செய்திகள்

உண்மையான வறுமையை வன்னியின் தொலைவிலுள்ள கிராமங்களில்த்தான் பார்க்க முடிகின்றது- வடமாகாண முதலமைச்சர்

”உண்மையான வறுமையை வன்னியின் தொலைவிலுள்ள கிராமங்களில்த்தான் பார்க்க முடிகின்றது. உண்மையான வறிய குடும்ப மாணவ மாணவியர்க்கு இந்தப் பணம் சென்றடையுமென்றால் எல்லோரையும் விட மகிழ்ச்சி அடைபவன் நானாகவே இருப்பேன். அரசியல் காரணங்களுக்காகவோ தனிப்பட்ட காரணங்களுக்காகவோ வறுமைக் கோட்டிற்கு மேல் வாழும் சில குடும்பங்களைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன். இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற குளறுபடிகள் பலர் அறிந்ததே. அதில் மத்திய அமைச்சர்களின் செயற்பாடும் மக்கள் அறிந்ததே. அவ்வாறான குளறுபடிகள் நடைபெறவில்லை என்றால் எமக்கு மகிழ்ச்சியே. ” என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மயூரபதி ஆலய நலன்புரிச் சங்கத்தால் கல்விசார் உதவி ஊதியம் வழங்கல் வைபவம் 29.01.2017 அன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

இது முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடாத்தப்படும் ஒரு கூட்டம். பிரதம மந்திரியின் காரியாலயம், மத்திய அரசாங்க பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, மத்திய அரசாங்க நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு, கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஆகியன சேர்ந்து இதனை நடாத்துகின்றார்கள். பணத்தை மட்டும் மயூரபதி அம்மன் நலன்புரிச் சங்கத்தில் இருந்து கொடுத்துள்ளார்கள். ஒழுங்கமைப்பு மத்திய அரசாங்க அலகால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாகாணசபையினூடாக நடாத்தியிருந்தால் எங்கள் மனமகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்திருக்கும். ஆனால் எம்மக்களுக்கு நன்மை கிடைக்கின்றது என்றால் நான் அதற்கு முன்னுரிமை கொடுத்து வருபவன். எனவே மனமுவந்து இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்துள்ளேன். மேலும் சகோதரி விஜயகலா அவர்கள் எம்முடன் இணைந்து செயலாற்றி வருவது எமக்கு மனமகிழ்வைத் தருகின்ற ஒரு விடயம்.

எனினும் அரசியல் என்பது எப்பேர்ப்பட்டது என்பது இப்பொழுதுதான் தெரிந்து கொண்டு வருகின்றேன். பணம் கொடுப்பவர்கள் ஒருசாரார், பலன் எடுப்பவர்கள் இன்னொரு சாரார். ஆனால் அந்தக் கைங்கரியத்தில் குளிர் காய்பவர்கள் மூன்றாந் தரப்பார். எங்களால்த்தான் உங்களுக்கு இது கிடைத்தது ஆகவே அடுத்த தேர்தலில் எமக்கு வாக்குப் போடுங்கள் என்பார்கள் சிலர். அல்லது தமிழ் மக்களுக்கு நாம் செய்யும் சேவைகளை கண்ணுற்றீர்களா என்று ஜெனிவாவில் கேட்பார்கள் மறுசிலர். மாகாண முதலமைச்சரும் இதில் பங்கு பற்றியதால் வடக்கும் தெற்கும் இணைந்து விட்டது பார்த்தீர்களா? ஆகவே நல்லிணக்கம் ஏற்பட்டு விட்டது என்பார்கள் அவர்கள். இவையெல்லாம் எமது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு உரிய உரிமைகள் தரப்படாமலே கூறப்படுகின்ற கூற்றுக்கள். அதைத்தான் நான் இங்கு கூற வருகின்றேன்.

