செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல்: கட்டுப்பணம் ஏற்பதை மறுக்கும் கடிதம் வாபஸ்!

உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்பதை இடைநிறுத்துமாறு கோரி பொதுநிருவாக மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் தீர்மனத்திற்கமைய நேற்று மாலை குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை முன்வைத்த நிலையில் அந்தக் கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்தார்.

இதேவேளை அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் அனைத்து மாவட்ட பிரதி/ உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சி செயலாளர்கள் இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பு தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள PAFRAL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
-(3)