உள்ளக பொறிமுறை தொடர்பில் ஆராயப்படுகின்றது: பதில் வெளிவிவகார அமைச்சர்
போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளக விசாரணையை எவ்வாறு நடத்துவது என்று நிபுணர்கள் ஆராய்ந்துவருகின்றனர். எமக்கு வழங்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் உள்ளக பொறிமுறை செயற்பாட்டை முன்னெடுப்போம் என்று பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் தெரிவித்ததாவமு:
“யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பான பொறுப்புக்கூறலானது உள்ளக சட்டத்துக்கு அமைய உள்ளக நீதிபதிகளைக்கொண்டே நிலைநாட்டப்படும்.
அதாவது உள்நாட்டு சட்டத்தின்படியும் எமது நீதிபதிகளைக்கொண்டும் உள்ளக பொறிமுறைக்கு அமைவாகவும் உள்ளக பொறிமுறையை நிறுவ இருக்கின்றோம். இந்த செயற்பாட்டை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் நிபுணர்கள் தற்போது ஆராய்ந்துவருகின்றனர். அந்தவகையில் எமக்கு வழங்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் இந்த செயற்பாட்டை முன்னெடுப்போம்” என்றார்.
யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளக பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறுவதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை குறித்த அறிக்கையை ஆறு மாதங்களுக்கு பிற்போட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் செய்த பரிந்துரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நிச்சயமாக வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் தெரிவித்துள்ளார்.
விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதனை தடுக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் செப்டம்பர் மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை தடுத்து நிறுத்த முடியாது என அவர் உறுதியளித்துள்ளார்.