தென் ஆபிரிக்காவில் அரசியல் ரீதியான ஒரு தீர்வு பெற்ற பின்னரே உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இங்கு எம் மக்களுக்கு ஒரு சந்தேகம் உண்டு. மத்திய அரசாங்கம் அதைச் செய்து இதைச் செய்து விட்டு மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைத் தராது விட்டு விடுமோ என்ற ஒரு ஐயம் எம்மைப் பீடித்தே இருக்கின்றது. 1987ம் ஆண்டில் இலங்கை இந்திய உடன்பாடு ஏற்பட்ட போது மாவட்ட செயலர் வடமாகாண அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார். எனவே இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகள் நடைபெறும்போது அவை எமக்குத் தெரிந்தே நடைபெற்றன. 1992ல் உங்கள் எல்லோரதும் நண்பர் ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து மாகாண அரசாங்கத்தின் கீழ் இருந்த மாவட்ட செயலர், கிராம சேவையாளர் போன்றவர்களை மத்தியின் கீழ்க் கொண்டு வந்து விட்டார். அதனால் நிர்வாகம் இரண்டாகப் பிளவு பட்டது. ஒன்று மத்திய அரசாங்கத்தின் கீழும் மற்றையது மாகாண அரசாங்கத்தின் கீழும் முன்னெடுக்கப்பட்டன. முன்னைய அரசாங்கத்தின் கீழ் மூடியவாறே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலைமை சற்று சீரடைந்துள்ளது. வெளிப்படைத்தன்மை சற்றுப் புலப்படுகின்றது.

தெற்கில் இருந்து வரும் சகோதரர்களையோ, மத்திய அரசாங்கப் பிரதிநிதிகளையோ வரவேற்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. சென்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எமது கிளிநொச்சி அரசாங்க அதிபர் பற்றி சில வார்த்தைகள் கூறினேன். சென்ற அரசாங்கத்தின் கீழ் நாங்கள் ஒருமித்துச் செயலாற்ற முற்பட்டபோது சில பல சந்தேகங்கள் எம்முள் இருந்தன.
இந்த அரசாங்கம் வந்தபின் அவை படிப்படியாகக் குறைந்து ஒரு சுமூகமான உறவை மத்திய அரசாங்கத்தின் முகவரான மாவட்டச் செயலாளருடன் எம்மால் தற்பொழுது பேண முடிகின்றது என்றேன். எமது மக்களுக்காகவே நாம் யாவரும் பாடுபடுகின்றோம். ஆனால் அதில் அரசியலும் கட்சியியலும் சேரும் போதுதான் சில முரண்பாடுகள் ஏற்படுகின்றன. மத்தி மக்கள் சேவையில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதே. ஆனால் எமது உரித்துக்களைத் தராது, முகாமிட்டிருக்கும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவ வீரர்களை வாபஸ் பெறாது எம் மக்கள் சேவையில் ஈடுபடுவது எம்மக்களை விலை கொடுத்த வாங்குவதாகவே அமையும். இது இவ்வளவும் அரசியல் சம்பந்தமான என் கருத்துக்கள். அவற்றைக் கூற வேண்டியது எனது கடமை என்று நினைத்துக் கூறியுள்ளேன்.

இனி இந்த நிகழ்ச்சிக்கு வருவோம். சென்ற வருடம் யாழ்ப்பாணத்தில் எமது மக்களுக்கு உதவிகள் வழங்கும் போது வேறு ஏதேனும் செயல்த்திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமா என்று நண்பர் சுந்தரலிங்கம் அவர்கள் கேட்டார். ‘ஆம்! வன்னியிலே எம்மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள்’ என்று கூறி கல்வியில் அவர்களின் பின்தங்கிய நிலைபற்றி அவருக்கு எடுத்துரைத்தேன். அடுத்த வருடம் ஏதேனும் ஒரு செயல்த் திட்டத்தை அமுல்படுத்துவோம் என்று கூறினார். அந்த செயற்திட்டமே இது.
500 குழந்தைகளை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து மத்திய அமைச்சுக்கள் மூலம் தேர்ந்தெடுத்து மாதம் ரூபா 1000ஃ- அக்குழந்தைகளின் பெயரில் தேசிய சேமிப்பு வங்கியில் வைப்பில் இடுகின்றார்கள். மூன்று மாதங்களுக்கான முற்பணமாக மத்திய அமைச்சுக்குக் கட்டி, அமைச்சு குழந்தைகள் பெயரில் கணக்குகளைத் திறந்துள்ளது. எனவே 36 மாதங்களுக்கு 500 மாணவ மாணவியர்களுக்கு தலா ரூ 1000 வீதம் 180 இலட்சம் வைப்பில் இடப்படவிருக்கின்றது.

