உள்ளூராட்சி தேர்தலும் இடைக்கால அறிக்கையும்
ருத்திரன்-
தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கிய எந்தவொரு தேர்தலும் பதவியை மையப்படுத்தியதாகவோ அல்லது அபிவிருத்தி, உட்கட்டுமானங்கள், சபைகளுக்கு என்று குறித்தொதுக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துதல் என்பதற்கும் அப்பால் தேசிய இனப்பிரச்சனையை மையமாகக் கொண்டு அதற்கான தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்டே அமைந்துள்ளது. தமிழ் தேசிய இனத்தின் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் ஜனநாயக வழியில் அதற்கான குரல் பல்வேறு அச்சுறுத்தல்களையும், அதிகார பல பிரயோகங்களையும் மீறி தேர்தல் அரங்குகளில் எதிரொலித்து வருகிறது. இத்தகைய பின்னனியில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் இரண்டாவது முறையாக நடைபெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தலான தமிழ் தேசிய இனத்திற்கு மிகவும் முக்கியமான தேர்தலாக பலராலும் சித்தரிக்கப்படுகின்றது.
சர்வதேச சமூகங்களின் அழுத்தத்திற்கு அமையவும், ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால நீதி பொறிமுறைகளுக்கு அமையவும் நான்காவது விடயமாக குறிக்கப்பட்டுள்ள மீள்நிகழாமையை உறுதி செய்யும் பொருட்டு ஒரு புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டின் ஏனைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுடன் இனப்பிரச்சனைக்கும் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் இணங்கியிருந்தது. இந்த பின்னனியில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் முழு பாராளுமன்றமும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அந்த அரசியல் நிர்ணய சபையை வழிநடத்துவதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டு இருந்தது. இந்தக் குழு 73 முறை கூடி ஆராய்ந்து தங்களுக்குள் இணக்கம் காணப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி, கட்சிகளின் கருத்துக்களை பின்னிணைப்பாக இணைத்து கடந்த வருடத்தின் இறுதிக்காலாண்டுப் பகுதியில் பாராளுமன்றத்திற்கு கையளித்து அதன் மீது விவாதங்களும் நடந்திருந்திருந்தது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நாள் முதல் பல்வேறு தரப்பினராலும் அதன் சாதக பாதங்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இருந்தது.
தமிழ் மக்கள் பேரவையும் இடைக்கால அறிக்கையும்
2015 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் அதாவது தற்போதைய மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் உருவானதைத் தொடர்ந்து அதுவரையில் தமிழ் தரப்பினரால் உயர்த்திப் பிடிக்கப்பட்டு வந்த இறுதி யுத்தத்தின் போதான யுத்தக்குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம் என்று வலியுறுத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் இருந்து பின்வாங்குகிறதோ என்ற சந்தேகத்தின் பேரில் தமிழ் தலைமைகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களையும், அபிலாசைகளையும் எடுத்துச் சொல்வதற்கான ஒரு மக்கள் இயக்கமாக பல்வேறு சிவில் அமைப்புக்களையும், சில அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. இதன் தோற்றத்தை வெளிப்படுத்தும் முகமாகவும், அதற்கு மக்கள் ஆதரவை திரட்டிக் கொள்வதை நோக்கமாக கொண்டும், தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் முகமாகவும் வடக்கிலும், கிழக்கிலுமாக எழுக தமிழ் என்ற கோசத்தை முன்வைத்து இரண்டு பேரணிகளை மக்கள் எழுச்சியுடன் நடத்தியிருந்தது. அதுமட்டுமன்றி, புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சனை தொடர்பில் உள்ளடக்கப்பட வேண்டிய தனது முன்மொழிவுகளையும் மக்களின் ஒப்புதலுடன் வழங்கியிருந்தது. தற்போது வெளிவந்துள்ள வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களையும், அபிலாசைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலோ அல்லது நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் நான்காவது அம்சமான மீள் நிகழாமைளைய உறுதிப்படுத்தும் வகையிலோ இந்த அறிக்கை அமையவில்லை என்று தமிழ் மக்கள் பேரவை பல்வேறு விளக்கங்களை முன்வைத்து தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தது.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரும், வடக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் நீதியரசருமான சீ.வி.விக்கினேஸ்வேரன் தனிப்பட்ட ரீதியில் இந்த இடைக்கால அறிக்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் அமையவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழ் தேசிய இனத்தின் மத்தியில் இந்த அறிக்கை ஒரு பேசுபொருளாக மாறியிருக்கும் ஒரு சூழலில், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டும் வகையில் இடைக்கால அறிக்கை தொடர்பில் ‘இடைக்கால அறிக்கை மாயைகளை கட்டுடைத்தல்’ என்னும் தொனிப்பொருளில் தானே தலைமையேற்று சர்வதேச சட்ட வல்லுனர் ஒருவரையும், உள்நாட்டு சட்டத்துறை பேராசிரியர் ஒருவரையும் வைத்து விளக்கமளித்துள்ளதுடன், அவர்களின் உரையை தொகுத்து தொகுப்புரையும் வழங்கியிருந்ததுடன், தற்போது இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களுடன் அதனை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் தொடாபிலும் கருத்துரை வழங்கியிருந்தார். இதன் போது மக்களது சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் தெளிவான பதில்களும் வழங்கப்பட்டிருந்தது.
