உள்ளக விசாரணை சர்வதேசத்தின் மேற்பார்வையிலேயே இடம்பெற வேண்டும்: சுமந்திரன்
சர்வதேச மனிதஉரிமைகள் பேரவையிடம் இணங்கிக்கொண்டதன் பிரகாரம் உள்ளக விசாரணை ஒன்று இடம்பெறுமானால் அது சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
காணாமல் போனோரைக் கண்டறிவதற்காக எனும் பெயரில் நியமிக்கப்பட்டதான மெக்ஸ்வெல் பரனகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீதோ அல்லது அவ்வாணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கென நியமிக்கப்பட்ட டெஸ்மென் பெரேரா மீதோ எமக்கு நம்பிக்கை கிடையாது. அதனை கண்துடைப்பாகவே பார்க்கிறோம்.
எனவே புதிய அரசாங்கம் உள்ளக விசாரணைகளை உண்மைத் தன்மை வாய்ந்ததாக மேற்கொள்ளத்தவறினால் முன்னைய அரசாங்கத்திற்கு நிகழ்ந்ததே நிகழும் என்று கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைக்கபட்ட குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை (விஷேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாகத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சுமத்திரன் எம்.பி இங்கு மேலும் கூறுகையில்,
காணாமல்போனோர் தொடர்பில் தேடியலையும் உறவுகள் வேறு எதனையும் கேட்கவில்லை. மாறாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறே மன்றாடுகின்றனர். இது தொடர்பில் ஆணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
காணாமல் போனோரை கண்டறிவதற்கென மெக்ஸ்வெல் பரனகம என்பவரின் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டது. இவ்வாணைக்குழுவானது வெறும் கண்துடைப்புக்காக நிறுவப்பட்டது என்றே கருதுகின்றோம். அதுமாத்திரமின்றி மேற்படி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் நாம் நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளோம். மேலும் இவ்வாணைக்குழுவுக்கு ஆலோசணை வழங்குவதற்கென நியமிக்கப்பட்ட சட்ட ஆலோசகரான டெஸ்மன் பெரேரா மீதும் எமக்கு நம்பிக்கை கிடையாது.
காணாமல் போனோரை கண்டறியும் வகையில் நியமிக்கப்பட்டதான இவ்வாணைக்குழு முறையான உண்மைத்தன்மையுடனான விசாரணைகளை மேற்கொண்டிருக்கவில்லை. பாதுகாப்புத்தரப்பினரே தமது பிள்ளைகளை உறவுகளை கொண்டு போயிருப்பதாக சாட்சியம் வழங்கியுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நிலைமை இப்படியிருக்க இலங்கை மீதான விசாரணை விடயம் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையுடன் இணக்கம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்ட புதிய அரசாங்கம் உள்ளக விசாரணைக்கும் ஏற்றுக்கொண்டுள்ளது.
உள்ளக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுமேயானால் அது சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான பொறிமுறை ஒன்று இங்கு உருவாக்கப்படுவது அவசியம் என்பதுடன் சர்வதேச பிரமுகர்களை அனுமதிக்கும் நிலையும் உருவாக்கப்படுதல் அவசியமாகும்.
உள்ளக விசாரணை விடயத்தில் உண்மைத்தன்மை பேணப்படுவதன் மூலமே இந்நாட்டின் மீதான அழுத்தங்களில் இருந்தும் விடுதலையாக முடியும். மேலும் உண்மைத்தன்மையற்ற விதத்தில் செயற்பட முயற்சித்தால் முன்னைய அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இன்றைய அரசுக்கும் ஏற்படும் எனினும் நாம் அதை விரும்பவில்லை என்றார்.




