ஊடக பிரதானிகள் தமது ஊழியர்களுக்கு சுதந்திரத்தை வழங்க வேண்டும் : ஜனாதிபதி
ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மூலமே அதிகமான ஊடகவியலாளர்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் அந்த பிரதானிகளின் நோக்கங்கள் , எண்ணங்களின்படியே ஊடகவியலாளர்கள் செயற்படுவதாகவும் இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் சர்வதேச தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மகாநாடு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது. இதன்போது அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மேலும் அங்கு உரையாற்றுகையில் ,
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தும் செயற்பாடுகளை மிகவும் ஆக்கபூர்வமானதாகவும் கூடிய பயனுள்ளதாகவும் மேற்கொள்ள வழிவகை செய்வதறகு இந்த மாநாடு பெரிதும் உதவும். தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்தும் போது எதிர்நோக்கவேண்டிய சவால்களை வெற்றிகொள்வதற்கு இதில் கலந்துகொள்ளும் தெற்காசிய நாடுகளின் அனுபவங்கள் நாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
அரசாங்க துறையிலுள்ள பெரும்பாலான அதிகாரிகள் ஊழியர்கள் தமக்குள்ள பொறுப்பிலும் பார்க்க ஏனைய விடயங்களிலேயே கூடுதலான அக்கறை கொண்டுள்ளனர். இவ்வாறான நிலை சமீபகாலமாக காணக்கூடியதாக உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றினால் பொதுமக்களுக்கு உரியமுறையில் நன்மை அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். -(3)




