ஊடகவியலாளர் மீதான குற்றங்களில் சம்பந்தப்பட்டோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: சம்பந்தன்
“கடந்த அரசாங்கங்கள் ஊடகவியலாளர்களுக்கு எதிரான பல்வேறு துன்புறுத்தல்கள் வன்முறைகள் கொலைகள் போன்ற பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்ற போதும் அவற்றை குறித்து பாராமுகமாக இருந்தார்கள் என்பது இரகசியமல்ல. இந்த சம்பவங்கள் குறித்து சரியான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவருமாறு தற்போதைய அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“உலகளாவிய ரீதியில் ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதிகரித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், இலங்கையில் உள்ள ஊடகங்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்
நூற்றியென்பது நாடுகளை கொண்ட ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை நூற்றிநாற்பத்தியொராவது இடத்தை பிடித்திருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
கடந்த அரசாங்கங்கள் ஊடகவியலாளர்களுக்கு எதிரான பல்வேறு துன்புறுத்தல்கள் வன்முறைகள் கொலைகள் போன்ற பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்ற போதும் அவற்றை குறித்து பாராமுகமாக இருந்தார்கள் என்பது இரகசியமல்ல. இந்த சம்பவங்கள் குறித்து சரியான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவருமாறு தற்போதைய அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.
அதேவேளை, இப்படியான அடக்கு முறைகள் காணப்பட்ட போதும், தமது கடமையை துணிச்சலாக முன்னெடுத்துவரும் ஒவ்வொரு ஊடகவியலாளர்களையும் நான் பாராட்ட விரும்புகிறேன். தொடர்ந்தும் மக்களண்டைக்கு உண்மையை எடுத்து செல்லும் பாரிய பணியை செய்யும் நீங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியோடு இன்னும் சிறப்பாக துணிவாக உங்கள் பணியை செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.”
R-06




