செய்திகள்

உலகமயமாக்கலின் புதிய பாதுகாவலர்களாக சீனாவும் கம்யூனிஸ்ட் கட்சியும்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் குழுவினர் ஒரு வார கால சீனச் சுற்றுலா ஒன்றை  மேற்கொண்டிருக்கின்றனர். இவர்களில் மூத்த ஊடகவிலாளரும் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான தனபாலசிங்கமும் உள்ளடங்குகிறார். தமது இந்த பயணம் தொடர்பில் தனபாலசிங்கம் தனது முகநூலில் இட்ட பதிவுகளில் ஒன்றில் இருந்து (29/09/2017)…. 

எமது சீனச் சுற்றுலாவின்போது அரசியல் மட்டத்திலான ஒரு சந்திப்பு என்றால் பெய்ஜிங்கில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சமகால ஆய்வுகளுக்கான சீன நிலையத்தின் (China Centre for Contemporary World Studies) பணிப்பாளர் நாயகமாகவும் பட்டுப்பாதை சிந்தனைக் குழாம் சங்கத்தின்(Silk Road Think Tank Association) செயலாளர் நாயகமாகவும் பதவி வகிக்கும் ஜின் சின் அவர்களுடனான சந்திப்பேயாகும்.இவ்விரு நிறுவனங்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தின் (International Department of CPC Central Committee) நிருவாகத்தின் கீழ் வருபவை என்பதால் ஜின் சின் கட்சியின் தலைமைத்துவத்துக்கு நெருக்கமானவர் என்பது எமது நினைப்பு.

எம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு கருத்துக்களைக்கூறுமாறு ஜின் சின் முதலில் எம்மைக் கேட்டுக்கொண்டார்.சீனா குறித்து இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்ற எதிர்மறையான அபிப்பிராயத்தை மாற்றியமைக்கக்கூடியதாக இலங்கையுடனான சீனாவின் அணுகுமுறைகள் அமையவேண்டுமென்று நாம் கேட்டுக்கொண்டோம்.உள்நாட்டுப் போர்க் காலத்தில் இலங்கை அரசாங்கங்களுக்கு பெருமளவு இராணுவ உதவிகளைச் செய்துவந்த சீனா, போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் திட்டமிட்டே தாமதம் செய்கின்ற அரசாங்கத்துக்கு ஆதரவாகவே நடந்துகொள்கிறது.இலங்கையின் தவறான போக்குகளை சர்வதேச அரங்கங்களில் நியாயப்படுத்துகின்ற அணுகுமுறையையே சீனா கடைப்பிடிக்கிறது.அதனால் தங்களது நியாயபூர்வமான அபிலாசைகளை நிராகரிக்கின்ற இலங்கையின அதிகார வர்க்கத்துக்கு உறுதுணையாக சீனா செயற்படுகின்றது என்று தமிழ் மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். மாஓ காலத்துச் சீனாவை உலகம் பூராவுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களினதும் விடுதலைக்குப் போராடுகின்ற தேசிய சிறுபான்மை இனங்களினதும் உறுதியான ஆதரவு நாடாகப் பார்த்த தமிழ் மக்களுக்கு இன்றைய சீனாவின் போக்குகள் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றன. இந்த நிலைமையை மாற்றியமைக்கக் கூடிய அணுகுமுறையை சீனா எதிர்காலத்தில் கடைப்பிடிக்கவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு என்று நாம் அவரிடம் கூறினோம்.தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளில் தேசிய இனப்பிரச்சினைக்கு பயனுறுதியுடைய அரசியல் இணக்கத் தீர்வொன்று காணப்படுவதற்கு இலங்கை அரசாங்கத்துடனான நல்லெண்ணத்தை சீனா பயன்படுத்தவேண்டும் என்றும் என்று கேட்டுக்கொண்ட நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை பாராளுமன்றத்தில் முதல் நாள் சமர்ப்பித்திருந்ததையும் சுட்டிக்காட்டினோம்.

தமிழ் மக்களின் அரசியல் சக்திகளுடன் சீனா தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும்.போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய பொருளாதார உதவித் திட்டங்களை சீனா முன்னெடுக்கவேண்டும் என்று நாம் வேண்டுகோள் விடுத்தோம்.

1

எமது கருத்துக்களையெல்லாம் கேட்டுக்கொண்ட ஜின் சின் பிறகு பேசத் தொடங்கினார்.அவரது உரை சீனாவின் பேரார்வத்துக்குரிய ‘ஒரு மண்டலம், ஒரு பாதை’ அல்லது புதிய பட்டுப்பாதை திட்டம் குறித்து எமக்கு வகுப்பெடுத்தது போன்றிருந்தது.சுமார் இரு மணித்தியாலங்கள் உரையாற்றிய அவர் ‘ உலகமயமாக்கல் தவிர்க்கமுடியாதது.மேற்குலகில் இன்று உலகமயமாக்கலுக்கு எதிரான உணர்வுகள் அதிகரிக்கின்றன.ஆனால்,உலகமயமாக்கலை மேலும் ஊக்குவிப்பதற்கே சீனா புதிய பட்டுப் பாதைத் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.இந்தத் திட்டத்தை வெறுத்தொதுக்கும் நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்திக்கேவண்டியிருக்கும்.மேற்குலகு இதுவரையில் முன்னெடுத்திருக்கும் உலகமயமாக்கல் நாடுகள் மத்தியிலும் மக்கள் சமூகத்தின் மத்தியிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வை அதிகரித்திருக்கிறது. ஆனால்,சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் வாயிலாக முன்னெடுக்கப்படவிருக்கும் உலகமயமாக்கல் ஒப்புரவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்’என்று அவர் விரிவுரை நிகழ்த்தினார்.

ஜின் சின் தனது கருத்துப்பரிமாறலின்போது அடிக்கடி சீனப்பழமொழிகளை மேற்கோள் காட்டியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.முதலில் நட்பை ஏற்படுத்திக்கொள்.பிறகு வியாபாரத்தைத் தொடங்கு என்பது அவற்றில் ஒன்று.காலஞ்சென்ற சீனத் தலைவர் டெங் ஸியாவோ பிங்கின் பிரபலமான கூற்று ஒன்றையும் அவர் தமது உரையில் பயன்படுத்தினார்.பூனை கறுப்போ வெள்ளையோ என்பது பிரச்சினையில்லை.அது எலி பிடித்தால் போதும் என்பதே அந்தக் கூற்றாகும்.ஒட்டுமொத்தத்தில் நோக்குகையில் உலகமயமாக்கத்தின் புதிய பாதுகாவலர்களாக சீன அரசாங்கமும் கம்யூனிஸ்ட் கடசியும் விளங்குகின்றன எனபதே ஜின் சின்னுடனான சம்பாஷணையின் மூலமமாக எம்மால் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்த உண்மையாகும்.

எமது கோரிக்கைகளுக்குப் பதிலளித்த அவர் உறுதியான முறையில் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. இலங்கையில் அண்மைக்காலமாக நல்ல காரியங்கள் இடம்பெறுகின்றன.சீனா அவற்றை அவதானித்துக் கொண்டுவருகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புகளை மேற்கொள்வதில் சீனா ஆர்வம் கொண்டுள்ளது.அதை நாம் செய்வோம் என்று அவர் கூறினார்.இலங்கையில் சீனா முன்னெடுக்கின்ற பொருளாதார உதவித் திட்டங்களும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களும் சகல மக்களும் பயனடையவேண்டுமென்ற நோக்கிலானவையே என்று பொதுப்படையான பதிலே அவரிடமிருந்து வந்தது.