செய்திகள்

உலகவர்த்தக மையம் வீழ்வதை படமெடுத்தேன்

விமானத்தை பயன்படுத்தி அமெரிக்கா மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட  செப்டம்பர் 11 தாக்குதலின் 15 வருடத்தை உலகநாடுகளும் அமெரிக்காவும் நேற்று நினைவு கூர்ந்துள்ள அதேவேளை தாக்குதலிற்குள்ளான இரட்டை கோபுரத்தின் ஓரு பகுதி தரையில் வீழ்ந்துநொருங்குவதை காண்பிக்கும் உலகின் மிகவும் பிரசித்திபெற்ற புகைப்படத்தை எடுத்த ஏபியின் படப்பிடிப்பாளர் சுசன்னா பிளங்கெட் தனது அனுபவத்தை இவ்வாறு விபரித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

அந்த பொலிஸ் உத்தியோகத்தர் என்னை காப்பாற்றினார் என்றே சொல்லவேண்டும்,செப்டம்பர் 11ம் திகதி 2011 காலை அந்த சம்பவம் இடம்பெற்றது,விமானதாக்குதலிற்கு உட்பட்ட இரட்டைகோபுரத்தின் தென்பகுதி தரையில் வீழ்ந்துநொருங்குவதற்கு முன்னர் இது இடம்பெற்றது.நான் அதற்கு அருகில் இருந்தேன், இன்னமும் நெருங்கிச்செல்ல முயன்றேன், எனது ஊடக அட்டையை காண்பித்துக்கொண்டு அதனை நோக்கி நகர முயன்றேன், ஆனால் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அது பாதுகாப்பில்லை போகவேண்டாம்.போகவேண்டாம் என சத்தமிட்டுக்கொண்டிருந்தார்.

wo3

அதன் பிறகு அந்த பயங்கரம் நிகழ்ந்தது,கட்டிடம் கீழே விழுகின்றது எனகத்திக்கொண்டு யாரோ என்னை கடந்து ஓடியதை பார்த்தேன்,வானத்திலிருந்து பாரிய புகைமண்டலமும் புழுதியும் அந்த வீதியை முற்றாக மூடியது,நிலத்தில் வீழ்ந்துகொண்டிருந்த அந்த பாரிய கட்டிடத்தின் இடிபாடுகளை கடந்து நான் ஓடினேன்.

20 மீற்றர் ஓடியபின்னரே எனக்கு அதனை படமெடுக்கவேண்டும் என தோன்றியது,நான் உடனடியாக  எனது நிக்கோன் கமராவை எடுத்து படமெடுக்க தொடங்கினேன்,மக்கள் என்னை கடந்து ஓடிக்கொண்டிருந்த அந்த தருணத்தில் நான் மிகவேகமாக 13 படங்களை எடுத்தேன் அதில் ஓன்று உலகப்புகழ்பெற்ற படமாக மாறியது.

நான் மீண்டும் ஓடினேன்,என்னை துரத்திக்கொண்டுவந்த புகைமண்டலத்திலிருந்து தப்ப முடியாது என நினைத்தேன், நான் ஓரு  ஏபி  புகைப்படக்கலைஞன் நான் புகைப்படங்களை அனுப்பவேண்டும், அதற்கு சிலநிமிடங்களேயிருந்தன.நான் பலர் தஞ்சமடைந்திருந்த அலுவலக கட்டிடமொன்றிற்குள் நுழைந்தேன் அங்கு காணப்பட்ட அவலக்குரல்களை என்னால் தாங்க முடியவில்லை என பிறகு அங்கிருந்து வெளியேறி மேலும் பல படங்களை எடுத்தேன் பின்னர் வேறு ஓரு  இடத்திலிருந்து எனது அலுவலகத்திற்கு அந்த படங்களை அனுப்பினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.