ஊழல்மிக்க ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்தது குற்றமா? மே தினக் கூட்டத்தில் ரணில் கேள்வி
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்ப்பு என்ற தொனிப்பொருளில் பொது எதிரணியின் மே தின கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி என்ன குற்றம் இழைத்தது.? ஊழல்மிக்க ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்தது குற்றமா? நாட்டின் நலனுக்கு ஆட்சி மாற்றத்திற்கு வழி சமைத்தோம். வெறுமனே கார்ட் போர்ட் துட்டகைமுனு கும்பல் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்ப்பதற்கு முன்பு மக்களுக்கு செய்த துரோகத்தை நினைத்து பார்க்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி யின் மாபெரும் மே தின பொதுக் கூட்டம் நேற்று பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்,
“தற்போது நாட்டு மக்கள் புதிதாக சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். சர்வதேசத்துடன் போட்டி போட்டு வெற்றி பெறுவதற்கு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும். அதன்போது முதலீடுகள் எம்மை நோக்கி திரண்டு வரும். நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். மே தின கூட்டத்திற்கு வந்திருக்கும் சனத்தொகையை பார்த்தால் ஐந்து இலட்சம் பேர் நுழையும் மைதானத்தை முதலில் நிர்மாணிக்க வேண்டும். துறைமுக நகர் திட்டத்தை ஆரம்பிக்க முதல் இதனை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்ப்பு என்ற தொனிப்பொருளில் பொது எதிரணியின் மே தின கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி என்ன குற்றம் இழைத்தது.? ஊழல்மிக்க ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்தது குற்றமா? நாட்டின் நலனுக்கு ஆட்சி மாற்றத்திற்கு வழி சமைத்தோம். வெறுமனே கார்ட் போர்ட் துட்டகைமுனு கும்பல் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்ப்பதற்கு முன்பு மக்களுக்கு செய்த துரோகத்தை நினைத்து பார்க்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி நல்லிணக்கத்திற்கான கட்சியாகும். மக்களின் பணத்தை கொள்ளையிட்டு நாட்டை ஏமாற்றிய கார்ட் போர்ட் துட்டகைமுனு கும்பலுக்கு எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சி இல்லாமல் செய்வதற்கு இடமளிக்க போவதில்லை.
நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரித்தால் ராஜபக்ஷவினருக்கு மனதில் பயமும் வெறுப்பும் ஏற்படும். உலக மகா திருடர் உதயங்க வீரதுங்கவை சந்தித்து கை கோர்த்து கதைக்கும் கார்ட் போர்ட் துட்டகைமுனு எதிரணியினர் விசேட நிதி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அத்துடன் எந்தவொரு கார்ட் போர்ட் துட்டகைமுனுக்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் செய்வதற்கு இடமளிக்க போவதில்லை.
அடுத்த தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவதா? அல்லது நாட்டை கட்டியெழுப்புவதா? என்பதனை மக்களே முடிவு செய்யவேண்டும். அத்துடன் கொழும்பு பேலியகொடையிலிருந்து கடல் மார்க்கமாக கோட்டைக்கு அதிவேக பாதையை நிர்மாணிக்கவுள்ளோம். இது போன்று பல நகரங்களை அபிவிருத்தி செய்யவுள்ளோம். மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகத்திற்கு விமானங்களையும் கப்பல்களையும் கொண்டு வருவோம். துறைமுக நகர் திட்டத்தை நாணய கேந்திர நிலையமாக மாற்றுவோம்.
எனவே நாட்டை கட்டியெழுப்பும் தேசிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். இதுபோன்று பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்போம். அர்ப்பணித்த மக்களுக்கு அடுத்து வரும் காலங்களில் சேவை செய்வதற்கு தயாராக உள்ளோம் என்றார்.
R-06




