செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி பிள்ளையானா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுவதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஆனால் 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் கைதாகி இருந்தவரை 2019இல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென கூற முயல்வதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் தனது அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

நான் பிள்ளையானை அரசியல்வாதியாக அன்றி சட்டத்தரணியாகவே சந்தித்தேன். இந்த அரசாங்கத்தின் தலைவர்கள் நாட்டின் சட்டத்தை மீறி முறையில் கடந்த 8ஆம் திகதி பிள்ளையானை கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்ட ஒழுங்குவிதிகளுக்கமைய அவ்வாறான கைதுகளை செய்வதென்றால் அதற்கான காரணத்தை கைதாகுபவரின் உறவினர்களுக்கு எழுத்து மூலம் கூற வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கு சட்டத்தரணியை சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கவும், குடும்பத்தினருடன் சந்திப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது எதுவும் பிள்ளையான் கைது செய்யயப்பட்ட விடயத்தில் நடக்கவில்லை.

9 ஆம் திகதி அவரின் சட்டத்தரணிக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவரின் குடும்பத்தினர் என்னை சந்தித்தனர். இதனை தொடர்ந்து நான் சீஐடி பணிப்பாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அதுபற்றி தெளிவுப்படுத்தினேன். இதன்படி இனி நானே பிள்ளையானின் சட்டத்தரணி என்பதனை கூறியதுடன், அதன்படி எழுத்துமூலம் நான் சட்டத்தரணியாக அனுமதி கேட்டேன். இதன்படி 13ஆம் திகதி பிள்ளையானை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி 30 நிமிடங்கள் நான் பிள்ளையானுடன் கதைத்தேன். நான்கு பொலிஸ் அதிகாரிகள் அவ்விடத்தில் இருந்தனர். சட்டத்தரணி சேவை பெறுநருடன் பேசுவது இரகியமானது. இவ்வாறாக கதைக்க அனுமதி கேட்ட போதும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனினும் நான்கு அதிகாரிகளின் முன்னிலையில் நான் உரையாடினேன். அப்போது பிள்ளையான் கண்களில் கண்ணீர் வடிய உரையாற்றினார். தான் விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகி, எனது உயிரையும் பணயம் வைத்து விடுதலைப் புலிகளை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தேன். அன்று புலிகளுடன் இருந்தவர்கள் இப்போது எம்.பிக்களாகவும், வியாபாரிகளாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் சிலர் வெளிநாடுகளில் இருந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இவர்களில் எவருக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் என்னை மட்டும் இப்படி நடத்துகின்றனர் என்றார். ஏற்கனவே 5 வருடங்கள் என்னை தடுத்து வைத்திருந்து போதுமான சாட்சியங்கள் இல்லையென நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நான் மீண்டும் தடுத்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்றார்.

இந்த நாட்டை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்பதற்காக தீர்மானம் மிக்க பங்களிப்பு செய்தவர். இதனால் இவர் தேசிய வீரராக கருதப்பட வேண்டியவர். கருணாவும் பிள்ளையானும் விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகி அவர்களுக்கு எதிராக நடத்திய போராட்டமே விடுதலைப் புலிகளின் முடிவுக்கான ஆரம்பமாகும்.

பிள்ளையான் போன்று கருணா அம்மானும் திறமையான போராட்ட வீரராகும். இவரின் தலைமையில் கிழக்கில் இருந்து வந்தவர்களே கிழக்கில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடிந்தது. இவர்கள் புலிகளை தோற்கடிக்க பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்.
இப்போது 2006இல் நடந்த பேராசிரியர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தினத்தில் தான் எங்கே இருந்தேன் என்று தெரியாது என்றும், ஆனால் கிழக்கு யுத்தம் நடந்த காலம் என்பதனால் தான் மாவிலாறு முகாமிலேயே அந்தக் காலத்தில் இருந்திருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு பயங்கரவாதிகளுக்கும், தெற்கு பயங்கரவாதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி மக்கள் மறந்துள்ளனர். இவ்வாறான நிலைமையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தீர்மானம் மிக்க பங்களிப்பை வழங்கிய பிள்ளையானுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுப்பது ஏன். இப்போது பயங்கரவாதத்தின் அரசாங்கமே உள்ளது. இதனாலேயே பிள்ளையானுக்கு தண்டனை வழங்க முயற்சிக்கின்றனர்.