எமது அன்னை மயூரபதி அம்மனின் பெயரால் நடாத்தப்படும் இந்த சங்கம் மக்கள் நலம் கருதி வருடா வருடம் செய்து வரும் சேவைகளும் பணிகளும் மகத்தானவை. அந்த விதத்தில் எம் குழந்தைகளுக்குக் கல்வி ஆதாரமாக வழங்கப்படும் ஊதியம் குழந்தைகளைக் கல்வி மீது கரிசனை கொள்ள வைக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. நான் வன்னியில் சஞ்சாரம் செய்த போது சில பெற்றோர்கள் தமது குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பாதிருப்பது தெரிய வந்தது. ஏன் என்று கேட்டேன். ‘அடுத்த பொழுது கஞ்சிக்கு இல்லாத போது நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது?’ என்றார்கள். மேலும் 8, 9, 10 வயதுப் பிள்ளைகளை மரமேறி தேங்காய் பறித்துக் கொடுத்துப் பணம் பெற்று அடுப்பில் உலை வைக்கின்றோம் என்றார்கள்.

உண்மையான வறுமையை வன்னியின் தொலைவிலுள்ள கிராமங்களில்த்தான் பார்க்க முடிகின்றது. உண்மையான வறிய குடும்ப மாணவ மாணவியர்க்கு இந்தப் பணம் சென்றடையுமென்றால் எல்லோரையும் விட மகிழ்ச்சி அடைபவன் நானாகவே இருப்பேன். அரசியல் காரணங்களுக்காகவோ தனிப்பட்ட காரணங்களுக்காகவோ வறுமைக் கோட்டிற்கு மேல் வாழும் சில குடும்பங்களைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன். இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற குளறுபடிகள் பலர் அறிந்ததே. அதில் மத்திய அமைச்சர்களின் செயற்பாடும் மக்கள் அறிந்ததே. அவ்வாறான குளறுபடிகள் நடைபெறவில்லை என்றால் எமக்கு மகிழ்ச்சியே.

எமது கொழும்பு நண்பர்கள் யாவரும் மிகப்பெரிய வர்த்தகர்கள். தம்மால் இயன்றதை மக்களுக்குச் செய்ய வேண்டும் என்ற அவாக் கொண்டவர்கள். அதனால்த் தான் சங்கம் அமைத்து இவ்வாறான செயல்ப்பாடுகளில் இறங்கியுள்ளார்கள். அதை நாம் வரவேற்கின்றோம். பெருமையுடன் வரவேற்கின்றோம். எம் சகோதரர்கள் ஒன்று சேர்ந்து வறுமையில் வாடும் எம் மக்களுக்கு உதவ வந்துள்ளார்கள் என்பதில் பெருமை அடைகின்றோம். வாழ்த்துகின்றோம்.

சோழர் காலத்தில் கோயில்கள் கல்விக் கூடங்களாகவும் கலைக் கூடங்களாகவும் திகழ்ந்தன என்று கூறுவார்கள். இன்று அந்தக் கோயில் தர்மகர்த்தாக்களே எம்மை நாடிவந்து எமது மக்களின் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவது வரவேற்கத் தக்கதே. வருங்காலத்திலும் உங்கள் உதவிகள் எம் மக்களை வந்தடைய அன்னை மயூரபதி அம்மன் அருள் புரிவாராக என்று பிரார்த்தித்து என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.

N5