செய்திகள்

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே எமது முடிவு: நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு

19ஆவது திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தை 09, 10 ஆம் திகதிகளில் மேற்கொள்வதை ஐ.ம.சு.மு. அடங்கலான எதிர்க் கட்சி கள் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலை வர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த பின் அதனடிப்படையில் கட்சித் தலைவர்களை காட்டியே விவாத திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலே 19 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து தீர்மானிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் 19 ஆவது திருத்தத்தை 9 ஆம், 10 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுப்பதற்கு எதிர்க் கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் ஆராயப்படும் 19 ஆவது திருத்தத்திற்கு மேலதிகமாக மேலும் பல திருத்தங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர் மறைவாக மேற்கொள்ளும் இந்த முயற்சியை எதிர்க் கட்சிகள் முழுமையாக எதிர்ப்பதாகவும் இது பாராளுமன்ற பொறுப்பில் தலையீடு செய்வதாகும் எனவும் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

19ஆவது திருத்த சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் ஆராயப்பட்டது. ஆனால் சபை முதல்வர் அலுவலகம் 12 பக்கங்களை கொண்ட புதிய திருத்தங்களை முன்வைத்துள்ளது. இது அரசியலமைப்பின் 121 ஆவது பிரிவுக்கு முரணானதாகும். இது பாராளுமன்றத்திற்குரிய பொறுப்பாகும். அரசின் இந்த முயற்சி குறித்து எமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த பின்னர் அதனை ஆராய்ந்து மீண்டும் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டியே 19ஆவது திருத்தத்தை விவாதத்திற்கு எடுக்கும் திகதி முடிவு செய்யப்பட வேண்டும். 9 ஆம், 10 ஆம் திகதிகளில் 19 ஆவது திருத்தத்தை விவாதத்திற்கு எடுக்கும் முயற்சியை கைவிடுமாறு நாம் கட்சித் தலைவர் கூட்டத்தில் கோரினோம்” எனவும் அவர் தெரிவித்தார்.