செய்திகள்

உயிர் போனால் மீண்டும் அதனை திரும்ப கொண்டுவர முடியாது பொருளாதாரத்தை பின்னரும் சரி செய்யலாம் – ரணில் விக்கிரமசிங்க

கொவிட் வைரஸ் இலங்கை, இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் மிகவும் வேகமாக பரவிவருகின்றது. அதேவேளை இந்தியாவில் பரவிய கறுப்பு பங்கஸ் என்ற ஒரு வகை நோயும் இலங்கையில் பரவிவருகின்றது. நாம் இவைகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொழும்பு அலுவலகம் வைத்தியர்களுடன் நடத்திய சந்திப்பின் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் எதிர்வரும் காலத்தில் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் உயிர் போனால் மீண்டும் அதனை திரும்ப கொண்டுவர எம்மால் முடியாது.பொருளாதாரத்தை பின்னரும் சரி செய்யலாம். தற்போது உயிர்களை காப்பாற்றும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவது ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு பாரிய அடியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் இதன் காரணமாக கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உயிர்களை காப்பாற்றுவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இதனை செய்தால் எங்கள் பொருளாதாரத்திற்கான பாதிப்பை குறைக்கலாம் எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆகவே வைத்தியர்களின் அறிவுரைக்கு அமைய நாட்டை மூட வேண்டும். அதற்கு பின்னர் வாராவார ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கு அமைய கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை தேட வேண்டும்.இதனைவிட வேறு வழிகள் இருப்பதாக என்னால் சொல்ல முடியாது. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சரிசெய்ய முடியும் ஆனால் உயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். எமது நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. சகல மக்களுக்கும் ஊசி மருந்து கொடுப்பதற்கு அடுத்த வருடமாகும் அல்லது இந்த வருட இறுதிப் பகுதியாவது ஆகும். அதுவரை மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.(15)