செய்திகள்

உள்ளக விசாரணைப் பொறிமுறை: பிரதமர் ரணிலின் கருத்துக்கு சம்பந்தன் ஆட்சேபனை

உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதவான்கள் இடம்பெற மாட்டார்களென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்திற்கு, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதவான்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென, ஐ.நா மனித உரிமைகள் பேரவை பரிந்துரை செய்துள்ள நிலையில், அவ்வாறு சர்வதேச நீதவான்கள் இடம்பெற மாட்டார்களென பிரதமர் ரணில் ஊடகமொன்றிற்கு குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்தே சம்பந்தன் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளமையானது-

”ஐ.நா மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு உறுப்பு நாடுகள் திட்டமிட்டிருந்த போதும், இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்திய சாதகமான சமிக்ஞைகள் காரணமாக, பின்னர் அது ஒரு நீர்த்துப்போன தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது.

அவ்வாறு ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களையேனும் நிறைவேற்றுமாறு, நாம் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இவ்விடயத்தில் எவ்வித புரிந்துணர்வுக்கும் இடமில்லை.

அத்தோடு, காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்காக அரசாங்கம் அமைக்கப்போகும் அலுவலகம் குறித்த, முழுமையான விடயங்களை நாம் இதுவரை அறியவில்லை. எனினும், இதன்மூலம் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென நாம் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

R-06