உள்ளுராட்சிமன்றங்களின் பதவிக்காலம் நீடிக்கப்படும்: அரசாங்கம் அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன் பதவிக் காலத்தை மே மாதம் வரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பதவிக் காலம் நிறைவுக்கு வரும் உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான அரச வர்த்தமானி அறிவித்தலில் உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி, புத்தசாசன அமைச்சர் கரு ஜெயசூரிய கையொப்பமிட்டிருப்பதாக தெரிய வருகிறது.
இது தொடர்பில் உள்ளூராட்சி மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் ஜே.தட ல்லகே கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டின் 234 உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பாலானவற்றின் பதவிக்காலம் மார்ச் 31 ஆம் திகதியான நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது. எனினும், தற்போதைய நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் தற்போது அரசாங்கத்திடம் இல்லை.
மேலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தொகுதிவாரி முறைமையின் கீழ் நடத்துவதற்கான் ஏற்பாடுகளே முன்னைய ஆட்சியின் போது எடுக்கப்பட்டிருந் தது.
எனினும் இது குறித்து தொகுதிகளுக்கிடையிலான எல்லை நிர்ணய ஏற்பாடுகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. எல்லை நிர்ணய ஏற்பாடுகளுக்கு மேலதிக காலம் தேவைப்படுகின்ற பிரதான காரணத்தை அடிப்படையாக கொண்டே உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்மாறாக ஏப்ரலின் பிற்பாடு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் தென்படுவதன் காரணத்தை கருத்திற் கொண்டும் உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில் அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது. மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை நீடிப்பதற்கான அரச வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் கரு ஜெயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.
மேற்குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 201 பிரதேச சபைகள், 30 நகர சபைகள் மற்றும் 3 மாநகர சபைகளின் பதவிக்காலம் நீடிக்கப்படவுள்ளது. இதன்படி பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மே மாதம் 15 ஆம் திகதி வரையும், 65 உள்ளூராட்சி மன்றங்கள் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையும் 21 மன்றங்கள் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரையும் நீடிக்கப்பட்டுள் ளன.