அவர் கூறியதில் மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாக அரசின் ஆட்சிமுறை குறித்த விளக்கம் அமைந்திருந்தது. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரபரவலாக்கல் என்பது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்று அவர் திட்டவட்டமக தெரிவித்திருந்தார். இந்த இடைக்கால அறிக்கையில் ஆட்சி முறையைப் பொறுத்த வரையில் அது ஒற்றையாட்சியையே குறிக்கின்றது என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். வளவாளர்களாக பங்கேற்று இருந்தவர்களும் அதனையே வலியுறுத்தியிருந்தனர். இவை அனைத்தும் அரசியல் மேடைப்பேச்சாக அன்றி சட்ட ரீதியான விளக்கங்களாக அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இடைக்கால அறிக்கையும்
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் உபகுழுக்களிலும், வழிநடத்தல் குழுவிலும் அங்கம் வகித்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகித்திருந்தது. புதிய அரசியல் யாப்பானது பிரதான மூன்று விடயங்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலாவதாக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்திற்பகான அதிகாரத்தை அதிகரித்தல், இரண்டாவதாக தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல், மூன்றாவதாக தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல். இதில் முதல் இரண்டு விடயங்களும் பெருமளவில் புதிய அரசியல் யாப்பிற்கு முன்னதாகவே பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தற்போதைய அரசியல் யாப்பு திருத்தங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த நிலையில் புதிய அரசியல் யாப்பானது மேற்சொன்ன இரண்டு விடயங்களில் விட்டு போன சிலவற்றையும், அரசியல் தீர்வுக்காகவும் உருவாக்கப்படவுள்ளது. தமிழ் தேசிய இனத்தின் இனப்பிரச்சனை தொடர்பான தீர்வை முன்வைத்து தற்போது ஒரு இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கை இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அங்கம் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வழிநடத்தல் குழுவின் அறிக்கை 73 முறை கூடி விவாதித்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
தேசிய இனப்பிரச்சனை தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் சார்பாக வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2 பேரும், ஈபிடிபி சார்பில் ஒருவரும் அங்கம் வகித்திருந்தனர். ஏனையவர்கள் அனைவரும் தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயற்படக் கூடியவர்கள். அல்லது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளின் மீது அதிக கரிசனை கொள்ளாதவர்கள். அல்லது அக்கறை இல்லாதவர்கள். அல்லது இதுவரை காலமும் அந்த தேசிய இனத்தின் மீது தங்களது ஆளுமையை செலுத்தி அடக்குமுறைகளை மேற்கொண்டவர்கள்.
இந்த நிலையில் வழிநடத்தல் குழுவில் விவாதிப்பதற்கு முன்னதாக அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு அதில் இணக்கம் காணப்படுகின்ற விடயங்களை வழிநடத்தல் குழுவில் விவாதித்து அவர்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்று ஈபிஆர்எல்எப் கூட்டமைப்பின் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த வேண்டுகோள் ஏற்கப்படாமலேயே தற்போது இடைக்கால அறிக்கையும் வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கையில் பௌத்தத்திற்கு முதலிடம், ஒற்றையாட்சி முறையின் கீழ் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை என தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் கூறிவருவதுடன், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணங்கிவிட்டதாகவும் தெரிவித்து வருகின்றன. ஆனால் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த இடைகால அறிக்கையில் சமஸ்டி ஒழிந்திருப்பதாகவும், இதனை இன்னும் முன்னகர்த்தி செல்வதற்கு இந்த இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது. அதற்கான ஒரு ஆணையாகவே இந்த உள்ளூராட்சி தேர்தலையும் அது பயன்படுத்தி வருகின்றது. எந்தவொரு தீர்வும் ஒழித்து வைத்தோ, மறைத்து வைத்தோ இன்னும்மொரு தரப்பிற்கு தெரியாமலோ அல்லது நாட்டின் ஒரு பகுதி மக்களின் கண்களை கட்டிவிட்டோ வழங்க முடியாது. அவ்வாறு பெறப்படுகின்ற தீர்வுகள் உண்மையான தீர்வாகவும் அமையாது. இதற்கு அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வை உதாரணமாக காட்ட முடியும். ஜனாதிபதி பதியேற்றுக் கொண்ட போது அவரது ஆட்சிகாலம் ஆறுவருடமாக இருந்தது. அவர் பதவியேற்ற பின்னர் உருவாக்கப்பட்ட 19 வது திருத்தச் சட்டம் மூலம் அது 5 ஆண்டாக குறைக்கப்பட்டது. இந்த திருத்தில் கூட அமுலாக்கல் திகதி தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் ஜனாதிபதி தனது பதவிக்காலம் குறித்து நீதிமன்றத்தை நாடியிருந்தார். தெளிவான விடயத்திற்கே நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் இருக்கையில் ஒரளவு மறைவான விடயம் எப்படி நிரந்தர தீர்வாக அமைய முடியும். யதார்த்தம் இவ்வாறு இருக்கையில் சமஸ்டி ஒழிந்திருக்கிறது என்று சொல்லி தமிழரசுக் கட்சி மக்களின் ஆணையை கேட்பது என்பது எந்தளவிற்கு சரியானது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியும், ஈபி.ஆர்.எல்.எப்பும்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியும், சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சியும் இடைக்கால அறிக்கை வெளிவந்ததில் இருந்தே அது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்ததாக அதில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வுத் திட்டம் இல்லை என்பதை வலியுறுத்தி வருகிறது. தற்போதைய உள்ளூராட்சி தேர்தலில் கூட அதனை நிரகரிப்பதாக தெரிவித்தே பிரச்சாரங்களையும் முன்னெடுத்துள்ளது.
இந்த தேர்தலானது தமிழ் தலைமைகளால் இடைக்கால அறிக்கைக்கான அங்கீகாரமாகவும், ஏனைய தமிழ் தரப்பால் அதனை நிராகரிப்பதற்கான அங்கீகாரமாகவும் நோக்கப்படுகையில், மக்கள் எத்தகைய முடிவை எடுக்கப்போகின்றார்கள் என்பதே தற்போது உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.
N5




