செய்திகள்

உள்நாட்டு விசாரணைக்கு மட்டுமே மக்கள் மைத்திரிக்கு ஆணை வழங்கினர்

போர்க் குற்றம் தொடர்பில் முற்றாக உள்நாட்டு விசாரணை மாத்திரமே முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதற்காகவே, கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டது என்பதை அவர் உணர வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகள் செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்;
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிப்பதற்காகவே ஐ.நா. ஆணையாளர் தற்போது இலங்கைக்கு வந்துள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பில் முற்றாக உள்நாட்டு விசாரணை மாத்திரமே முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதற்காகவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டது. சர்வதேச நீதவான்கள், சர்வதேச வழக்கறிஞர்கள், சர்வதேச கண்காணிப்பாளர்கள், சர்வதேச நிபுணர்கள் என முற்றுமுழுதாக சர்வதேசமயமாக்கப்பட்டு இராணுவத்தினருக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பது எப்படி உள்நாட்டு விசாரணையாகும்?
உள்நாட்டு விசாரணை பற்றி ஆராய்வதற்காகவா ஐ.நா. ஆணையாளர் இலங்கைக்கு வந்துள்ளாரென நாம் இப்போது ஜனாதிபதி மைத்திரியிடம் கேட்கின்றோம்.
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிப்பதற்காகவே ஐ.நா. ஆணையாளர் தற்போது இலங்கைக்கு வந்துள்ளார்.
எமது நீதிமன்றக் கட்டமைப்பு பல வருட கால அனுபவம் பெற்றது. அதில் ஏதும் குறைபாடு இருந்தால் அதனை நிவர்த்திக்க இந்த அரசாங்கத்தால் முடியும். எதற்காக இங்கு சர்வதேச நீதிமன்றத்தை அமைக்கின்றனர்?
நாம் இந்த தருணத்தில் ஜனாதிபதிக்கு ஒரு சவாலை விடுக்கின்றோம். அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டில் ஜனாதிபதிக்கு பங்கு இல்லையென்றால், ஐ.நா. ஆணையாளர் இலங்கை வந்துள்ள நிலையில் நீங்கள் முன்னர் குறிப்பிட்ட தேசிய பொறிமுறை தொடர்பான கருத்தை மீண்டும் தெளிவுபடுத்த வேண்டும்.
இதில் வெளிநாட்டு பரிசோதகர்கள் இருக்கிறார்களா?, சட்டத்தரணிகள் இருக்கிறார்களா?, நீதிபதிகள் இருக்கின்றார்களா?, இது வெளிநாட்டவர்களின் தேவைக்காகவா அமைக்கப்படுகிறது அல்லது இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு இணங்கவா செயற்படக் போகின்றது என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டுமெனவும் விமல் வீரவன்ச கேட்டுள்ளார்.
n10