பிள்ளையானுக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் நட்பு கிடையாது. பயங்கரவாத அமைப்பில் இருந்து விலகி அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போராடுவது மிகவும் அரிதாக நடக்கும் விடயமாகும். இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட தேசப்பற்றாளருக்காக நிபந்தனையின்றி முன்னிற்காவிட்டால் எதிர்காலத்தில் பயங்கரவாதத்தை கைவிட்டு அரசாங்கத்துடன் இணைவதற்கு பயங்கரவாதிகள் தயங்குவர். இதனால் செய்நன்றியை மறக்காமல் அதற்கான உபகாரத்தை வழங்குவதையே நான் செய்கின்றேன்.

இதேவேளை பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக ஏப்ரல் 12ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்பில் கூறியிருந்தார். நான் ஏப்ரல் 13ஆம் திகதியே பிள்ளையானை சந்தித்தேன். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் ஒரு வசனமேனும் கதைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் கைதாகி இருந்தவர் 2019இல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென எவராவது கூறுவராக இருந்தால் அவ்வாறு கூறுபவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும். குறைந்தது சஹரானுடன் புகைப்படம் எடுத்த அரசியல்வாதியை பிரதான சூத்திரதாரியென கைது செய்திருந்தால் அதில் தர்க்க ரீதியான விடயம் இருக்கும். ஆனால் தாக்குதலுக்கு 4 வருடங்களுக்கு முன்னர் இருந்தே சீஐடியின் கீழ் இருந்தவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென கூறுவதனாது இதற்கு மேலும் நகைச்சுவையாக இருக்க முடியாது.

ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய சிலரை வெளியிடவுள்ளதாக மார்ச் 30ஆம் திகதி ஜனாதிபதி கூறியிருந்தார். இந்நிலையில் இன்னும் சிலநாட்களே 21ஆம் திகதிக்கு உள்ளது. இதனால் தன்னை நரியென ஏற்றுக்கொள்ளும் வரையில் முயலை தாக்கியது போன்றே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை விடயத்திலும் அரசாங்கம் நடந்துகொள்ள முயற்சிக்கின்றது.
முயலை நரியாக மாற்றியது போன்றும், சிறுமி ஷேயா கொலை விசாரணையில் கொண்டையாவை குற்றவாளியாக கூறியது போன்றும் பிள்ளையானை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக மாற்றுவதற்கும் முயற்சிக்கப்படுகின்றது. பிரபாகரனுடனும் மோதிய பிள்ளையானை முயல் மற்றும் கொண்டையாவை போன்று அரசாங்கம் நினைத்துக்கொண்டிருந்தால் அரசாங்கம் செய்யும் பெரும் தவறாகும்.

பிள்ளையானை அவரின் உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சந்திக்க விடாது அவருக்கு அழுத்தங்களை கொடுத்து அவரின் ஊடாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருடன் முயல் விளையாட்டை செய்ய முடியாது என்பதனை பொலிஸார் புரிந்துகொண்டுள்ளனர்.
அவர் பேராசிரியர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் வடக்கில் போராடிக்கொண்டிருந்த போது கொழும்பில் நடந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் எனக்கு எப்படி தெரியும் என்றே கூறியுள்ளார்.
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலோ, ராஜபக்‌ஷக்களுடன் இணைந்து செய்ததாக கூறி பிள்ளையான் சகலதையும் கக்கினார் என்று சமுக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யாகும் என்றார்.

-(3)