உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலை கவலைக்கிடம்: நேரில் பார்வையிட்ட பிரபா கணேசன்
தம்மை விடுதலை செய்யுமாறு கோரி மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகள் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென அக்கைதிகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் பிரபா கணேசன் மற்றும் அதன் தலைவர் குமரகுருபரன் கூறினர்.
தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் காணப்படும் பட்சத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இவர்கள் கூறினர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் சிறந்த தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். குற்றச்சாட்டுக்கள் இல்லாத பட்சத்தில் தமக்கு பிணை வழங்குமாறு அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகள் ஏற்கனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனவாதத்தை பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அரசியல் கைதிகள் குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துக்கு பலம் இல்லையெனவும் பிரபா கணேசன் குறிப்பிட்டார்.
அரசியல் கைதிகள் புனர்வாழ்விற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்த கருத்தை அடுத்து சிறைக் கைதிகள் மனவேதனை அடைந்துள்ளதாக பிரபா கணேஷன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை புனர்வாழ்விற்கு அனுப்புவதன் ஊடாக இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கத்தின் உயர் பீடத்தின் கவனத்திற்கு கொண்டு வர தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், இந்த விடயம் குறித்து தீர்வு எட்டப்படாத பட்சத்தில் போராட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
R-06




