செய்திகள்

உண்மையை அறிவதற்கான உரிமைகளுக்கான சர்வதேச தினம்

மருத்துவர்.சி.யமுனாநந்தா

பாரிய மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகளை அறிவதற்கான உரிமை மற்றும் பாரிய மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கண்ணியம் சார்ந்த தினமாக பங்குனி மாதம் 24 ஆம் திகதியினை ஐ.நா பொதுச் சபை 2010ம் ஆண்டில் பிரகடனப்படுத்தியது. இந்நிலைமையானது எல்சல்வடோரில் மனித உரிமைகளுக்காகப் போராடி 1980ம் ஆண்டு பங்குனி 24ம் திகதி படுகொலை செய்யப்பட்ட பேராயரை கௌரவிக்கும் விதமாக தெரிவு செய்யப்பட்டது.

2010ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் பங்குனி 24ம் திகதி உண்மையை அறிவதற்கான உரிமைகளுக்கான சர்வதேச தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும். நடந்த உண்மைச் சம்பவங்கள் வெளிப்படுத்தப்படல் வெண்டும். பாதிக்கப்பட்டவர்களது கண்ணியம் பேணப்படல் வேண்டும்.

இலங்கையிலும் குறிப்பாக இலங்கையின் வட கிழக்குப் பிரதேசத்தில் இத்தினத்தை நாம் முறையாக அனுஸ்டிக்க வேண்டும். குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மைகளையும,; அவர்கள் கைது செய்யப்பட்ட இடங்களையும், அவர்களைக் கைது செய்தவர்களையும் அடையாளமிடல் அவசியம். இதனை அரசியல் சார்பற்ற முறையில் சமூக நீதிக்காக செயற்படுத்தல் அவசியம். ஒரு சமூகத்தில் உண்மைகள் மறைக்கப்படுகின்ற பொழுது அச்சமூகத்தில் நெறி பிறழ்வுகள் அதிகரிக்கும். சமூக வன்முறைகள் அதிகரிக்கும் . சமூக அரசியல் மேம்பாட்டில் அறம் அருகிவிடும். எனவே உண்மையினை அறிதற்கான உரிமைக்கான சர்வதேச தினத்தினை எமது சமூகத்தில் கடந்த காலங்களில் நிகழ்ந்த அசம்பாவிதங்களுக்கான வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்தவும், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாது இருப்பதற்கும் குரல் கொடுப்போம்.