவலைத் தூண்ட முடியும். இன்று ஆங்காங்கே ஈழத்துக் குறுந்திரைப்படங்கள், சர்வதேச திரைப்பட விழாக்கள், இணையத்தளம், தொலைக்காட்சிகள், சிறப்புத் திரையிடல் நிகழ்வுகள் மூலம் சர்வதேச சமூகத்திடம் செல்ல ஆரம்பித்துவிட்டன. இந்தப் போக்கு அதிகரித்த வண்ணம் இருக்க வேண்டும். அதேநேரம், நமது படைப்பாளிகள், ஈழத்துத் தமிழ்ச் சினிமாவுக்கான தனித்துவம், நமது மக்கள், நமது வாழ்வியல், நமது பண்பாடு, நமது விடுதலை போன்ற விடயங்களின் காத்திரத் தன்மையுடனும் செயற்பட வேண்டும்